வேடர் கண்ணப்பர்

வேடர் கண்ணப்பர்

முன்னொருகாலத்திலே தென்இந்தியாவில் பொத்தப்பி என்னும் ஒரு மலைப்பிரதேசம் இருந்தது. இது வானை முட்டும்படி உயர்ந்த காட்டுமரங்களும குன்றுகளும் நிறைந்த மலைப்பிரதேசமாகும். அதன் மத்தியில் உடுப்பூர் என்னும் சிறு கிராமம் இருந்தது.

அக்கிராமத்திலே வேடர்கள் கூட்டமாகத் தமது குடும்பங்களுடன் வாழ்ந்து வந்தார்கள். வேடர்களின் தலைவன் பெயர் நாகன். அவனது மனைவி தத்தை. நெடுங்காலமாகப் பிள்ளையின்றி மனம் வருந்திய அவர்கள் முருகப்பெருமானை வழிபட்டார்கள்.

வண்ணமயிலேறும் முருகப்பெருமான் அருளாலே அவர்களுக்கு ஓர் அழகிய ஆண்குழந்தை பிறந்தது. அக்குழந்தை பிறக்கும்போதே கனமாக இருந்ததால் திண்ணன்(பாரமானவன் என்று அர்த்தம்.) என்னும் பெயர்சூட்டி அன்புடன் வளர்த்து வந்தார்கள்.

திண்ணனார் வேட்டைக்குரிய சகல கலைகளையும் நன்கு கற்று வளர்ந்தார். வில், வாள், வேல், கத்தி முதலிய ஆயுதங்களைத் திறமையாகக் கற்றுத்தேர்ந்தார்.

அவரது தந்தை நாகனுக்கு வயது முதிர்ந்தபடியால் அவனால் முன்போல் வேட்டையாடச் செல்ல முடியவில்லை. ஆதனால் அவன் பதினாறு வயதுப் பிராயத்தை அடைந்து விட்ட தனது மகன் திண்ணனாரையே வேடர்களுக்குத் தலைவனாக்க விரும்பினான். வேடர்களின் மதகுருவான தேவராட்டியை அழைத்து ஆலோசனை செய்தான். தேவராட்டியின் ஆசீர்வாதத்துடன் திண்ணனாருக்குத் தலைமைப்பதவியை வழங்கினான்.

மறுநாட்காலை திண்ணனார் தமது முதல் வேட்டைக்குப் புறப்பட்டார். வேட்டைக்குரிய புலித்தோல் ஆடைகளையும் வாள், அம்பு, வில், அம்புக்கூடு முதலிய ஆயுதங்களையும் அணிந்து கொண்டார்.

முதல் வேட்டையைக் கன்னி வேட்டை என்று அழைப்பார்கள். புதிய தலைவர் கன்னி வேட்டைக்குப் புறப்படுவது பெரும் விழாவாக வேடர்களினால் கொண்டாடப்பட்டது. பல வண்ண ஆடைகளை அணிந்த வேடர்களும் வேடர்குலப் பெண்களும; தமது பாரம்பரிய இசைக்கருவிகளை இசைத்து மகிழ்ச்சியுடன் பாடி ஆடி விருந்துண்டார்கள். பின்னர் திண்ணனார் தமது நெருங்கிய தோழர்களான நாணன், காடன் மற்றும் ஏராளமான வேடர்குலத்து இளைஞர்களுடன் வேட்டைக்குப் புறப்பட்டார். வேட்டை நாய்களும் அவர்களுடன் வேகமாக ஓடின.

வேடர்கள் அடர்ந்த காட்டினுள் நுழைந்து பலவகைப்பட்ட மிருகங்களை வேட்டையாடினார்கள். மான், முயல், மரை, காட்டுப்பன்றி முதலிய விலங்குகளை உணவுக்காகக் கொன்றார்கள். மக்களுக்குத் தீங்குசெய்யும் புலி, சிறுத்தை, நரி, ஓநாய் முதலிய கொடிய மிருகங்களையும் கொன்று குவித்தார்கள். இவ்வாறு அவர்கள் வேட்டையாடும்போது கொழுத்த காட்டுப்பன்றியொன்று அவர்களின் வலைகளை அறுத்துக் கொண்டு வேகமாக ஓடியது. திண்ணனாரும, நாணன, காடன் ஆகிய இரு தோழர்களும் அந்தப்பன்றியைத் துரத்திக் கொண்டு ஓடினார்கள். மின்னல் வேகத்தில் நெடுந்தூரம் ஓடிய அந்தப்பன்றி மலையடிவாரத்திலுள்ள ஒரு சோலையை அடைந்து ஒரு மரத்தின் மறைவில் பதுங்கி நின்றது. நாணனும் காடனும் களைத்து நிற்க திண்ணனார் மட்டும் வீரத்துடன் அதனை நெருங்கிச் சென்று தமது வாளால் அதனை வெட்டி வீழ்த்தினார். அவனது வீரத்தைக்கண்டு நண்பர்கள் இருவரும் வியந்து பாராட்டினார்கள்.

பின்னர் அவர்கள் திண்ணனாரை நோக்கி “தலைவா… நாம் ஊரைவிட்டு நெடுந்தூரம் வந்து விட்டோம். மிகவும் களைப்பாகவும் பசியாகவும் இருக்கிறது. இப்பன்றியைச் சுட்டுத்தின்று பசியாறி தண்ணீரும் குடித்துவிட்டு ஊருக்குத் திரும்புவோம்” என்றார்கள். சரி அப்படியே செய்யலாம். ஆனால் இங்கே தண்ணீருக்கு எங்கே போவது? என்று கேட்டார் திண்ணனார்.

“அதோ தெரியும் உயர்ந்த தேக்குமரச்சோலையின் பின்னே பெரிய குன்று உள்ளது. அந்தக்குன்றின் அடிவாரத்தில் பொன்முகலி ஆறு ஓடுகிறது. ” என்றான் காடன். “சரி அங்கே போகலாம் பன்றியை எடுத்து வாருங்கள்…” என்று திண்ணனார் முன்னே நடக்க நாணனும் காடனும் பன்றியைச் சுமந்து கொண்டு அந்த ஆற்றங்கரையை நோக்கி நடந்தார்கள்.

பொன்முகலி ஆற்றங்கரையை அடைந்த அவர்கள் தீக்கடைக்கோலால் கடைந்து நெருப்பினை உண்டாக்கி பன்றியை வேகவைப்பதற்காக ஆயத்தங்களைச் செய்தார்கள்.

திண்ணனார் ஆற்றின் அருகே சலசலத்து ஓடிய பொன்முகலியாற்றின் அழகைப்பார்த்து ரசித்தார். அந்த ஆற்றங்கரையில் சற்றே தூரத்தில் பசுமையான மரங்கள் நிறைந்த அழகிய குன்று அவரது கண்ணில் தென்பட்டது. நாணா! அந்தக் குன்று அழகாக இருக்கின்றதே அருகில் சென்று பார்த்து வருவோமா?.. என்று ஆவலுடன் கேட்டார் திண்ணனார்.

“நல்லது தலைவா! …அந்தக்குன்றின் பெயர் திருக்காளத்தி மலை. அந்த மலையிலே குடுமித்தேவர் என்ற பெயருடன் சிவலிங்க உருவத்தில் சிவபெருமான் குடிகொண்டிருக்கிறார். வாருங்கள் போய் அவரை வணங்கி வழிபட்டு வருவோம்”. என்றான் நாணன.

திண்ணனார் மனத்திலே இனம்புரியாத ஓர் ஆவலும் பரவசமும் நிறைந்தது. அந்தக் குடுமித்தேவரை உடனே சென்று பார்க்க வேண்டும் என்ற பேராவல் உண்டானது. பன்றியை வேகவைத்து பதப்படுத்தி வைக்கும்படி காடனுக்குக் கட்டளையிட்டுவிட்டு “நாணா குடுமித்தேவர் இருக்கும் இடத்திற்கு என்னை அழைத்தச் செல்” என்று ஆவலுடன் கூறினார் திண்ணனார்.

நாணன் முன்னே வழிகாட்டிச்செல்ல அவனைப்பின்தொடர்ந்து வேகமாக அந்தக்குன்றில் ஏறத்தொடங்கினார் அவர். திண்ணனார் மலையில் மேல் நோக்கி ஏறஏற அவரது உள்ளம் இறைவன் மேல் வைத்த அன்பினால் மேலும் மேலும் நிறைந்தது.

இந்த உலகத்தோடு அவருக்கிருந்த தொடர்புகள் யாவும் ஒவ்வொன்றாய் விலக அவர் ஒளிமயமாய் அன்பே உருவங்கொண்டு வந்தது போல் விளங்கினார். நாணன் முன்னே செல்ல அவன் பின்னே திண்ணனாரின் அன்பு முன்னே வழிநடத்த திண்ணனார் விரைவாக மலையில் ஏறினார். மலையுச்சியில் சிவலிங்க வடிவில் நின்ற குடுமித் தேவரான சிவபெருமானைக் கண்டதும் திண்ணனார் தம்மை மறந்தார். தன்பக்கத்தில் நின்ற நண்பன் நாணனை மறந்தார்.

இந்த உலகத்தையே மறந்துவிட்டார். இறைவனைக்கண்டுவிட்ட ஆனந்தத்துடன் சிவலிங்கத்தைக் கட்டித் தழுவினார். ஆடிப்பாடினார். அப்போது திடீரென அவர் உள்ளத்தில் மற்றொரு கவலை உண்டானது. யானை சிறுத்தைஇ புலிஇ ஓநாய; நரி முதலிய கொடிய விலங்குகள் வாழும் இந்தக்காட்டில் இறைவன் தன்னந்தனியாக இருக்கின்றாரே.. இவருக்கு என்ன ஆபத்து வருமோ?.. என்று கவலையுற்றார்.

“நாணா இவர் ஏதும் சாப்பிட்டதாகத் தெரியவில்லையே!.. இறைவன் பசியாயிருப்பாரோ?.. வா.. நாம் உடனே போய்க் குடுமித்தேவருக்கு இறைச்சி கொண்டு வருவோம்”. என்று கூறிப் புறப்பட்டார் திண்ணனார்.

இறைவனைப் பிரிய மனமில்லாதவராகத் தயங்கித் தயங்கிப் புறப்பட்டு மலையடிவாரத்திற்கு இறங்கி வந்தார். அங்கே காடன் பன்றியைத் துண்டுகளாக வெட்டி நெருப்பிலே வேகவைத்து உண்பதற்குரிய முறையில் தயாராக வைத்திருந்தான். ஒரு கணம் கூட வீணாக்காமல் திண்ணனார் அந்த இறைச்சித்துண்டுகளை அம்பின் கூரான முனையிற் குத்தி எடுத்து நெருப்பிலே காட்டி மேலும் வேகவைத்தார்.

பின்னர் அத்துண்டுகளைக் கடித்துப் பார்த்து மென்மையான சுவையான துண்டுகளை மட்டும் தேக்குமர இலைகளைக் கொண்டு செய்த கல்லையில் சேர்த்து வைத்தார். காட்டு மலர்களைப் பறித்துத் தமது தலைக்குடுமியில் செருகிக் கொண்டார்.

பொன்முகலியாற்றினுள் இறங்கி சுத்தமான நீரை வாய் நிறைய எடுத்துக் கொண்டார். ஒரு கையில் வில்லையும் மறுகையில் இறைச்சி நிறைந்த கல்லையையும் பிடித்தபடி வேகமாக மலையில் ஏறினார். இச்செய்கைகளைப் பார்த்துக்கொண்டிருந்த நாணனும் காடனும் மனம் வருந்தினார்கள். தங்கள் தலைவனுக்குப் பைத்தியம் பிடித்து விட்டது என்று நினைத்து அவரது தந்தையிடம் சொல்வதற்காக ஊருக்குப் புறப்பட்டார்கள்.

மலையில் ஏறிக் குடுமித்தேவர் இருக்கும் இடத்தையடைந்த திண்ணனார் இறைவன் பசியாய் இருப்பாரோ என்று கலங்கினார். சிவலிங்கத்தின் மேல் வைக்கப்பட்டிருந்த பூக்களையும் இலைகளையும் தமது காலில் அணிந்திருந்த செருப்பினால் நீக்கித் துடைத்தார். பின் வாயில் கொண்டு வந்திருந்த நீரைச் சிவலிங்கத்தின் உச்சியில் உமிழ்ந்தார். தலைக்குடுமியில் செருகியிருந்த பூக்களை எடுத்துச் சிவலிங்கத்தை அழகு செய்தார்.

பின்னர் தாம் தேக்கிலையில் கொண்டு வந்திருந்த இறைச்சியை அவர் முன் வைத்து “இறைவா நீர் பசியாயிருப்பீர் என்று இந்த வேக வைத்த இறைச்சியைக் கொண்டு வந்தேன்” சாப்பிடும்… என்று வேண்டினார்.

அங்கே ஒரு அதிசயம் நிகழ்ந்தது.

இலையில் வைத்திருந்த இறைச்சி முழுவதும் ஒரே நொடியில் மறைந்தது. ஆம் அன்பேயுருவான அந்தத் தொண்டரின் பக்தியில் திளைத்துவிட்ட சிவபெருமான் அந்த இறைச்சியுணவைப் பேருவகையுடன் ஏற்றுக் கொண்டார். இதைக்கண்டு திண்ணனார் பெரும் மகிழ்ச்சி அடைந்தார். அதேவேளை சூரியன் மறைந்துவிட மாலையாகி எங்கும் இருட்டுப்பரவத் தொடங்கியது. இரவில் இறைவனுக்குக்கொடிய மிருகங்களால் ஆபத்து வரலாம் என்று எண்ணிய திண்ணனார்.

ஒரு கையில் வில்லும் மறு கையில் வாளும் ஏந்தியவாறு குடுமித்தேவரின் முன்னும் பின்னும் பக்கவாட்டிலும் நடந்தவாறே இரவு முழுவதும் கண் விழித்துக் காவல் செய்தார். மறுநாட்காலை சூரியன் உதயமானது. குடுமித்தேவருக்கு உணவு கொண்டு வருவதற்காக திண்ணனார் மலையை விட்டுக் கீழே இறங்கினார்.

அவர் சென்ற பின்னர் சிவகோச்சியார் என்னும் ஓர் அந்தணர் அங்கே வந்தார். அவர் தினமும் காலையில் அங்கே வந்து திருக்காளத்தியப்பரான சிவபெருமானுக்கு சிவாகம விதிப்படி பூஜை செய்வது வழக்கம். வழக்கம் போல் பூஜை செய்ய அவர் சிவலிங்கத்தை நெருங்கிய போது சிவலிங்கத்தைச் சுற்றிலும் எலும்புகளும் வெந்த மீதி இறைச்சித்துண்டுகளும் சிந்திக்கிடப்பது கண்டு மனம் வருந்தினார். அவற்றையெல்லாம் நீக்கிச் சுத்தம் செய்து முறைப்படி பூஜை செய்துவிட்டு வீடு சென்றார்.

சிறிது நேரத்தில் அங்கே திரும்பி வந்த திண்ணனார் முன்புபோலவே வேகவைத்த இறைச்சியும்இ தண்ணீரும்இ மலர்களும்இ கொண்டு வந்திருந்தார். அந்தணர் வைத்திருந்த மலர்களையும்இ இலைகளையும் தமது செருப்பால் நீக்கிவிட்டு முன்போலவே நீரை உமிழ்ந்துஇ மலர்களால் அலங்கரித்துஇ இறைச்சியை உணவாக ஊட்டினார். பின்னர் இரவு முழுவதும் உறங்காமல் கண்விழித்து இறைவனுக்குக் காவல் செய்தார். இவ்வாறே ஐந்து நாட்கள் கழிந்தன.

சிவகோச்சியார் சிவபெருமான் மீது மட்டற்ற பக்தியும் அன்பும் கொண்டவர். தாம் தினமும் காலையில் செய்யும் பூஜை முதலியவற்றைக் கெடுத்து விட்டு யாரோ ஒரு கொடியவன் சிவபெருமான் சன்னிதியை அசுத்தப்படுத்தி இறைச்சி எலும்புகள் முதலியவற்றைப் போட்டு இறைவனை அவமானப்படுத்துவதை நினைத்து அவர் பெரிதும் மனம் வருந்தினார். அந்த மனவருத்தத்துடனே உறங்கச்சென்றார். அப்போது சிவபெருமான் அவரது கனவில் தோன்றினார். “அன்பனே! நீ கவலைப்பட வேண்டாம் தினமும் இறைச்சி முதலியவற்றைக்கொண்டு எனக்குப் பூஜை செய்பவன் வெறும் வேடனல்ல.

அவன் என்மேல் அளவற்ற அன்பு கொண்டவன். அவனது உடலும் உள்ளமும் என்மேல் கொண்ட அன்பினாலே நிறைந்துள்ளது…. அவன் தன் வாயில் அடக்கிக் கொண்டு வந்து என்மீது உமிழும் தண்ணீரானது கங்கை நதியை விடப் புனிதமானது. என்னைச் சுத்தப்படுத்துவதற்காக அவனது செருப்பணிந்த காடிகள் என்மீது படும்போது நான் என் செல்வமகன் முருகன் தனது சிறுகாலால் என்மீது உதைந்தபோது அடைந்ததைவிட அதிக ஆனந்தம் அடைகின்றேன். அவனது அன்புச் சொற்கள் வேதமந்திரங்களை விட அதிக சக்தி வாய்ந்தவை.… நாளைக்காலை உனது பூஜைகள் முடிந்த பின்னர் அவன் காணாதபடி ஒளிந்து நில். அவனது அன்பின் வலிமையை உனக்குக் காண்பிப்பேன்”. என்றுகூறி மறைந்தார்.

கண்விழித்த சிவகோச்சியார் பேராச்சரியம் அடைந்தார். இறைவன் சொன்ன அந்தச் சிவத்தொண்டரை உடனே பார்க்க வேண்டும் என்று அவரது மனதில் ஆவல் பெருகியது. ஆயினும் பொறுமையுடன் விழித்திருந்து காலை உதயமானதும் எழுந்து வழக்கம்போல் காளத்திமலைக்குச் சென்று சிவபெருமானுக்குரிய பூஜை முதலியவற்றை உரிய முறைப்படி செய்துவிட்டு இறைவன் கூறியதுபோல் யாரும் பார்க்கமுடியாதவாறு ஒளிந்து கொண்டார்.

திண்ணனார் தம்மீது வைத்திருந்த பேரன்பு இந்த உலகத்தினர் அனைவருக்கும் தெரியவேண்டும் என்று குடுமித்தேவரான சிவபெருமான் திருவுள்ளம் கொண்டார். ஆறாம் நாள் காலை வழக்கம் போல் திண்ணனார் இறைச்சி, பூ, தண்ணீர் முதலியவற்றுடன் வேகமாக மலையேறி வந்தார. இறைவன் பசியோடு இருப்பார். அவருக்கு உணவூட்டவேண்டும் என்பதே அவரது ஒரே எண்ணமாக இருந்தது.

வேகமாக அங்கே வந்து சிவலிங்கத்தை நெருங்கிய திண்ணனார் திகைத்து நின்றார். அங்கே அவர் கண்ட காட்சி அவரைக் கலங்கவும் நடுங்கவும் வைத்து விட்டன. குடுமித்தேவரான சிவலிங்கத்தின் வலது கண்ணிலிருந்து இரத்தம் ஆறாகப் பெருகிக் கொண்டிருந்தது. அந்தக் காட்சியைக் கண்டவுடன் உடல் பதற உள்ளம் பதைக்க குடுமித்தேவரின் அருகே ஓடோடி வந்த திண்ணனார் செய்வதறியாது மயங்கி வீழ்ந்தார்.

பின்னர் ஒருவாறு மனம் தேறி எழுந்து அருகே சென்றார். யாராவது கொடியவர்கள் குடுமித்தேவரைக் காயப்படுத்தியிருப்பார்களோ என்று எண்ணிக் கோபம் கொண்டார். வாளை உருவி வீராவேசத்துடன் நாலாபுறமும் ஓடிச் சென்று தேடினார். யாரையும் காணவில்லை. அன்புடன் மீண்டும் சிவலிங்கத்தைக் கட்டிக் கொண்டு அழுதார். ஐயனே! உமக்கு இந்தக் கொடுமையைச் செய்தவன் யார்? இப்போது நான் என்ன செய்வேன் என்று கூறி அழுதார். அருகே ஓடிச் சென்று பச்சை இலைகளைப் பறித்து வந்து அந்தக் கண்களில் அப்பினார். இரத்தப்பெருக்கு நிற்கவில்லை.

அப்போது “தசை நோயைத் தீர்க்கத் தசையே மருந்தாகும்”; என்று வேடர்கள் கூறும் பழமொழி ஒன்று அவரது நினைவில் வந்தது. சிறிதும் தாமதிக்காமல் கூர் மிக்க அம்பு ஒன்றினை எடுத்தார். அந்த அம்பினால் தமது வலது கண்ணைத் தோண்டி எடுத்துஇ அதை இறைவனின் வலது கண்ணில் வைத்து அப்பினார். என்ன ஆச்சரியம்!.. இரத்தப்பெருக்கு நின்றுவிட்டது. திண்ணனார் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார். இறைவனின் நோய் குணமாகி விட்ட மகிழ்ச்சியில்இ துள்ளிக்குதித்து ஆடினார். ஆனால் திண்ணனாருக்கு மற்றுமோர் சோதனை காத்திருந்தது. அவரை மேலும் சோதித்துப்பார்க்க இறைவன் விரும்பினார்.

அதன் விளைவாக சிவலிங்கத்தின் இடது கண்ணிலிருந்து இரத்தம் பெருக்கெடுத்து ஓடத்தொடங்கியது. அக்காட்சியைப்பார்த்து திண்ணனார் ஒருகணம் அதிர்ச்சி அடைந்தார். ஆனால் முன்போல் அவர் வருந்தி அழவில்லை. அந்த நோய்க்குரிய மருந்துதான் அவருக்குத் தெரிந்துவிட்டதே. இறைவனுக்குத் தமது இடது கண்ணையும்இ பிடுங்கி வைத்து விடுவதென்று தீர்மானித்தார். ஆனால் அதில் ஒரு சிறு பிரச்சினை இருந்தது. இருக்கும் இடது கண்ணையும் பிடுங்கி விட்டால் பார்வையற்றவராகி விடுவார். அவ்வாறாயின்இ பிடுங்கிய கண்ணைச்சரியாக இறைவனது இடது கண்ணில் பொருத்துவது எப்படி?. ஒரு கணம் யோசித்த திண்ணனார் அதற்கு ஒரு வழி கண்டு பிடித்தார்.

தமது இடது காலைத்தூக்கி பாதத்தைச் சிவலிங்கத்தின் இடது கண்ணின் பக்கத்தில் அடையாளத்திற்காக வைத்துக் கொண்டார். பின்னர் கூர்மையான அம்பை எடுத்து தமது இடது கண்ணைத் தோண்டத் தொடங்கினார். மனம் பதைபதைக்க வைக்கும் இந்தக் காட்சியைஇ ஒளிந்திருந்து பார்த்துக்கொண்டிருந்த அந்தணரான சிவகோச்சரியாரின் உள்ளம் நடுங்கியது. உடல் சிலிர்த்தது. சிவ சிவா சிவ சிவா…” என்று உச்சரித்தபடியே தமது கைகளைக் குவித்துக் கொண்டார். கருணையே வடிவமான சிவபெருமானும் அந்தப் பேரன்புச்செயலைக் கண்டு மனம் நெகிழ்ந்தார். மறுகணம்… சிவலிங்கத்தினுள்ளிருந்து தமது திருக்கரத்தை வெளியே நீட்டினார்…. திண்ணனாரின் ஓங்கிய கரத்தைச் சிவபெருமானின் திருக்கரம் சட்டெனப்பிடித்துக்கொண்டது.

நில்லு கண்ணப்பா!…..நில்லு கண்ணப்பா!…. என் அன்புத் தொண்டனே நில்லு கண்ணப்பா!… என்று இடிமுழக்கம் போன்ற குரலில் கருணையே உருவான சிவபெருமான் திருவாய் மலர்ந்து அருளினார். காணக்கிடைக்காத இந்த அரிய திருக்காட்சியைக் கண்டதும்இ சிவகோச்சியாரின் உடல் சிலிர்த்தது. “ஓம் நமச்சிவாய…”என்று உள்ளம் உருக உச்சரித்தபடியே தமது இருகரங்களையும் தலைக்குமேலே குவித்து இறைவனையும் அவரது அன்புத் தொண்டரையும் வழிபட்டார்.

வானத்திலிருந்த தேவர்கள் பூமழை பொழிந்தனர். சிவகணங்கள் விண்ணிலிருந்து கரகர சிவ சிவ என்று துதித்தனர். “கண்ணப்பா.. உனது அன்பைக்கண்டு மனம் நெகிழ்ந்தோம்… இனி என்றென்றும் என் காவலனாக என் வலது பக்கத்தில் நிற்பாயாக..” என்று சிவபெருமான் அன்போடு கூறி கண்ணப்ப நாயனாராகிவிட்ட திண்ணனாரைத் தம்முடனே சேர்த்துக் கொண்டார். அன்றுமுதல் திண்ணனார் கண்ணப்ப நாயனார் என்று அழைக்கப்பட்டார்.

சிவத்தொண்டர்கள் யாரும் செய்யமுடியாத முறையில் மிகக் கடுமையான முறைகளில் தமது அன்பை வெளிப்படுத்தி ஆறே நாட்களில் சிவபெருமானின் திருப்பாத கமலங்களை அடைந்தவர் கண்ணப்ப நாயனார்.

இவரது அரிய தொண்டைப் பல புலவர்கள் போற்றிப் பாடியுள்ளார்கள். நமது இந்து சமயத்தில் அசுத்தமானவை அசிங்கமானவை எனக் கருதப்படும் வழிமுறைகளை அன்று கண்ணப்பர் அன்புடன் கையாண்டு இறைவன் திருவருளைப் பெற்றார். பிறப்பால் வேடராகவும் கல்வியறிவு அற்றவராகவும் இருந்த போதிலும் அவரது உடல் உள்ளம் முழுவதும் சிவபெருமான் மீது கொண்ட தூய அன்பினால் நிறைந்திருந்தது. இதுவே இறைவன் அருள் அவருக்கு விரைவிலே கிடைத்ததுக்குக் காரணமாகும்.

குறிப்பு: கண்ணப்ப நாயனார் சிவபெருமானை வழிபட்ட இடம் இன்றும் திருக்காளத்தி என்னும் பெயருடனே விளங்குகின்றது. நாள் தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தரகள் வந்து வழிபடும் இத்திருத்தலம் காக்கும் கடவுளான விஷ்ணுபகவானின் புகழ்பரப்பும் திருப்பதி திருத்தலத்திற்கு அண்மையில் அமைந்துள்ளது.

Leave a Comment