நாம் வணங்கும் தெய்வங்கள்

முருகப்பெருமான்

முருகப்பெருமான் தமிழ்க்கடவுள். உலகில் எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கின்றார்களோ, அங்கெல்லாம் முருகப்பெருமானை வணங்குவதற்கான திருக்கோவில்கள் அமைந்திருப்பதைக் காணலாம்.

இன்று நேற்றல்ல, தமிழர் நாகரிகத்தின் ஆரம்ப காலம் என்று கருதப்படும் சிந்துவெளி நாகரிக காலத்திலேயே முருகக் கடவுளை ஆதிகாலத் தமிழ் மக்கள் வழிபட்டதைக் குறிப்பிடும் இலச்சினைகள் கிடைத்திருக்கின்றன.

சங்ககால இலக்கியங்களிலும் முருகப்பெருமான் செவ்வேள் என்ற பெயரில் போற்றப்படுகின்றார்.

முருகக் கடவுள் வழிபாடு இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, கனடா முதலிய ஏராளமான நாடுகளில் மிகச் சிறப்பாக நிலவி வருகின்றது. மேற்கூறிய நாடுகளிலெல்லாம் முருகப்பெருமானைச் சிறப்பிக்கும் அழகிய திருக்கோயில்கள் அமைந்திருக்கின்றன.

ஆதி சங்கரர் பகுத்தருளிய ஆறு சமயங்களுள் (சௌரம், சைவம், சாத்தேயம், வைணவம், காணபத்தியம், கௌமாரம் ஆகியன) கௌமாரம் என்று அழைக்கப்படும் முருகன் வழிபாடு ஆறாவதாக விளங்குகிறது. வாரத்தின் ஆறாவது நாளான வெள்ளிக்கிழமை முருக வழிபாட்டுக்குச் சிறப்புடையதாக விளங்குகின்றது. இந்த விபரங்களை உள்ளடக்கும் அட்டவணை ஒன்றைக் கீழே தருகின்றோம்.

கிழமை கடவுள்சமயவகை
1 . ஞாயிற்றுக்கிழமைசூரியன்சௌர சமயம்
2 . திங்கட்கிழமைசிவபெருமான்சைவ சமயம்
3 . செவ்வாய்க் கிழமைசக்திசாத்தேய சமயம்
4 . புதன் கிழமைவிஷ்ணுவைணவ சமயம்
5 . வியாழக் கிழமைவிநாயகர்காணாபத்திய சமயம்
6 . வெள்ளிக்கிழமைமுருகன்கௌமார சமயம்
7 . சனிக்கிழமைகுருசமயாதீதம்

(ஆறுசமய வழிபாடு பற்றிய விளக்கமான கட்டுரை விரைவில் எமது இணையதளத்தில் வெளிவரும்.)

முருகப்பெருமானை அவரது பக்தர்கள் பல பெயர்களில் அன்புடன் அழைத்து வழிபட்டு வருகின்றார்கள். அவ்வாறான பெயர்களில் சிலவற்றைக் கீழே காணலாம்.

குமரன் – என்றும் இளமையானவர் என்பதால் இப்பெயர்.
முருகன் – அழகேயுருவானவர்.
தகப்பன் சாமி – தந்தைக்கே உபதேசம் செய்தவர்
சுவாமி நாதன் – தந்தைக்கே உபதேசம் செய்தவர் 
சரவணன் – சரவணப் பொய்கையில் வளர்ந்தவன்
கார்த்திகேயன் – கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்படவர்
காங்கேயன் – சிவபெருமானின் தீப்பொறிகள் கங்கையில் சேர்ந்ததால் உருவானவர்
கந்தன் – ஆறு திருவுருவங்களையும் உமாதேவியார் தனது அன்பு அணைப்பினால் ஓர் உருவமாக்கியதால் உண்டான பெயர்
செவ்வேள் – சிவந்த உடலை உடையவர்.
குகன் – மலைக் குகைகளில் கோயில் கொண்டிருப்பவர் 
விசாகன் – விசாக நட்சத்திரத்தில் ஒளியுருவாகத் தோன்றியவர் 
வேலன் – ஞான வேலாயுதத்தை உடையவர் 
சுப்பிரமணியன் – தேவர்கள், மனிதர்கள் மற்றும் அசுரர்கள் என அனைவராலும் வணங்கப்படுபவர்
ஸ்கந்தன் – சோமாஸ்கந்த மூர்த்தத்தில் பாலகனாக அமர்ந்திருப்பவர்

முருகப்பெருமான் ஆறு திருமுகங்களை உடையவர். அவரது படைவீடுகள் ஆறு; சரவணபவ என்னும் முருக மந்திரத்தின் எழுத்துக்கள் ஆறு; ஆதாரங்கள் ஆறு; சாத்திரங்கள் ஆறு; அகச் சமயம் ஆறு; புறச் சமயம் ஆறு; திசைகள் ஆறு என்று முருகப்பெருமானின் வழிபாட்டில் ஆறு என்ற எண்ணிக்கை சிறப்பம்சம் பெறுகின்றது.

முருகப்பெருமானின் திருமுகங்கள் ஆறு என்று படித்தோம். அந்த ஆறு திருமுகங்களிலும் உள்ள திரு விழிகள் பதினெட்டு. (ஆம், தந்தையான சிவபெருமானைப்போலவே, மைந்தன் முருகனுக்கும் நெற்றிக்கண் உண்டு). சிவபெருமானுக்கு ஐந்து முகங்கள் உண்டு. அவை: ஈசானம், தத்புருடம், அகோரம், வாமதேவம், சத்தியோசாதம் என்பன. இவற்றுடன் அன்னை பராசக்தியின் திருமுகம் ஒன்றும் சேர்ந்தே முருகக் கடவுளின் ஆறு முகங்கள் உருவாகியுள்ளன.

திருமுருகனின் கரங்கள் பன்னிரண்டு. அவற்றில் பலவிதமான ஆயுதங்களை அவர் ஏந்தியுள்ளார். அவற்றில் அன்னை பராசக்தி அவருக்கு அளித்த ஞான வேல் என்ற ஆயுதம் மிகச் சிறப்புடையது. மனிதர்களின் மனத்தில் உள்ள ஆணவம் என்ற மலத்தை அழித்து, ஞானத்தை அளித்துப் பரம்பொருளுடன் இணைய வைக்கும் சிறப்புடையது இந்த ஞானவேல்.

முருகப்பெருமானின் துணைவியர் இருவர். வள்ளியம்மை, தேவயானையம்மை ஆகியோர் அவர்கள். உண்மையில், ஞானமே உருவமாக விளங்கும் முருகப்பெருமானுக்குத் துணையாக, இச்சாசக்தி, கிரியா சக்தி ஆகிய இரு சக்திகளும் என்றும் துணையாக நிற்பதையே இது விளக்குகின்றது.

முருகப்பெருமானின் திருவடிகள் இரண்டு. வேதம், ஆகமம் என்னும் இரண்டுமே அவை.

அவரது வாகனங்கள் மூன்று: தாமத குணமாகிய மயில், இராசத குணமாகிய ஆடு, சத்துவ குணமாகிய யானை என்பன அவை.

அவரது கொடியில் அழகுற அமர்ந்திருப்பது சேவல். அது வெற்றியைக் குறிக்கும். சேவல் ஒலி கேட்டே சூரியன் உதயமாகுதல் நம் அனைவர்க்கும் தெரிந்ததே அல்லவா?

மலைகள் தோறும், குன்றுகள் தோறும் குமரக்கடவுளின் கோயில்கள் அமைந்திருப்பதைக் காணலாம். அவற்றில் முருகனின் அறுபடை வீடுகள் குறிப்பிடத்தக்கன. திருத்தணி, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், பழமுதிர் சோலை, பழனி, சுவாமிமலை ஆகியன அந்த ஆறு படை வீடுகளாகும்.

இத் திருத்தலங்களில் முருகப்பெருமானுக்கு அழகுமிகு திருகோயில்கள் அமைந்துள்ளன. மேலும், காஞ்சிபுரம், இலங்கையில் நல்லூர், கதிர்காமம், மலேசியாவில் பத்துமலை, மற்றும் தமிழர் வாழும் இடமெங்கும் முருகப்பெருமானுக்கு அழகுத் திருக்கோயில்கள் அமைந்து அவரது ஞான ஒளியைப் பரப்பும் சக்தித்தலங்களாக விளங்குகின்றன.

 

முருகப்பெருமானை மனமுருக வழிபடும் அடியவர்கள் மூன்று விரதங்களை மேற்கொள்கின்றார்கள். அவை: கார்த்திகை விரதம், சுக்கிர வார விரதம், சஷ்டி விரதம் என்பனவாகும்.

அகத்தியர், சிகண்டி முனிவர், நக்கீரர், நல்லியக்கோடன், ஔவையார், கச்சியப்ப சிவாசாரியார், முருகம்மையார், பொய்யாமொழிப்புலவர், அருணகிரிநாதர், சிதம்பர சுவாமிகள், ஞானவரோதயர், பகழிக்கூத்தர், கவிராஜப்பிள்ளை, குமரகுருபரர், இராமலிங்க அடிகளார், முருகதாச சுவாமிகள், பாம்பனடிகள் முதலிய பலர் முருகப்பெருமானையே தங்கள் மனதில் இருத்தி அவரை வாழ்த்தி வணங்கி அவரது அருள் பெற்றவர்களாவர்.

அரிய தவங்கள் பல செய்து பெற்ற வரங்களின் பலத்தால் மூவுலகங்களையும் வென்று, மக்கள், முனிவர்கள், தேவர்கள் என அனைவரையும் வதைத்துவந்த சூரபத்மன், தாரகாசுரன் ஆகிய கொடிய அரக்கர்களை அழித்து அனைவரையும் காப்பதற்காகச் சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றியவர் முருகப்பெருமான்.

முருகனின் அருட் பெருமைகளைக் கூறும் கந்த புராணம் என்ற நூல் விபரிக்கும் இந்த இனிய கதையை விரைவில் எமது இணைய தளத்தில் படியுங்கள்.

Leave a Comment