நாம் வணங்கும் தெய்வங்கள்

பிள்ளையார்

திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான் 
சகட சக்கரத் தாமரை நாயகன் 
அகட சக்கர விண்மணி யாவுறை 
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்

(கந்த புராணம்)

பிள்ளையார் - மிகப்பிரபல்யமான இந்துத் தெய்வம்

பிள்ளையார் உலகம் முழுவதும் மிகவும் பிரபல்யமானதோர் இந்துத் தெய்வம் ஆவார். மக்கள் அவரது தோற்றத்துக்காக மட்டுமின்றி அவரை வழிபடுவதில் உள்ள எளிமை காரணமாகவும் அவரை விருப்பமுடன் வணங்குகின்றார்கள்.

பிள்ளையார் குறித்து மேலும் அறிந்து கொள்வோமா?

அன்புக் குழந்தைகளே,

ஏராளமான மிருகங்களைப் பற்றி நீங்கள் அறிந்திருக்கின்றீர்கள். காட்டு மிருகங்கள், வீட்டு மிருகங்கள் என்ற இந்த இரு வகைகளில் எல்லா மிருகங்களும் அடங்கும். சிங்கம், புலி, நரி, ஓநாய் முதலிய காட்டு மிருகங்களிலிருந்து, நாய், பூனை, பசு, ஆடு, குதிரை முதலிய வீட்டு மிருகங்கள்வரை, ஏராளமான மிருகங்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்.

ஆயினும், பார்த்த உடனேயே குழந்தைகளை மகிழ்ச்சியிலும், ஆச்சரியத்திலும் ஆழ்த்திவிடக்கூடிய ஒரு மிருகம் இருக்கிறது. அது எந்த மிருகம் ? …..

அதுதான் யானை. ஆம், குழந்தைகள் அனைவரையும் குதூகலத்தில் ஆழ்த்திவிடக் கூடிய அற்புதமான வன விலங்கு….. யானை. மிகப்பெரிய உடம்பு,… முறம் போன்று விசாலமான காதுகள், மிகச் சிறிய கண்கள், அழகான, வெள்ளைத் தந்தங்கள்,….. ஆம், யானை அழகு மிக்கதொரு மிருகம்தான்.

 உருவத்திலே மிகவும் பெரிய மிருகமாயிருந்தாலும், யானை தன் பாகனின் உத்தரவுக்குக் கீழ்ப்படிந்து, அவன் சொல்வதையெல்லாம் கேட்டு, சின்னக் குழந்தைபோலச் செய்கிறது. இலை, தழை, புல், கரும்பு ஆகியவற்றைச் சாப்பிட்டு, அமைதியாக நிற்கிறது.

 

ஆனால், அதே யானை, கோபங்கொண்டு எழுந்துவிட்டால், அதன் முன்னால் யாரும் நிற்க முடியாது. மிகப்பெரிய மரங்களைக்கூடத் தன் தும்பிக்கையால் வளைத்துப் பிடித்து முறித்து எடுத்துத் தூர எறிந்து விடும். கண்ணில் பட்டவர்களையெல்லாம் காலின்கீழே போட்டு மிதித்தே கொன்று விடும்.

ஆம், “சாது மிரண்டால் காடு கொள்ளாது ” என்னும் பழமொழிக்கிணங்க, கோபம் வந்துவிட்டால் யானை மிகவும் பயங்கரமானது. ஆயினும், அதற்கு அவ்வளவு எளிதில் கோபம் வருவதில்லை. அமைதியாக நிற்கும்; குழந்தைகளைப் பார்த்து ஆனந்தமாகத் தலையாட்டும்; குழந்தைகள் அன்புடன் கொடுக்கும் வாழைப்பழம், கரும்பு முதலியவற்றைத் தும்பிக்கையால் வாங்கி அழகாகச் சாப்பிடும்.

யானையின் தும்பிக்கை அற்புதமான சக்திகள் வாய்ந்தது. உலகில் உள்ள வேறெந்த மிருகத்துக்கும் இதுபோன்ற உறுப்பு இல்லை.

தரையில் கிடக்கும் மிகப்பெரிய மரக்கட்டைகளை அநாயாசமாகத் தூக்கிச் சுமக்கக் கூடிய அதே தும்பிக்கை, தரையில் கிடக்கக் கூடிய மிகச் சிறிய ஊசியையும் இலகுவாக எடுத்துவிடக் கூடியது.

அதுமட்டுமல்ல, மண்ணும், நீரும் கலந்த சேற்றிலிருந்து, நீரை மட்டும் பிரித்து அருந்தக்கூடிய திறமை யானையின் தும்பிக்கைக்கு உண்டு.

காட்டில் கம்பீரமாக நடந்து செல்லும் யானை, தனது தும்பிக்கையினால் வழியில் உள்ள மரங்களையும், கிளைகளையும் ஒடித்து, அகற்றி, தடைகளை நீக்கி, வழி ஏற்படுத்தி முன்னேறிச் செல்கிறது. அதன் பின்னே வரும் சிறிய மிருகங்கள் இவ்வழியில் இலகுவாக நடந்து செல்லக் கூடியதாக இருப்பதுடன், யானையினால் ஒடிக்கப்பட்ட கிளைகளிலிருந்து இலை, தழைகளை உண்ணக் கூடியதாகவும் விளங்குகிறது.

இந்த அற்புதமான மிருகத்தின் தலையைக் கொண்டவராகக் காட்சி தரும் பிள்ளையாரைப் பற்றி நாம் இப்போது படிப்போமா?

பிள்ளைகளே, உலகங்கள் அனைத்திலும் நிறைந்து நிற்கும் இறைவனை நாம் பல உருவங்களில், பல பெயர்களில் வணங்குகின்றோம். ஆயினும், குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை, யாவராலும் விரும்பி வணங்கப்படும் தெய்வம் பிள்ளையார்.

விநாயகர், கணபதி, கணேசர், விக்னேஸ்வரப் பெருமான் , கஜானனர், ஐங்கரன் முதலிய பல பெயர்களால் நாம் பிள்ளையாரை அன்புடன் அழைத்து வணங்குகின்றோம். கள்ளங்கபடம் இல்லாத பிள்ளையின் உள்ளத்தைப்போன்று, இனிய இயல்புகளைக் கொண்டிருப்பவராகையால், ” பிள்ளையார் ” என்ற பெயரே மிகவும் அதிகமாக வழங்கப்படுகின்றது.

யானைமுகமும், மனித உடலும் கொண்ட விசித்திரமான, ஆனால் அழகான உருவம் பிள்ளையாருக்கு. பெரிய வயிறு. அந்த வயிற்றைச் சுற்றிப் பாம்பைக் கட்டி வைத்திருக்கிறார். நான்கு கைகள். அவற்றில் முறையே அங்குசம், பாசக்கயிறு, மோதகம் மற்றும் முறிந்த தந்தத்தின் முனை ஆகியவற்றை வைத்திருக்கிறார். காதுகள் மிகப்பெரியதாக, உலகில் உள்ள பக்தர்கள் அனைவரினதும் வேண்டுதல்களைக் கேட்கக்கூடியனவாக அமைந்திருக்கின்றன. தந்தையான சிவபெருமானைப் போலவே, பிள்ளையாரின் நெற்றியிலும், ஞானக்கண்ணான நெற்றிக்கண் உள்ளது.

பிள்ளையாரின் அழகிய முகத்தை உற்றுப் பாருங்கள். இன்னொரு விந்தையான உண்மை உங்களுக்குப் புலப்படும். பிள்ளையாரின் முகம், நெற்றி, கண்கள், வளைந்திருக்கும் தும்பிக்கை ஆகியவற்றைச் சேர்த்துப் பார்த்தால், ” ஓம் ” என்னும் பிரணவ மந்திரத்தின் உருவம் தெரியும். 

பிள்ளையாரின் உருவச் சிறப்பு இது. பிரபஞ்சம் முழுவதற்கும் மூலகாரணமாக விளங்குவது, ” ஓம் ” என்னும் பிரணவ மந்திரம். பிள்ளையார் இந்தப் பிரணவ மந்திரத்தின் உருவமாகவே விளங்குகின்றார்.

சகல ஞானங்களுக்கும் அடிப்படை ” ஓம்” என்னும் பிரணவ மந்திரம். பிள்ளையார் சகல ஞானங்களுக்கும் அதிபதியாக விளங்குகின்றார்.

சிவபெருமானின் மூத்த மகன் பிள்ளையார். இளைய மகன் முருகப்பெருமான். மூத்த மகன் அறிவுக்கு அதிபதியாகவும், இளைய மகன் ஆற்றலுக்கு அதிபதியாகவும் விளங்கி, உலக இயக்கத்துக்கு அடிப்படையாக விளங்குகின்றார்கள். அறிவு, ஆற்றல் இரண்டுமே நமக்கு அவசியமானவை அல்லவா?

பிள்ளையாரின் தும்பிக்கை அற்புத சக்தி வாய்ந்தது. உலகில் தும்பிக்கையைப் போன்ற அற்புதமான கருவி வேறு இல்லை. எப்படி என்று கேட்கிறீர்களா?

குறடு, உளி, திருகுபிடி (screw driver) , திருகு கருவி (spanner) முதலிய பலவித கருவிகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். உபயோகித்தும் இருப்பீர்கள். உங்கள் இரு சக்கர வாகனத்தின் சக்கரத்தைக் கழற்றுவதற்கு இக் கருவிகள் உங்களுக்கு உதவியிருக்கும். ஆனால், அதே திருகு கருவியை உபயோகித்து, உங்கள் கைக்கடிகாரத்தின் நுண்ணிய கருவிகளைக் கழற்ற முடியுமா ? முடியாது. அதற்கு, வேறு கருவிகள் தேவை.

ஆனால், யானையின் தும்பிக்கைக்கு நுண்ணிய சக்தி உள்ளது. தரையிலே கிடக்கும் சிறு ஊசியைக்கூட அது தனது தும்பிக்கையினால் இலகுவாக எடுத்துவிடும். பின்னர், மிகப் பெரிய மரக்கட்டையையும் அதே தும்பிக்கையினால் வளைத்துத் தூக்கி இலகுவாக இன்னொரு பக்கமாக வீசி விடக் கூடியது.

தும்பிக்கை மூலம் பிள்ளையார் நமக்கு உணர்த்துவது என்ன? சேற்றிலிருந்து நீரை மட்டும் பிரித்து எடுத்துத் தாகத்தைத் தீர்க்கக் கூடிய சக்தியுள்ள யானையின் தும்பிக்கை போல், நாமும் உலகிலுள்ள தீயனவற்றை விலக்கி, நன்மையானவற்றை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

மேலும், காட்டிலுள்ள ஏனைய சிறு மிருகங்களுக்கு எவ்வாறு யானையின் தும்பிக்கை தடைகளை நீக்கி உதவுகிறதோ, அதேபோல் நாமும் சுயநலம் பாராது, ஏழை எளியவர்களுக்கு உதவ வேண்டும்.

தரையிலிருக்கும் பெரிய மரக்கட்டை என்றாலும், சிறிய ஊசிஎன்றாலும், எதையுமே தனது தும்பிக்கையால் வளைத்துப் பிடித்துத் தூக்கிவிடக் கூடிய யானையைப்போலவே, நமது பிள்ளையாருக்கும் சிறிய பக்தர், பெரிய பக்தர்; சிறிய வேலை, பெரிய வேலை; சிறிய பிரார்த்தனை, பெரிய பிரார்த்தனை என்ற பேதங்கள் இல்லை. உலகில் உள்ள பக்தர்கள் அனைவரதும் வேண்டுதல்களை ஏற்று, அவர்களுக்கு ஏற்ற முறையிலே அருள் வழங்கி வருகிறார்.

பிள்ளையாரின் வாகனம் மூஞ்சூறு (எலி). மிகவும் பெரிய உருவத்தை உடைய பிள்ளையாருக்கு, மிகவும் சிறிய உருவத்தை உடைய மூஞ்சூறு வாகனமாக விளங்குகிறது. வீட்டுச் சுவரில் மிகவும் சிறிய துவாரத்தைப் போட்டு உள்ளே நுழையும் மூஞ்சூறு, உள்ளே குடைந்து குடைந்து, பெரிய பொந்து ஒன்றை உருவாக்கி விடுகிறது.

அதுபோல், நமது உள்ளத்திலும், மிகவும் சிறியதாக உருவாகும் உலக ஆசைகள், நாளாக ஆக, வளர்ந்து, கடைசியில் நமது உள்ளம் முழுவதையுமே வியாபித்து விடும். பிள்ளையார் மூஞ்சூறைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, தமது வாகனமாக வைத்திருக்கின்றார். நாமும் நமது உலக ஆசைகளையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க நம் பிள்ளையாரின் அருளை வேண்டுவோம்..

பிள்ளையாரை வழிபடுவது மிகவும் எளிது. மனப்பூர்வமான அன்புடனும், பக்தியுடனும், ஓர் அறுகம்புல்லை வைத்து வணங்கினாலும், மனம் குளிர்ந்து தம் பக்தர்களுக்கு மிகப்பெரிய நன்மைகளை வழங்கும் வள்ளல் அவர். தம்மை வணங்கும் பக்தர்கள் யாராக இருந்தாலும், அந்த உண்மையான பக்திக்கு இரங்கும் இறைவன் அவர்.

பிள்ளையார் வழிபாட்டின்போது, மோதகம், சர்க்கரைப் பொங்கல், கடலைச் சுண்டல் முதலிய இனிய சிற்றுண்டிகளும், அறுகம்புல், வன்னி இலை, மந்தார மலர், எருக்கம்பூ முதலியனவும் முக்கிய இடம் பெறுகின்றன.

முக்கியமாக, அறுகம்புல் பிள்ளையாரின் விருப்பத்திற்குரிய பூஜைப் பொருளாக விளங்குகிறது. சாதாரணமாக, வயல் ஓரங்களிலும், புல்வெளிகளிலும் அறுகம்புல் தானாக வளர்ந்திருக்கும். இவ்வளவு சாதாரணமாகக் காணப்படும் அறுகம்புல் மிகவும் அரிய மருத்துவ சக்தி வாய்ந்தது என்பதை நாம் மறக்கக்கூடாது.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே, நமது முன்னோர்கள் அறுகம்புல்லின் அரிய மருத்துவ சக்தியை உணர்ந்து, பலவித மருந்துப்பொருட்களை உருவாக்கியிருந்தார்கள். இன்று, மேல்நாட்டு விஞ்ஞானிகளும் அறுகம்புல்லின் அரிய சக்திகளை ஒத்துக் கொள்கிறார்கள். ( இவ்வாறு நமது முன்னோர்கள் கண்டுபிடித்த அரிய மருத்துவ மூலிகைகளான வேம்பு, கீழ்காய் நெல்லி, அஸ்வ கந்தா, சர்ப்பகந்தி முதலியன இன்று மேல்நாட்டு விஞ்ஞானிகளையே பிரமிக்க வைக்கின்றன.)

அறுகம்புல்லின் சாற்றைப் பிழிந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் பருகி வந்தால், உடலில் எந்த நோயும் அண்டாது என்று மருத்துவர்கள் நிரூபித்துள்ளனர். இவ்வளவு சக்தி வாய்ந்த அறுகம்புல் பிள்ளையார் நமக்கு அளித்த வரப்பிரசாதம் என்றே கருத வேண்டும்.

பிள்ளையாரின் திரு உருவச் சிலைக்கு முன்னால் தேங்காயை வேகமாக நிலத்திலே எறிந்து உடைத்துவிட்டு, அவரை வணங்குவது வழக்கமாக உள்ளது. இந்த வழிபாட்டு முறையிலுள்ள தத்துவம் என்னவென்று பார்ப்போமா ?

தேங்காயின் உள்ளே மிக இனிமையான இளநீரும், வெண்மையான , சுவையான பருப்பும் உள்ளது. ஆனால், அதைப் பெறுவதற்கு முன் நாம் தேங்காயின் நார்களை உரித்து, பலம் மிக்க ஓட்டை உடைத்தாக வேண்டும். நமது உள்ளத்திலும் பலவிதமான உலக ஆசைகள் தேங்காய் நார் போல அமைந்துள்ளன. நார்களை அடுத்து நமது உள்ளத்தில் ஆணவம் என்னும் பலமான ஓடு உள்ளத்தை மறைத்து விளங்குகிறது. இவற்றை அகற்றிவிட்டால், இனிமையான இளநீரையும், பருப்பையும் போன்று பக்தியையும், அன்பையும் கொண்ட கள்ளங்கபடமற்ற வெள்ளை உள்ளத்தைக் காணலாம்.

இந்த வெள்ளை உள்ளமே நம்மிடம் பிள்ளையார் விரும்பிக் கேட்பது. கள்ளங்கபடமற்ற நமது வெள்ளை உள்ளத்தைப் பிள்ளையாருக்கு அர்ப்பணிப்பதைக் குறிக்கவே, தேங்காயை உடைத்து அதன் பருப்பையும், இளநீரையும் அவருக்குக் காணிக்கையாக்குகிறோம்.

பிள்ளையார் வணங்குவதற்கு எளியவர் என்பதை முன்னர் பார்த்தோம். உள்ளன்புடனும், பக்தியுடனும் ஓர் அறுகம்புல்லைக் கிள்ளிப் பிள்ளையார்முன் இட்டு வணங்கினாலே அவர் மகிழ்ச்சியடைந்து விடுவார். அறுகம்புல் தவிர, வன்னி மரத்தின் இலைகள், மந்தார மலர்கள், எருக்கம்பூ என்பன பிள்ளையாருக்கு அர்ச்சனைக்கு ஏற்றவையாகும். அதே வேளையில், நாம் வழக்கமாக கடவுள் வழிபாட்டுக்கு உபயோகிக்கும் மலர்கள் யாவுமே பிள்ளையாருக்கும் உகந்தவை தான்.

பிள்ளையாரின் கரத்தில் மோதகம் காணப்படுகின்றது. மோதகத்தின் உள்ளே இனிப்பு நிறைந்த பூரணம் உள்ளது. மோதகம், லட்டு, பழங்கள் , அப்பம், அவல், பொரி, சுண்டல் முதலிய உணவுப் பொருட்களைப் பிள்ளையாருக்குப் படைத்துவிட்டுச் சிறுவர்களுக்குப் பகிர்ந்து கொடுப்பார்கள். அந்தப் பிள்ளைகள் மகிழ்ச்சியுடன் உண்பதைக் கண்டு, பிள்ளையாரும் மகிழ்ச்சி அடைகிறார்.

இதுமட்டுமல்லாமல், ஊரில் எங்கு பார்த்தாலும் பிள்ளையாருக்குரிய சிறுசிறு கோயில்களைக் காணலாம். குளக்கரையில் உள்ள மரத்தின் அடியில் தன்னந்தனியாக உட்கார்ந்து அருள் வழங்குவார். மார்கழி மாதத்தில், வீட்டுக்கு முன்னால், அதிகாலையில் பெண்கள் அழகான கோலம் போட்டு, கோலத்தின் நடுவில் சாணத்தால் ஒரு சிறு பிளளையார் சிலையைச் செய்து, பூ, அறுகம்புல் முதலியவற்றை வைத்து வணங்குவார்கள்.

இவ்வாறு, பல வழிகளில் பிளளையார் வணங்கப்படுகிறார். பிள்ளையாரை வணங்குதல் மிக எளிது. அவர் பிள்ளை மனம் கொண்டவர். குற்றம் குறைகளை உடனே மன்னித்து, அன்புடன் அருள் செய்பவர். வீட்டில் பிளளையார் சிலை இல்லையா ? பரவாயில்லை. சாணத்தை ஈரமாக்கி, ஒரு பிடி பிடித்து வைத்துவிட்டால் அதுவே பிளளையார்.

பக்தர்கள் சிலரால் வீட்டில் பூஜைக்காக உருவாக்கப்பட்ட பிள்ளையார்

அட, சாணமும் கிடைக்கவில்லையா ? மஞ்சளை மாவாக்கிக் குழைத்து அதிலே ஒரு பிடி பிடித்து வைத்து விட்டால் அதுவும் பிள்ளையார்தான். இனி, அன்போடு அருகம்புல்லும், பூவும் வைத்து, அழகாகப் பாடல் பாடி, ஆனந்தமாக வழிபடலாமே. இந்து சமயத்திற் குறிப்பிடப்படும் வேறெந்தத் தெய்வத்தையும், இவ்வளவு எளிதாக வழிபட முடியாது.

பிள்ளையாரின் உருவம் ” ஓம் ” என்னும் பிரணவ மந்திரத்தின் சொரூபமாயுள்ளது. உலகில் உள்ள சகல ஓசைகளுக்கும், சகல எழுத்துக்களுக்கும், சகல வேதங்களுக்கும் முதலாகவும், முடிவாகவும் விளங்குவது ” ஓம் ” என்னும் பிரணவ மந்திரம்.

உலக மக்களை உய்விப்பதற்காக, பிரணவ மந்திரத்திலிருந்து, ஓங்கார நாயகராக வெளிப்பட்ட தெய்வம் பிளளையார்.

திருக்கயிலாய லோகத்திலே பல கோடி மந்திரங்கள் நிறைந்த மந்திர சித்திர மண்டபம் இருந்தது. அம் மண்டபத்திலே, பல கோடி மந்திரங்களுக்கும் நாயகமாக நின்று ஒழித்துக் கொண்டிருந்தன, சமஷ்டிப் பிரணவம், வியஷ்டிப் பிரணவம் என்னும் இரண்டு பிரணவ மந்திரங்கள்.

உலகங்கள் யாவற்றினதும் ஆக்கம், அழிவு அனைத்துக்கும் காரணமான அந்த இரு பிரணவ மந்திரங்களும், ” ஓம் “, ” ஓம் ” என முழங்கிக் கொண்டிருந்தன.

அவ்வேளையில், அந்த மண்டபத்துக்கு எழுந்தருளிய சிவபெருமானும், பார்வதி தேவியாரும் அந்தப் பிரணவங்களின் இனிய இசையில் ஆழ்ந்து மகிழ்ந்தார்கள்.

“உலகங்கள் யாவும் பிரணவத்தின் மகிமையை உணர்வதற்காக ஓர் அழகிய குமாரன் இந்தப் பிரணவங்களின் உருவமாக உருவாகட்டும் ” என்று அருள் செய்தார்கள்.

அந்தப் பிரணவங்களின்மேல் தமது அருட்பார்வையைச் செலுத்தினார்கள்.

அப்போது, அந்த இரு பிரணவங்களும் ஒன்றாக இணைந்துகொள்ள, கண்களைக் கூச வைக்கும் ஒளியுடன், ” ஓம் ” என்னும் தெய்வீக இசை திசையெங்கும் எதிரொலிக்க, ஓங்கார நாயகரான பிளளையார் அங்கே தோன்றினார். அவரது முகம் பிரணவ மந்திரத்தின் உருவத்திற்கேற்ப, யானை முகத்துடன் விளங்கியது.

தமது தந்தையையும், தாயையும் அன்புடன் வணங்கினார், பிளளையார்.

அன்னை பராசக்தி மகனை அன்புடன் வாரியெடுத்து அணைத்துத் தம் மடிமீது அமர்த்தி ஆசிகளை வழங்கினார்.

தம் மைந்தரின் சிறப்புகளைக் கண்டு மகிழ்ந்த சிவபெருமான், அவரையே தமது சிவ கணங்களுக்கெல்லாம் தலைவராக்கினார். அதனால், கணபதி என்னும் பெயர் பிள்ளையாருக்கு ஏற்பட்டது.

“உலகில் யாரும், எந்தவொரு வேலையைத் தொடங்குவதற்கு முன்னரும், விக்கினேஸ்வரனாகிய இம் மைந்தனை வணங்கியே ஆரம்பிக்க வேண்டும்” என்று கட்டளையிட்டார், சிவபெருமான். அதனால், விக்கினேஸ்வரப் பெருமான் என்னும் பெயர் பிள்ளையாருக்கு ஏற்பட்டது.

விக்கினங்களைத் தடுத்து அருள் புரியும் ஈஸ்வரனாக, விநாயகப் பெருமான் உருவாகினார். அன்றிலிருந்து, மக்கள், தேவர்கள் யாவரும் தமது வேலைகளைத் தொடங்குவதற்கு முன்னர், விநாயகப்பெருமானைத் தியானித்து, அவரது அருளை வேண்டி, பின்னரே வேலைகளைத் தொடங்கினார்கள். இந்த வழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது.

நாம் பாடங்களை எழுதத் தொடங்கும்போதும், கடிதம் எழுதத் தொடங்கும்போதும், ” உ ” என்று பிளளையார் சுழி போட்டு, விநாயகருக்கு முதல் வணக்கம் செலுத்தி, பின்னரே எழுதத் தொடங்குகிறோம். விக்கினேஸ்வரப் பெருமானும் மனம் மகிழ்ந்து, தமது நல்லாசிகளை வழங்கி, அந்த முயற்சி இனிதே நிறைவேற அருள் புரிகிறார்.

இந்த விதி முழுமுதற் கடவுள்களுக்கும் பொருந்துமா ? ஆம், அடுத்த இரண்டு கதைகளைப் படித்துப் பாருங்கள்.

சிவனும் பிள்ளையாரும்

முன்பொரு சமயம், கமலாட்சன், தாரகாட்சன் , வித்யுன்மாலி ஆகிய மூன்று திரிபுரத்து அசுரர்கள் ( = அரக்கர்கள் ) கடுமையான தவம் புரிந்து , கணக்கற்ற வரங்களைப் பெற்றார்கள். இரும்பு, வெள்ளி, தங்கம் ஆகியவற்றால், மூன்று பறக்கும் கோட்டைகளை அமைத்தார்கள். அந்தப் பறக்கும் கோட்டைகளிலே பறந்து வந்து, முனிவர்களுக்கும், தேவர்களுக்கும், மக்களுக்கும் துன்பங்களைச் செய்தார்கள்.

தேவர்கள், முனிவர்கள் அனைவரும் சிவபெருமானிடத்திற் சென்று முறையிட்டார்கள். ” இறைவா, திரிபுரத்து அசுரர்கள் செய்யும் கொடுமைகளுக்கு அளவேயில்லை. தேவரீர் எங்கள் துன்பத்தைத் தீர்க்க வேண்டும் ” என்று வேண்டினார்கள். சிவபெருமானும் சம்மதித்து தமக்கு ஒரு தேரை அமைத்துத் தரும்படி கட்டளையிட்டார். தேவர்கள் யாவரும் ஒன்று சேர்ந்து, பலவித சக்திகளை ஒன்றுசேர்த்து, மிகப்பெரிய தேர் ஒன்றை உருவாக்கினார்கள். தேர் தயாராகியது.

விநாயகப் பெருமானின் பெருமைகளை யாவரும் அறிய வேண்டும் என்று விரும்பிய சிவபெருமான், அவரை வணங்காமல் தேரில் ஏறினார். அந்த நிமிடமே, அந்தப் பெரிய தேரின் அச்சாணி முறிந்துவிட, தேர் சரிந்து வீழ்ந்தது. தேவர்கள் நடுங்கி நின்றனர்.

தேரைவிட்டுக் கீழே இறங்கிய சிவபெருமான், அன்புடன் தமது மூத்த மைந்தரை அழைத்தார். தந்தையின் அழைப்பைக் கேட்டு ஒரே நிமிடத்தில் அங்கு விரைந்தோடி வந்த விநாயகப் பெருமான், அன்புடன் அருள் புரிய, அச்சாணி சரியாகியது; தேர் நிமிர்ந்தது.

சிவபெருமான் போருக்குப் புறப்பட்டார். திரிபுரத்து அசுரர்கள் மூவரும் தமது பறக்கும் கோட்டைகளில் பறந்தபடியே, அவரை எதிர்த்துப் போர் புரிய வந்தார்கள். சிவபெருமான் அவர்களை அழித்தொழிக்க ஆயுதம் எதுவும் எடுக்கவில்லை. புன்சிரிப்புப் புரிந்தார். அந்தப் புன்னகையிளிருந்து பறந்தன மூன்று தீப்பொறிகள்; திரிபுரத்து அசுரர்களின் கோட்டைகள் மூன்றும் சாம்பலாயின. அசுரர்கள் உண்மையை உணர்ந்து, இறைவனின் அடிமைகள் ஆனார்கள்.

திரிபுரமெரித்த பெருமான் எனும் பெயருடன், வெற்றி வீரராகத் திரும்பினார், சிவபெருமான். இது சிவபெருமானும், அவரது மைந்தர் விநாயகரும் சேர்ந்து நிகழ்த்திய ஒரு திருவிளையாடல்.

பிரம்மாவும் பிள்ளையாரும்

மற்றொரு கதை பிரம்ம தேவரைப் பற்றியது. படைப்புத் தொழிலைச் செய்பவர் பிரம்ம தேவர் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.

பிரபஞ்சத்தின் ஆரம்ப காலத்திலே, பிரம்ம தேவர் படைப்புத் தொழிலில் இறங்கினார். சூரியர்கள், உலகங்கள், மிருகங்கள், மனிதர்கள், தேவர்கள் என்று அனைவரையும் படைக்கும் நோக்கத்துடன், தம்மால்தான் எல்லாம் முடியும் என்ற அகங்காரத்துடன் படைப்புத் தொழிலில் ஈடுபட்டார். ஆனால், என்ன ஆச்சரியம், அவரது படைப்புகள் எதுவுமே ஒழுங்கு முறைப்படி அமையவில்லை. அவர் நினைத்ததற்கு மாறாக, அலங்கோலமான உருவங்கள் உருவாகின. மனித, தேவ உருவங்கள் கோணல் மாணலாக அமைந்தன.

படைப்புக் கடவுள் பதைத்துப் போனார். இதற்கு என்ன காரணம் என்று சிந்தித்தார். ஞானம் வந்தது. விக்கினங்களைத் தீர்க்கும் ஈஸ்வரனாகிய விநாயகப் பெருமானை முதலில் வணங்காத குற்றத்தை உணர்ந்தார்.

மனமுருக, கண்ணீர் சொரிய, விநாயகப் பெருமானை வேண்டினார். அவரது வேண்டுதலைக் கேட்டு, விசுவரூபத்தில் அங்கே தோன்றினார், விநாயகப் பெருமான். பிரம்ம தேவரை ஆசீர்வதித்தார். கிரியா சக்தி, ஞான சக்தி என்னும் இரு சக்திகளைப் பிரம்ம தேவருக்கு உதவியாக அளித்து மறைந்தார்.

அந்த இரு தெய்வீக சக்திகளின் உதவியுடன், விநாயகப் பெருமானின் அருளுடன் , பிரம்ம தேவர் படைப்புத் தொழிலை மீண்டும் ஆரம்பித்தார்.

உலகம் உருவாகியது; சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் உருவாகின; மனிதர், தேவர், நரகர் பிறந்தனர்; மிருகங்கள், பறவைகள், மீன்கள், மரங்கள் உருவாகின…. இவ்வாறு உலகில் உள்ள யாவும் ஓர் ஒழுங்கு முறைப்படி உருவாகின.

இது விநாயக புராணம் கூறும் கதை.

ஆகவே நாமும் பிள்ளையாரை வணங்கியே ஒரு புதிய வேலை ஒன்றினை தொடங்குகின்றோம்.

பார்வதிதேவியும் பிள்ளையாரும்

உலகங்கள் அனைத்துக்கும், உலகில் வாழும் உயிர்கள் அனைத்துக்கும் அன்னையாக விளங்குபவர், பார்வதி தேவியார். பிள்ளையார் தம் அன்னையின் மீது அளவற்ற அன்பும், பாசமும் உடையவர். அன்னையின் உயர்வை அவர் உணர்ந்து கொண்டது எப்படி ? இக் கேள்விக்கு மற்றொரு கதை விடையாகிறது.

பால கணபதி ஒரு பூனையுடன் விளையாடிக் கொண்டிருந்தார். விளையாட்டின் வேகத்தில், அவரது விரல் நகங்கள் பூனையின் முகத்தில் நான்கைந்து கீறல்களை உண்டாக்கி விட்டன. பூனை வேதனையுடன் ஓடிவிட்டது. சின்னப்பிள்ளையார் தம் தாயிடம் திரும்பி வந்தார்.

தாயின் முகத்தில் நான்கைந்து கீறல்கள் காணப்பட்டன; இரத்தம் கசிந்திருந்தது. பிள்ளையார் அதைப் பார்த்துப் பதறி விட்டார். ” அம்மா, இந்தக் கீறல்களை ஏற்படுத்தி உங்களை வருத்திய அந்தக் கொடியவன் யாரம்மா ? ” என்று கேட்டார். அன்னை பராசக்தி வேதனையுடன் சிரித்தாள். ” நீதான், மகனே ” என்றாள்

“உண்மையாகவா ? “

“ஆமாம், மகனே, எல்லா உயிர்களிடத்திலும் நான் தாயாக நிறைந்திருக்கிறேன். ஓர் உயிரை வருத்தும்போது, அந்த வருத்தம் எனக்கும் வருகிறது ” என்றார், பார்வதிதேவி.

பிள்ளையாரின் வாகனம் மூஞ்சூறு என் அழைக்கப்படும் எலி. இந்த மூஞ்சூறு வாகனம் பிள்ளையாருக்கு எப்படிக் கிடைத்தது ? பார்க்கவ புராணம் என வழங்கப்படும் விநாயக புராணம் கூறும் கதையை இனிப் பார்ப்போம்.

முன்னொரு காலத்திலே, மாகதர் என்ற சிறந்த முனிவருக்கும், விபுதை என்ற அரக்கிக்கும் மகனாகப் பிறந்தவன் கயமுகன் என்ற பயங்கர அரக்கன். இவன் யானை முகமும், தலையில் இரு கொம்புகளும் உடையவன். அரக்கர்களின் குருவாகிய சுக்கிராச்சாரியாரின் போதனைப்படி, கயமுக அரக்கன் சிவபெருமானின் திருநாமத்தை ஓதிப் பல்லாண்டு காலம் கடுமையான தவம் புரிந்தான். அவனது தவத்துக்கு இரங்கிய சிவபெருமான், அவன்முன் தோன்றி, ” என்ன வரம் வேண்டும் ? ” என்று கேட்டார்.

“இறைவா, எந்த ஆயுதத்தாலும் எனக்கு மரணம் நேரிடக்கூடாது. வஞ்சக எதிரிகளின் சூழ்ச்சியால் எனக்கு மரணம் நேரிட்டாலும், எனக்கு இன்னொரு பிறவி கிடைக்கக் கூடாது ” என்று கேட்டான், கயமுகன். சிவபெருமான் புன்சிரிப்புடன் அந்த வரங்களை அளித்துவிட்டு மறைந்தார்.

கயமுக அரக்கன் பெரும் வெற்றிக் களிப்புடன், மதங்கமாபுரம் என்னும் நகரத்தை உண்டாக்கி, அங்கேயிருந்து ஆட்சி புரிந்தான். தேவர்களையும், முனிவர்களையும் கொடுமைப்படுத்தினான். தேவர்கள் யாவரும் தன முன்னால் நின்று, தினமும் மூன்று வேளைகள் ஆயிரத்தெட்டு முறை தோப்புக்கரணம் போட வேண்டுமென்று கட்டளையிட்டான். அவர்கள் வரிசையாக நின்று, தோப்புக்கரணம் போட்டே கலைத்து விழுந்தார்கள். அதைப் பார்த்துக் கயமுகன் அகங்காரத்துடன் சிரித்தான்.

அரக்கனின் கொடுமைகளைப் பொறுக்க முடியாத தேவர்கள், பிள்ளையாரை வணங்கித் தம்மைக் காக்குமாறு வேண்டினார்கள்.

விநாயகரும், அவர்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டுக் கயமுக அரக்கனுடன் போருக்குப் புறப்பட்டார். விநாயகப் பெருமானுக்கும், கயமுகனுக்கும் இடையில் கடும் போர் மூண்டது. விநாயகர் தமது அம்புகளால் கயமுகனின் படைகளையும், தேர், மற்றும் ஆயுதங்களையும் நொடியில் அழித்தார். ஆனால், அவரது ஆயுதங்களினால் அந்த அரக்கனைக் கொல்ல முடியவில்லை. ( அவன் சிவபெருமானிடம் பெற்ற வரம்தான் காரணம் ). கயமுகன் பெருமிதத்துடன் சிரித்தான்.

“மைந்தா, கயமுக அரக்கனை ஆயுதங்களினால் கொல்ல முடியாது” என்று சிவபெருமான் விண்ணிலிருந்து அசரீரியாக மொழிந்தார்.

அறிவுக்கடலான விநாயகர் சற்றும் தாமதிக்கவில்லை. தமது வலது தந்தத்தை முறித்தெடுத்தார். கயமுகன் மீது வேகத்துடன் வீசினார். பல்லாயிரம் சூரியர்களின் ஆற்றலுடன் அந்தத் தந்தம் கயமுகனைத் தாக்கியது. நிலைகுலைந்து வீழ்ந்த அரக்கன் ஒரு மூஞ்சூராக மாறிப் பிள்ளையாரைக் கொல்ல ஓடி வந்தான்.

பிள்ளையார் தமது ஞானக்கண்ணால் அவனை நோக்கினார். உண்மையறிவு பெற்ற அந்த மூஞ்சூறு, பிள்ளையாரின் பாதங்களில் வீழ்ந்து வணங்கியது. பிள்ளையார், அன்புடன் அதையே தமது வாகனமாக்கிக் கொண்டார்

தோப்புக்கரணம்

கயமுகனிடம் இருந்து , விடுதலையடைந்த தேவர்கள் அனைவரும் பிள்ளையாருக்கு நன்றி தெரிவித்து, உள்ளன்புடன் அவருக்கு முன்னால் நின்று, மூன்று முறை தோப்புக்கரணம் போட்டு, அவருக்குத் தமது அன்பையும், பக்தியையும் வெளிப்படுத்தினார்கள்.

அதைத் தொடர்ந்து நாமும், பிள்ளையார் சிலையைக் கண்டவுடன், நமது இரு கரங்களினாலும் இரு காதுகளை மாறிப் பிடித்துக்கொண்டு, முழங்கால்களை மூன்றுமுறை மடித்து எழுந்து தோப்புக்கரணம் போடுகின்றோம். பிள்ளையாருக்கு நமது அன்பையும், பக்தியையும் தெரிவிக்கின்றோம்.

தோப்புக்கரணம் போடுவதால், பிள்ளையாரின் ஆசி நமக்குக் கிடைக்கிறது. அதுமட்டுமல்ல, நமது உடல் ஆரோக்கியம் வளர்கிறது. அது எப்படி ? நமது கைகளைக் கத்தரிக்கோல்கள் போல் மாறிப் பிடித்துக்கொண்டு உடலை மடித்து நிமிரும்போது, நமது உடல் உறுப்புகள் அனைத்துக்கும் பயிற்சி கிடைக்கிறது. உடல் முழுவதும் இரத்த ஓட்டம் ஏற்பட்டு, நல்ல இரத்தம் உடலின் எல்லா மூலை முடுக்குகளுக்கும் பரவுகிறது. உடலில் மறைந்திருக்கும் நோய்கள் யாவும் விலகுகின்றன. இது நல்லதொரு செய்தி அல்லவா?

தலையில்-குட்டி-வணங்குதல்

விநாயகர் சிலையை நாம் எங்கே கண்டாலும், அவர் முன்பாக வணக்கத்துடன் நின்று, இரு கைகளாலும் நம் தலையில் குட்டிக்கொள்கிறோம். பின்னர், மூன்று முறை தோப்புக்கரணம் போட்டு வணங்குகிறோம்.

விநாயகரைக் கண்டவுடன் குட்டிக்கொள்ளும் பழக்கம் எப்போது ஆரம்பித்தது ? இந்தப் பழக்கத்தை ஆரம்பித்தவர் யார் ? இந்தக் கேள்விகளுக்கு விநாயகர் புராணம் ஓர் அழகான கதையைப் பதிலாகத் தருகிறது. வேடிக்கையான இந்தக் கதை, விநாயகப் பெருமானின் விவேகத்தையும் எடுத்துக் காட்டுகிறது.

முன்னொரு காலத்தில், இலங்கையை, இராவணன் என்ற பத்துத்தலை அரக்கன் ஆண்டு வந்தான். அவன் விச்சிரவசு என்ற தவ முனிவருக்கும், கேசகி என்ற அரக்கிக்கும் மகனாகப் பிறந்தவன். ( இரா = இருட்டு; வண்ணம் = நிறம் ). இருட்டைப்போன்று கரிய நிறம் உடையவனாக இருந்ததால், அவனுக்கு இராவணன் என்னும் பெயர் உண்டானது.

இராவணன் மிகவும் கொடியவன். தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் பல கொடுமைகள் புரிந்து வந்தான். இலங்கையில் தனது மாளிகையை அமைத்துக்கொண்டு, மூன்று உலகங்களையும் ஆண்டு வந்தான்.

இராவணன் கொடிய குணம் படைத்தவன் என்றாலும், அவனிடத்தில் சிறந்த இயல்புகள் சிலவும் இருந்தன. அவன் சிறந்த சிவபக்தி உடையவன். வீணை மீட்டி இசைப்பதில் அவன் கைதேர்ந்த இசைக்கலைஞன். 
ஒருமுறை, அவன் கைலாச மலைக்குச் சென்று, சிவபெருமானை வழிபட்டான். வீணையை மீட்டி இனிய இசையை எழுப்பி, இறைவனைத் தொழுதான்.

அவனது பக்தியைக் கண்டு மனமிரங்கிய சிவபெருமான் அவன்முன் தோன்றி, ” இராவணா, உனக்கு என்ன வரம் வேண்டும் ? ” என்று கேட்டார்.

இறைவனை நேரில் தரிசித்த பெரும் மகிழ்ச்சியுடன் இராவணன் கேட்டான், ” இறைவா, மூன்று உலகங்களும் அழிந்தாலும், எனது இலங்கை அழியக் கூடாது. அதன் புகழ் எப்போதும் அழியாமல் இருக்க வேண்டும் ” .

சிவபெருமான் மகிழ்ச்சியுடன் அந்த வரத்தை அவனுக்கு அளித்தார். அழகுமிக்க ஒரு சிவலிங்கத்தை அவனுக்கு வழங்கினார். ” இராவணா, இது மிகவும் சக்தி வாய்ந்த ஆத்மலிங்கம். இதனை நீ புனிதமாகக் கொண்டுபோய், உனது இலங்காபுரியில் கோயில் அமைத்துத் தினமும் பூஜை செய்வாயாக. அப்போது, இலங்கைக்கு அழிவு வராது. உனது ஆட்சியும் நிலைத்திருக்கும். ஆனால், ஒரு நிபந்தனை. நீ வாகனத்தில் ஏறாமல், கால்நடையாக நடந்தே இலங்கைக்குப் போக வேண்டும். இது சக்தி வாய்ந்த லிங்கம். ஆதலால், இடையில் எங்கேயும் இதனை நீ நிலத்தில் வைக்கவே கூடாது ” என்று திருவாய் மலர்ந்தருளி மறைந்தார்.

இராவணன் மகிழ்ச்சியுடன் அந்த ஆத்மலிங்கத்தை வாங்கிக்கொண்டான். இறைவனுக்கு நன்றி கூறினான். ஆத்மலிங்கத்தைப் பக்தியுடன் இரு கைகளிலும் ஏந்திக்கொண்டு, இலங்கையை நோக்கி நடக்கத் தொடங்கினான்.

இராவணன் சக்தி வாய்ந்த சிவலிங்கத்தைப் பெற்றுக்கொண்ட செய்தி தேவலோகத்தை எட்டியது. இந்திரன் முதலிய தேவர்களும், முனிவர்களும் அந்தச் செய்தி அறிந்து திகைத்தனர். இராவணன் செய்யும் கொடுமைகளுக்குக் கணக்கேயில்லை. அப்படியிருக்க, அவனது இலங்காபுரிக்கு அழியாத சக்தியும் கிடைத்துவிட்டால், பின்னர் அவனை யாராலும் அழிக்க முடியாது. தேவர்களும், முனிவர்களும் அனுபவிக்கும் துன்பங்களுக்கு முடிவு வராதே என்று கலங்கினார்கள்.

தேவர்கள் யாவரும் கூட்டமாகச் சென்று, விநாயகப் பெருமானிடம் தமது கவலையைத் தெரிவித்தார்கள்.

தமது பெரிய காதுகளால் அந்தச் செய்திகளைக் கேட்டுக்கொண்ட விநாயகப்பெருமான், அவர்களுக்கு உதவி செய்வதாக உறுதியளித்தார்.

தமது விவேகத்தால் இராவணனை வெல்ல விரும்பிய விநாயகப் பெருமான், ஓர் அந்தணச் சிறுவன் உருவத்தை எடுத்துக் கொண்டார். வருண தேவனை அழைத்து, இராவணனின் வயிற்றில், தண்ணீரைப் பெருக்குமாறு கட்டளையிட்டார்.

வருண தேவனும் அப்படியே இராவணனின் வயிற்றினுள்ளே தண்ணீரைப் பெருகச் செய்தார். வயிற்றினுள் தண்ணீர் பெருகியதால், இராவணனுக்குச் சிறுநீர் கழிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. புனிதமான சிவலிங்கத்தைக் கையில் வைத்துக்கொண்டு, சிறுநீர் கழித்தல் முதலிய அசுத்தமான செயல்களைச் செய்யக்கூடாது. ஆகவே, என்ன செய்வதென்று சுற்றுமுற்றும் பார்த்தான்.

சற்றுத் தூரத்தில் நின்ற அந்தணச் சிறுவனைக் கண்டான். ” தம்பி,…. நான் சிறுநீர் கழித்துவிட்டு வரும் வரையில், இந்தச் சிவலிங்கத்தைக் கீழே வைக்காமல் உன் கைகளிலே தூக்கி வைத்துக் கொள்வாயா ? ” என்று கேட்டான், இராவணன்.

அந்தணச் சிறுவன் சம்மதித்தான். ஆனால் ஒரு நிபந்தனை விதித்தான். ” பத்துத்தலை மன்னா, …. நான் சிறு பையன். சிவலிங்கம் மிகவும் பாரமாயிருக்கிறது. இதனை அதிக நேரம் என்னால் தூக்கி வைத்திருக்க முடியாது. நான் மூன்று முறை உன்னைக் கூப்பிடுவேன். அதற்குள் நீ வந்துவிட வேண்டும். அதற்குள் நீ வராவிட்டால், நான் சிவலிங்கத்தைக் கீழே வைத்துவிடுவேன் ” என்று கூறினான்.

சிவலிங்கத்தை அந்தணச் சிறுவன் கைகளில் கொடுத்துவிட்டு, ஓர் ஓரமாகப் போய், சிறுநீர் கழிக்க அமர்ந்தான், இராவணன்.

அந்தணச் சிறுவன் வேடத்திலிருந்த விநாயகப் பெருமான் தமது விளையாட்டை ஆரம்பித்தார். ” ஏ, பத்துத்தலை மன்னா, …. பத்துத்தலை மன்னா,…. பத்துத்தலை மன்னா,…. ” என்று மூன்றுமுறை அழைத்துவிட்டுச் சிவலிங்கத்தைத் தரையில் ஒரு புனிதமான இடத்தில் வைத்துவிட்டார். அந்த ஆத்மலிங்கம் அதே இடத்தில், நிலத்தில் வேர்விட்டு உறுதியாக நிலைத்துவிட்டது.

சிறுநீர் கழித்து, கை, கால்களைக் கழுவிக்கொண்டு ஓடோடி வந்த இராவணன், சிவலிங்கம் நிலத்தில் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு பதறினான். தனது வலிமை மிகுந்த கைகளால் நிலத்தைத் தோண்டி அந்தச் சிவலிங்கத்தை எடுக்க முயன்றான். அதை அசைக்கவே முடியவில்லை. அந்த லிங்கத்தைப் பிடித்துத் தூக்க முயன்றபோது, அது பசுவின் காதுபோலக் குழைந்து, அவன் கைகளில் அகப்படாமல் நழுவியது.

ஏமாற்றமும், ஆத்திரமும் அடைந்த இராவணன், அதற்குக் காரணமான அந்த அந்தணச் சிறுவனைத் துரத்திப் பிடித்து, அவனது தலையில் ஓங்கிக் குட்டினான்.

இராவணனுக்கு உண்மையை உணர்த்த விரும்பிய விநாயகப்பெருமான், தமது உண்மையான உருவத்தை எடுத்துத் தமது தும்பிக்கையால் அவனைத் தூக்கிப் பந்துபோலச் சுழற்றி எறிந்தார். வானத்தை முட்டும் உயரத்துக்கு வீசி எறியப்பட்ட இராவணன், உண்மையை உணர்ந்து, விநாயகப் பெருமானை வணங்கித் தன்னை மன்னிக்கும்படி வேண்டினான்.

விநாயகப் பெருமான் அவனை மன்னித்து, ” இராவணா, நீ என் தலையில் எப்படிக் குட்டினாயோ, அதேபோல் உன் தலையில் நீயே குட்டிக்கொண்டு என்னை வணங்குவாயாக ” என்றார்.

இராவணனும், அப்படியே தன் தலையில் மூன்றுமுறை குட்டிக்கொண்டு விநாயகப் பெருமானை மனமுருகி வழிபட்டான்.

“எம் முன்னே நின்று, இதுபோல் தமது தலையில் குட்டிக்கொண்டு வணங்கும் பக்தர்களின் துன்பங்களைஎல்லாம் நான் நீக்குவேன்” என்று கூறி, அவனை ஆசீர்வதித்த விநாயகப் பெருமான், இராவணனுக்குப் பல வரங்களை அளித்து மறைந்தார்.

அன்றிலிருந்து, விநாயகப் பெருமானின் பக்தர்கள் தம்மைத்தாமே குட்டிக்கொண்டு வணங்கும் பழக்கம் ஆரம்பமானது.

நமது தலையில் குட்டிக்கொள்வதாலும், தோப்புக்கரணம் போடுவதாலும் நமது தலையிலும், உடலிலும் இரத்த ஓட்டம் அதிகரித்து, நரம்புகள் தூண்டப்பட்டு, நன்மைகள் விளைகின்றன என்று விஞ்ஞானிகளும் ஒப்புக் கொள்கின்றார்கள்.

இராவணனை ஏமாற்றிப் பிள்ளையார் வைத்த சிவலிங்கம் கோகர்ணம் எனப் பெயர் பெற்றது. ( கோ = பசு; கர்ணம் = காது . பசுவின் காதுபோலக் குழைந்து உருமாறியுள்ளது ) . இந்தியாவில், பிரசித்திபெற்ற சிவத்தலங்களில் ஒன்றாகிய கோகர்ணம், இந்தியாவின் மேற்குப் பகுதியில், கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ளது.

பிள்ளையாரின் முறிந்த தந்தம் மற்றொரு மகத்தான வேலையைச் செய்யவும் உதவியது. அது என்ன தெரியுமா ?

வேத வியாசர் என்னும் மிகச் சிறந்த முனிவர் இருந்தார். அவர் சகல விதமான வேதங்களையும், இதிகாசங்களையும் உணர்ந்தவர்.

அவர் பல ஆண்டுகள் கடுமையான தவம் புரிந்து, மகா பாரதக் கதையைத் தமது சிந்தனையில் உருவாக்கிக் கொண்டார். அது ஒரு பெரிய காவியம். லட்சக்கணக்கான சுலோகங்கள் (சம்ஸ்கிருத மொழியில் எழுதப்படும் கவிதைகளும், மந்திரங்களும் ) நிறைந்தது. அந்தக் காவியத்தை எழுத்தில் எழுதிக் கொடுக்க அவருக்கு ஓர் எழுதுநர் தேவைப்பட்டார்.

பிரம்ம தேவரின் ஆலோசனைப்படி, விநாயகப் பெருமானிடம் சென்றார், வியாசர். ” விநாயகப் பெருமானே, உலகத்து மக்களுக்கு அரிய பல உண்மைகளைப் போதிக்கும் மகாபாரதம் என்னும் மகத்தான காவியத்தை உருவாக்கியிருக்கிறேன். அதை நான் சொல்லச் சொல்லத் தேவரீர் எழுதித் தர வேண்டும் ” என்று வேண்டினார்.

பிள்ளையார் அன்புடன் சிரித்தார். ” வேத வியாசரே, அப்படியே ஆகட்டும். ஆனால், ஒரு நிபந்தனை. நான் எழுதத் தொடங்கினால் நிறுத்த மாட்டேன். நீ தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும் ” என்றார்.

வியாசர் சம்மதித்தார். ஆயினும், அவரும் ஒரு நிபந்தனை போட்டார். ” ஐயனே, நான் சொல்லிக்கொண்டே போவேன். ஆனால், நான் பாடும் சுலோகங்களின் பொருளை விளங்கிக்கொண்ட பின்தான் தாங்கள் அதை எழுத வேண்டும் ” என்று கேட்டுக்கொண்டார்.

அவ்வாறே, வியாசர் பாடல்களைப் பாட, விநாயகர் தமது தந்தத்தினால் அந்தப் பாடல்களை வேகமாக எழுதினார். இடைக்கிடையில், வியாசர் சற்றுக்கடினமான சொற்களைப் புகுத்தி விடுவார். விநாயகரும், அதை விளங்கிக்கொள்ள நேரம் எடுப்பதுபோல் சற்று அவகாசம் கொடுத்து, மீண்டும் எழுதுவார்.

அந்த அவகாசத்தில், வியாசர் மேலும் பல பாடல்களைச் சிந்தித்து மனதில் உருவாக்கிக் கொள்வார். இவ்வாறு, உலக மகா இதிகாசங்களுள் ஒன்றான மகாபாரதம் எழுதப்பட்டது.

கொடிய கொள்ளைக்காரனுக்கும் அருள்புரிந்து, உலகம் போற்றும் உன்னத துறவியாக்கிய பிள்ளையாரின் கருணையை விளக்கும் கதையை இப்போது படியுங்கள்.

நந்துரம் என்னும் அழகிய நகரத்தின் எல்லைப்புறத்திலே ஒரு காடு அமைந்திருந்தது. அந்தக் காட்டில், வேடர்களும், கொடிய கொள்ளைக்காரர்களும் வாழ்ந்து வந்தார்கள். அப்படிப்பட்ட ஒரு பயங்கரமான கொள்ளைக்காரன் விப்பிரதன். அவன் மிகவும் கொடியவன். சிறிதுகூட இரக்கம் இல்லாதவன். அந்தக் காட்டு வழியில் செல்லும் வழிப்போக்கர்களை வழிமறித்து, அடித்துக் கொலை செய்து, அவர்களுடைய பணம், நகைகள், பொருட்கள் ஆகியவற்றை எடுத்துக்கொள்வது அவனது வழக்கம்.

ஒருநாள், வழிப்போக்கர்களை எதிர்பார்த்து விப்பிரதன் ஒரு மரத்தின் பின்னால் ஒளிந்திருந்தபோது, அந்த வழியில் ஓர் அந்தண இளைஞன் நடந்து வந்தான். அவனைக் கொன்றால் பெரும் பொருள் கிடைக்கும் என்ற ஆசையில் வாளை உருவிக்கொண்டு அந்த அந்தணனைத் துரத்தினான் விப்பிரதன். ஆனால், கொள்ளைக்காரனைக் கண்டவுடனேயே நிலைமையைப் புரிந்துகொண்ட அந்த இளைஞன், மிகவும் வேகமாகத் தப்பி ஓடி விட்டான்.

எவ்வளவு துரத்தியும் விப்பிரதனால் அந்த அந்தண இளைஞனைப் பிடிக்க முடியவில்லை. மனவருத்தத்துடன் திரும்பிய கொள்ளைக்காரன், திரும்பி வரும் வழியில் ஒரு திருக்கோயிலையும், அதன் அருகே ஒரு திருக்குளத்தையும் கண்டான். களைப்பினால் அந்தத் திருக்குளத்தில் இறங்கி நீராடி, தாகத்தைத் தீர்க்க அந்தத் தீர்த்தத்தைப் பருகிவிட்டு, அங்கேயிருந்த ஒரு பெரிய மரத்தின் நிழலில் படுத்திருந்தான்.

அப்போது, தவத்திற் சிறந்த முனிவரான முற்கலர் அந்தத் திருக்கோயிலை நோக்கி நடந்து வந்தார். வேகமாக எழுந்த விப்பிரதன், அவரைக் கொல்வதற்காகத் தன வாளை ஓங்கினான்.

அவனைத் திரும்பிப் பார்த்துக் கனிவுடன் சிரித்தார் முற்கல முனிவர். அவரது கண்களிலே தெரிந்த அன்பும், கருணையும் வேடனின் உள்ளத்தில் பெரும் மாற்றத்தை உண்டாக்கின. ஓங்கிய வாளைக் கீழே போட்டுவிட்டு, அவரது கால்களில் வீழ்ந்து வணங்கினான் விப்பிரதன்.

“முனிவர் பெருமானே, நான் பெரும் பாவி. என்னை மன்னித்து நல்ல வழி காட்டுங்கள் … ” என்று கெஞ்சினான்.

“அன்பனே, உன்னை மன்னிக்க நான் யார் ? இதோ, இந்தக் கோயில் விநாயகப் பெருமான் உறையும் திருக்கோயில். அவரது கருணையை வேண்டிக்கொள். விநாயகப் பெருமானின் கருணை, காய்ந்த மரத் தடியைக் கூடத் துளிர்க்க வைக்கும் சக்தி வாய்ந்தது. முதலில், இத் திருக்குளத்தில் இறங்கி நீராடிவிட்டு வா ….” என்று முனிவர் கூறினார்.

விப்பிரதன் திருக்குளத்தில் நீராடி வந்தான். முனிவர் அவனது தலைமீது தமது திருக்கரத்தை வைத்து, “ஓம் கணேசாய நம” என்ற விநாயகர் திருமந்திரத்தை உபதேசித்தார். அந்த இடத்தில் ஒரு காய்ந்த மரத் தடியை நட்டார். “அன்பனே, தினமும் இந்தத் தடிக்கு நீர் ஊற்றி வா. விநாயகப் பெருமானைத் தியானித்து, இம்மந்திரத்தைச் செபித்துக் கொண்டிரு. அவரது அருள் உனக்குக் கிட்டும் ….” என்று கூறிச் சென்றார்.

மனம் திருந்திய கொள்ளைக்காரன், அந்தத் தடியின் அருகில் அமர்ந்து பக்தியுடன் விநாயக மந்திரத்தை ஓதினான். தினமும் மூன்று முறை அந்தத் தடிக்கு நீர் ஊற்றினான். பல ஆண்டுகள் கழிந்தன. அத் தடி துளிர்த்து வளர்ந்து, இலைகளும், பூக்களும் உண்டாயின.

அப்போது முற்கல முனிவர் அங்கே வந்தார். அவனது அன்பையும், பக்தியையும் கண்டு வியந்தார். தனது கமண்டலத்தில் இருந்த புனித நீரை அவன்மீது தெளித்தார். அவனது பாவங்கள் பறந்து போயின. விநாயகப் பெருமானின் அருளால், அவனது புருவங்களின் மத்தியில் ஒரு தும்பிக்கை உண்டாகியது.

முனிவர் அவனை ஆசீர்வதித்துப் பிரணவ மந்திரத்தை உபதேசித்தார். “மகனே, நீ இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து, விநாயகப் பெருமானின் திருப்பாதங்களை அடைவாய். இந்தத் தடி, கற்பக மரமாக வளர்ந்து, வேண்டிய பொருட்கள் யாவற்றையும் வழங்கும்” என்று கூறினார்.

புருவ நடுவில் தும்பிக்கை தோன்றியதால் புருசுண்டி முனிவர் என்னும் பெயர் பெற்ற விப்பிரதன், பல ஆண்டுகள் அங்கே வாழ்ந்து, கற்பக மரத்தின் உதவியால் பல்லாயிரம் பேருக்கு உதவிகள் செய்து, இறுதியில், விநாயகப்பெருமானின் திருப்பாத கமலங்களை அடைந்தார்.

பிள்ளைகளே, 
விக்கினங்கள் தீர்க்கும் விநாயகப் பெருமானின் பெருமைகளைக் கூறும் சில கதைகளைப் படித்தீர்கள்.

சீனா, ஜப்பான், ஜாவா, சுமாத்ரா, கம்போடியா, பர்மா, ஆப்கானிஸ்தான், மங்கோலியா, போர்னியோ, நேபாளம், இந்தோனேசியா முதலிய பல நாடுகளில் பண்டைக் காலங்களில் விநாயகர் வணங்கப்பட்டதற்குரிய அடையாளங்களாக, பலவித வடிவங்களில் அமைந்த விநாயகர் சிலைகள் புதைபொருள் ஆராய்ச்சியின்போது கிடைத்திருக்கின்றன.

கிட்டத்தட்ட 4,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது இந்துவெளி நாகரிகம். இந்தியாவின் வடமேற்கே, இந்து நதிக்கரையில் மக்கள் பண்பட்ட நாகரிக வாழ்க்கை வாழ்ந்ததற்கான அடையாளங்கள் கிடைத்திருக்கின்றன. மொஹெஞ்சோதரோ,
ஹரப்பா என்னும் இரு பெரிய புராதன நகரங்களின் இடிபாடுகளும், கலைப்பொருட்களும் நிலத்தின் அடியிலிருந்து தோண்டி எடுக்கப்பட்டிருக்கின்றன.

அப்படி எடுக்கப்பட்டபோது, பண்டைய காலத்து மக்கள் பயன்படுத்திய பொருட்கள் பல கிடைத்தன.

அந்தப் பொருட்களுள் ஒன்று – மண்ணினால் செய்யப்பட்ட விநாயகர் அடையாளம். ஆம், 4,000 . ஆண்டுகளுக்கு முன்னே, அந்த நகரங்களில் வாழ்ந்து மறைந்த மக்கள் யானை உருவமுள்ள கடவுளை வழிபட்டதற்கான அடையாளங்கள்தான் அவை.

இற்றைக்கு 3,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட வேத காலத்தில் எழுதப்பட்ட பல சுலோகங்களில், பிள்ளையாரைப் பற்றியும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. விநாயகர் வழிபாடு மிகப் பழைய காலம் தொடக்கம் நிலவி வருவதற்கு இவை அடையாளங்கள்.

தற்போது, விநாயகர் வழிபாடு இந்தியா முழுவதிலும், மற்றும் , இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா, ஆப்பிரிக்கா என, உலகின் பல்வேறு நாடுகளிலும் பரவியுள்ளது.

பிள்ளையார் கோயில்கள் எங்கும் காணப்படுகின்றன. பல இடங்களில் பிள்ளையாருக்கென்றே தனிப்பட்ட பெரிய கோயில்கள் அமைந்திருக்கின்றன. (உ-ம்: திருச்சி மலைக்கோட்டைப் பிள்ளையார் கோயில், பிள்ளையார்பட்டியில் உள்ள கற்பக விநாயகர் கோயில், வட இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்தில் அமைந்திருக்கும் எட்டுச் சுயம்பு விநாயகர் ஆலயங்கள் ( இந்த எட்டுக் கோயில்களிலும், மனிதனால் செய்யப்படாமல் தானாக உருவாகிய விநாயகர் சிலைகள் உள்ளன ), இலங்கையில் மானிப்பாய் மருதடிப் பிள்ளையார் கோயில், இணுவில் செகராசசேகரப் பிளளையார் கோயில், மட்டக்களப்பில் மாமாங்கப் பிளளையார் கோயில் என்பன மிகவும் புகழ் பெற்றவை.

மேலும், இந்து சமயக் கோயில்கள் யாவற்றிலுமே நாம் பிள்ளையாரைத் தரிசிக்கலாம். அவரை வணங்கிவிட்டுத்தான் நாம் கோயிலின் மூல மூர்த்தியையே வணங்க முடியும்.

செவ்வாய், வெள்ளிக் கிழமைகள் விநாயகரை வணங்கி விரதம் இருப்பதற்கான சிறந்த நாட்கள். தென் இந்தியாவில், திருமணமாகாத இளம்பெண்கள் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் விரதம் இருந்து, பிள்ளையாரை வழிபடுகின்றார்கள். பிள்ளையாரின் அருளால் அவர்கள் சிறந்த கணவரைப் பெற்று இனிய வாழ்க்கை வாழ்கின்றார்கள்.

பிள்ளையாருக்குரிய விசேட பண்டிகை,’ விநாயகர் சதுர்த்தி ‘ ஆகும். இப்பண்டிகை ஆவணி மாதத்தில் கொண்டாடப்படுகின்றது. இந்தியாவில், மும்பாய் முதலிய இடங்களில் இப் பண்டிகை மிகவும் சிறப்பாகவும், அலங்காரமாகவும் கொண்டாடப்படுகின்றது.

தண்ணீர் முனைக்கு ஊர்வலமாக வந்த பிள்ளையார்

மிகவும் பெரிய, அழகிய பிள்ளையார் சிலைகள் நூற்றுக் கணக்கில் செய்யப்பட்டு, வீதிகளில் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்படும். இறுதியில், இச் சிலைகள் கடற்கரைக்கு அல்லது நதிக்கரைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கே பூஜைகள் முடிந்ததும், நீரில் கரைக்கப்படும்.

“ஓம் ஸ்ரீ கணேசாய நம” என்னும் எட்டெழுத்து மந்திரம், பிள்ளையாரை வணங்குவதற்கு உகந்த மந்திரமாகும்.

பிள்ளைகளே,

நீங்களும் இந்த மந்திரத்தைத் தினமும் காலையில் பக்தியுடன் உச்சரித்துப் பிள்ளையாரை அன்புடன் வணங்குங்கள். அவர் உங்களுக்கு வேண்டிய நற்படிப்பு, செல்வம், ஆரோக்கியம் முதலிய யாவற்றையும் வழங்கி ஆசீர்வதிப்பார்.

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலரான் 
நோக்குண்டாம் மேனி நுடங்காது – பூக்கொண்டு 
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம் 
தப்பாமற் சார்வார் தமக்கு.

(ஔவையார்)

உங்களுக்கு இந்து சமய அறிவூட்டும், இந்த தளத்தின் மிகப் பெரிய முயற்சிக்கு எல்லாம் வல்ல விநாயகப் பெருமானின் பேரருளும், ஆசிர்வாதமும் நிறையவே உண்டு என நம்புவதுடன், எமது முயற்சி வெற்றி பெற அவர் துணை புரிவாராக.

மறக்காமல் பிள்ளையார் பால் அருந்திய நிகழ்வினையும் பாருங்கள்

இப்போது ஒரு இனிமையான பாடல் ஒன்றினைக் கேட்போமா!

 

Leave a Comment