பக்த பிரகலாதன்

அரக்கன் இரணியன்

முன்னொரு காலத்திலே, பாரத தேசத்திலே, காசிபர் என்னும் முனிவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு திதி, அதிதி என்னும் இரண்டு மனைவிகள் இருந்தார்கள்.
திதிக்கு இரணியன், இரண்யாட்சன் ஆகிய இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள்.

அந்த இரு பிள்ளைகளும் பிறவியிலேயே அரக்க குணம் படைத்தவர்களாக விளங்கினார்கள். கொடுமைகள் செய்வதையே தங்கள் பொழுதுபோக்காகக் கொண்டு வளர்ந்து வந்தார்கள்.

இரண்யாட்சன் மிகவும் கொடூரம் வாய்ந்த அரக்கனாக வளர்ந்தான். தனது இளம் வயதிலேயே மூன்று உலகங்களையும் வென்று, தேவர்களையும், மனிதர்களையும் தனக்கு அடிமைகளாக்கினான்.

இரண்யாட்சனின் கொடுமைகளைப் பொறுக்க முடியாமல் வருந்திய தேவர்களையும், மனிதர்களையும் காப்பதற்காக, மகா விஷ்ணு ஸ்ரீ வராக அவதாரம் எடுத்தார்.

வெண் பன்றியைப் போன்ற முகத்துடனும், வான்முட்டும் உயரம் கொண்ட கம்பீரமான உருவத்துடனும் தோன்றிய மகா விஷ்ணு, இரண்யாட்சனைத் தமது கூரிய பற்களால் குத்திக் கொன்றார்.

பின்னர், அரக்கனின் கொடுமைகளால் நிலைகுலைந்திருந்த பூமியைத் தமது பற்களால் தூக்கி, அதற்குரிய இடத்திலே நிலையாக அமைத்தார்.

உலகத்தைக் காத்து, ஒளிமயமாகக் காட்சியளித்த பகவான் மகா விஷ்ணுவைத் தேவர்களும், மனிதர்களும் போற்றி வணங்கினார்கள்.

இரணியன் சபதம்

தனது தம்பி இரண்யாட்சன் கொல்லப்பட்டதை அறிந்த இரணியன் கடும் கோபம் கொண்டான். தம்பியைக் கொன்ற மகா விஷ்ணுவைக் கொன்று பழி தீர்க்கத் துடித்தான்.

“என் அன்புத் தம்பியைக் கொன்ற அந்த நாராயணனைப் (= மகா விஷ்ணுவின் மற்றொரு திருப்பெயர் இது ) பழிக்குப் பழி வாங்குவேன். அவனது பக்தர்களையும், தொண்டர்களையும் அழித்து ஒழிப்பேன். மூன்று உலகங்களிலும் அந்த மகா விஷ்ணுவை வணங்குவதற்கு யாரும் இல்லாமற் செய்வேன்” என்று சபதம் செய்தான் இரணியன்.

தனது சபதத்தை நிறைவேற்றுவதற்காகக் கடுமையான தவம் செய்து, அரிய சக்திகளைப் பெற விரும்பினான் இரணியன். தவம் செய்வதற்காக, மந்திர மலைக்குச் சென்றான். அங்கே, பயங்கர மிருகங்கள் நிறைந்த காட்டின் நடுவில், தனது காற்பெருவிரலில் அசையாமல் நின்று, பிரம்ம தேவரைத் தியானித்துக் கடும் தவம் செய்தான்.

உணவு, உறக்கம் ஏதுமின்றி, பல வருடங்களாக அப்படியே நின்று தவம் புரிந்ததால், அவனது உடல் எலும்புக் கூடாக மாறியது. அவனது உடம்பை மூடி எறும்புப் புற்று அமைந்தது.

பிரம்மன் அளித்த வரங்கள்

இரணியனின் தவத்தைக் கண்டு மனம் மகிழ்ந்த பிரம்ம தேவர் அவன்முன் தோன்றினார்.

தமது கமண்டலத்திலிருந்து புனித நீரை அந்தப் புற்றின்மீது தெளித்தார். புற்று மறைந்தது. புதர் மூடிய புற்றிலிருந்து, பொன்னிற மேனியுடன் வெளிவந்தான் இரணியன். தன் முன்னே காட்சியளித்த பிரம்ம தேவரை வணங்கி நின்றான்.

“பக்தனே, உன் தவத்தைக் கண்டு மகிழ்ந்தேன். உனக்கு என்ன வரம் வேண்டும்?” என்று கேட்டார் பிரம்ம தேவர்.

இரணியன், தான் முன்பே தீர்மானித்திருந்தபடி வரங்களைக் கேட்கத் தொடங்கினான்.

“பிரம்ம தேவரே, மூன்று உலகங்களுக்கும் நானே அரசனாக வேண்டும். உங்களால் படைக்கப்பட்ட எவராலும் எனக்கு மரணம் நேரிடக் கூடாது. வீட்டின் உள்ளேயோ, வெளியிலேயோ, பகலிலோ, அல்லது இரவிலோ எனக்கு மரணம் நேரிடக் கூடாது. வானத்திலோ, பூமியிலோ நான் சாகக் கூடாது. மனிதர்களாலோ, தேவர்களாலோ, தாவரங்களாலோ அல்லது மிருகங்களாலோ எனக்கு மரணம் வரக்கூடாது. எந்தவித ஆயுதங்களாலும் எனக்கு மரணம் வரக்கூடாது. இந்த வரம் எனக்கு வேண்டும்” என்று இரணியன் கேட்டான்.

பிரம்ம தேவர் புன்னகைத்தார்.அவன் கேட்ட வரங்களை அளித்து மறைந்தார்.

இரணியன் அட்டகாசம்

தான் விரும்பிய வரங்களைஎல்லாம் பெற்று, வெற்றி வீரனாக நாடு திரும்பினான் இரணியன். உடனடியாகப் பெரும் படையைத் திரட்டிச் சென்று, விண்ணுலகம், மண்ணுலகம், பாதாள உலகம் ஆகிய மூன்று உலகங்களையும் வெற்றி கொண்டான்.

இந்திர லோகத்தை வென்று, தேவர்களின் அரசனாகிய இந்திரனைத் தனது அடிமையாக்கிக் கொண்டான்.

வருணன், அக்கினி, வாயு, சூரியன், சந்திரன், எமன் முதலிய தேவர்கள் அனைவரும் இரணியனின் ஆட்சிக்குக் கட்டுப்பட்டு, அவனுக்குச் சேவகம் செய்யும் அடிமைகள் ஆனார்கள்.

மூன்று உலகங்களையும் வென்ற இரணியன், சகல உலகங்களுக்கும் தானே இறைவன் என்றும், அனைவரும் தன்னையே வணங்க வேண்டும் என்றும் கட்டளையிட்டான்.

ஸ்ரீ நாராயணராகிய மகா விஷ்ணுவை யாரும் வழிபடக்கூடாது என்று கட்டளையிட்டான். அக் கட்டளையை மீறி யாராவது மகா விஷ்ணுவின் பெயரை உச்சரித்தாலோ, தியானித்தாலோ அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இவ்வாறு லட்சக்கணக்கான விஷ்ணு பக்தர்களை வருத்தி, அவர்கள் வருந்துவதைக் கண்டு மனம் மகிழ்ந்தான் இரணியன்.

இரணியனின் கொடுமையான ஆட்சிக்கு முடிவே வராதா என்று ஏக்கமடைந்த மக்கள், வேதனையுடன் வாழ்ந்து வந்தார்கள்.

நாரதர் வரவு

ஒருநாள், நாரத முனிவர் இரணியனின் மாளிகைக்கு வந்து அவனைச் சந்தித்தார். முக்காலங்களையும் உணர்ந்த முனிவராகிய அவர், இரணியனின் மனைவி கயாது தேவியின் மாளிகைக்கும் சென்றார்.

கயாது தேவி மன மகிழ்ச்சியுடனும், பக்தியுடனும் அவரை வரவேற்றாள். அவருக்கு இனிய பழங்களைக் கொடுத்து உபசரித்தாள்.

கொடுமையே உருவமாகிய இரணியனுக்கு அன்பும், பண்பும் மிக்க மனைவி வாய்த்திருப்பதைக் கண்டு நாரதர் அதிசயித்தார்.

கடவுள் பக்தியின் மேன்மைகளை அவளுக்கு உபதேசித்தார். காக்கும் கடவுளாம் ஸ்ரீ நாராயணரின் திருவிளையாடல்களையும், அவரது அருட்செயல்களையும் விளக்கும் பல கதைகளைக் கூறினார். கதைகளைக் கேட்டபடியே கயாது தேவி உறங்கி விட்டாள். அதை உணராமல் நாரதர் கதைகளைத் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்தார்.

அவர் கதைகளைச் சொல்லச் சொல்ல, “ஊம்,… ஊம்,…” என்று ஒரு சின்னஞ்சிறு குரல் ஒலித்துக்கொண்டே இருந்தது.

ஒரு கதையைச் சொல்லி முடித்தபோதுதான், கயாது தேவி ஏற்கெனவே உறங்கி விட்டதை நாரதர் கவனித்தார். ‘அப்படியானால், “ஊம்,… ஊம்,…” என்று சொல்லிக் கதையை அவ்வளவு ஆர்வத்துடன் கேட்டது யார்?’ என்று வியந்தார் அவர்.

அதைப் பரீட்சிக்க, மற்றொரு கதையைச் சொல்லத் தொடங்கினார். இம்முறையும் “ஊம் ..” சத்தம் கேட்டபோது, அந்தக் குரலுக்குரியவனை நாரத முனிவர் கண்டுபிடித்து விட்டார்.

ஆம், கயாது தேவியின் வயிற்றினுள்ளேயிருந்த குழந்தைதான் அவர் கூறிய கதையை அவ்வளவு ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்தது.

அதையறிந்து மிக்க மகிழ்ச்சியடைந்த நாரதர், அக் குழந்தையை ஆசீர்வதித்து, இறைவனைப்பற்றிய மேலும் பல ஞான விளக்கங்களை அக்குழந்தைக்கு உபதேசித்துச் சென்றார்.

பிரகலாதன் பிறப்பு

மகாராணியின் வயிற்றிலே வளர்ந்த அந்த ஞானக்குழந்தை, மங்களகரமான ஒரு சுப முகூர்த்த வேளையிலே பிறந்தது. தமது துன்பங்களைத் தீர்க்கவல்ல பாலகன் பிறந்து விட்டான் என்று மண்ணவரும், விண்ணவரும் மகிழ்ந்து கொண்டாடினார்கள்.

பூரணச் சந்திரன் போல் அழகுடன் விளங்கிய அக் குழந்தைக்குப் பிரகலாதன் என்று பெயர் சூட்டினான் இரணியன். நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக, அழகுடன் வளர்ந்து வந்தான் பிரகலாதன்.

பிரகலாதன் குருகுலக்கல்வி

அவன் கல்வி பயிலும் வயதடைந்தபோது, அவனைக் குருகுலக் கல்விக்கூடத்துக்கு அனுப்ப விரும்பினான் இரணியன்.

ஆசிரியரின் வீட்டிலேயே தங்கி, அவருக்குப் பணிவிடைகள் செய்துகொண்டே, அவர் கற்பிக்கும் விஷயங்களைக் கற்றுக்கொள்வதே குருகுலக் கல்வி எனப்படும்.

அரக்கர்களின் குருவாகிய சுக்கிராச்சாரியாரின் புதல்வர்களாகிய சண்டன், அமர்க்கன் ஆகிய இரு ஆசிரியர்களின் குருகுலத்திலே சென்று தங்கிக் கல்வி பயிலுமாறு பிரகலாதன் அனுப்பப் பட்டான்.

குருகுலத்திலே, ஆசிரியர்கள் இருவரும் பிரகலாதனுக்குப் பாடங்களைக் கற்பிக்கத் தொடங்கினார்கள். முதலாவது பாடம், கடவுள் வணக்கம்.

அன்றைய நிலையில், மூன்று உலகங்களுக்கும் இரணியனே கடவுள் என்று அறிவிக்கப்பட்டிருந்ததால், “ஓம் இரண்யாய நம” என்று வணங்குமாறு கற்பித்தார்கள்.

நாராயண மந்திரம்

சிறுவன் பிரகலாதன் தனது கைகளைக் குவித்துக்கொண்டான்; கண்களை மூடிக் கொண்டான். அவனது அழகிய உதடுகள்,”ஓம் நாராயணாய நம” என்று பக்தியுடன் உச்சரித்தன. 

ஆசிரியர்கள் இருவரும் தேள் கொட்டியதுபோல் திகைத்தார்கள். இரணியனின் ஆட்சியில், நாராயணரின் பெயரைச் சொல்வது மரண தண்டனைக்குரிய குற்றம்.

ஆகவே, இளவரசனான பிரகலாதன் நாராயணரின் பெயரை இப்படிப் பக்தியுடன் உச்சரித்து வணங்கிய விஷயம் வெளியே தெரிந்தால் இரணியன் அவர்களுக்கு மரண தண்டனை விதித்து விடுவானே என்று அஞ்சினார்கள்.

“கண்ணே, பிரகலாதா, இப்படிச் சொல்லாதே, சகல உலகங்களுக்கும் அரசர் உனது தந்தையான இரணியனே. அவர்தான் சகல உலகங்களுக்கும் இறைவன்” என்று சொன்னார்கள்.

பிரகலாதன் சிரித்தான்.

“இல்லை, ஆசிரியர்களே. நீங்கள் தவறாகச் சொல்லுகின்றீர்கள். எனது தந்தை மூன்று உலகங்களுக்கும் அரசன் என்பது உண்மை. அவர் வலிமை நிறைந்தவர் என்பதும் உண்மை.

ஆனால், சகல உலகங்களிலும் வாழும் உயிர்களைக் காத்து ரட்சிக்க அவரால் முடியாது. அந்த வல்லமை படைத்தவர் சர்வலோக நாயகராகிய மகாவிஷ்ணுவேதான். அவரையே நாம்,’ஓம் நாராயணாய நம’ என்று வணங்க வேண்டும்” என்று உபதேசித்தான், பிரகலாதன்.

தந்தையும் மகனும்

சில மாதங்கள் இவ்வாறு கழிந்தபின், ஒருநாள், ஆசிரியர்கள் இருவரும் பிரகலாதனை அவனது தந்தையின் அரண்மனைக்கு அழைத்துச் சென்றார்கள்.

பல நாட்களுக்குப்பின் தனது செல்வப்புதல்வனைக் கண்ட இரணியன், பாசத்துடன் பிரகலாதனை வாரி அணைத்துத் தன் மடிமீது இருத்திக் கொண்டான்.

“மகனே பிரகலாதா, நன்றாகப் படிக்கின்றாயா? … ஆசிரியர்கள் உனக்கு ஒழுங்காகப் பாடங்களைக் கற்றுத் தருகின்றார்களா?” என்று கேட்டான்.

“ஆம் தந்தையே” என்றான் பிரகலாதன்.

இரணியன் மிக்க மகிழ்ச்சி அடைந்தான்.

“சரி, மகனே. அவர்கள் கற்றுத்தந்த பாடங்களுக்குள், மிகவும் முக்கியமான பாடத்தை எனக்குச் சொல், பார்க்கலாம்” என்றான் தந்தை.

பிரகலாதன் தனது கண்களை மூடிக்கொண்டு, கைகளைக் குவித்துக் கொண்டான்.
“ஓம் நாராயணாய நம” என்று பக்தியுடன் உச்சரித்தான்.

இரணியன் கோபம்

பாம்பை மிதித்தவன்போல் பதறினான் இரணியன்.

கடும் கோபத்தில் அவனது விழிகள் இரண்டும் சிவந்தன. தனது மகனைக் கீழே தள்ளிவிட்டு, அந்த ஆசிரியர்களை நோக்கி வேகமாக வந்தான் இரணியன்.

“மதிகெட்டவர்களே, எனது பரம விரோதியின் பெயரை உச்சரிக்கும்படி எனது மகனுக்கே கற்பித்திருக்கின்றீர்களே! உங்களுக்கு என்ன துணிச்சல்?” என்று கர்ஜித்தான்.

இரு ஆசிரியர்களும் நடுங்கினார்கள்.

“அரசே, ‘ஓம் இரண்யாய நம’ என்று வணங்கும்படிதான் உங்கள் மகனுக்கும் ஏனைய மாணவர்களுக்கும் கற்றுக்கொடுத்தோம். ஆனால், பிரகலாதன் எப்போதும் மகா விஷ்ணுவின் பெயரையே உச்சரித்து வணங்குகின்றான்.

தான் உச்சரிப்பது மட்டுமில்லாமல், எங்கள் ஏனைய மாணவர்களுக்கும்கூட இவற்றையே கற்றுக்கொடுத்துக் கெடுத்து விட்டான்” என்று கதறினார்கள்.

இரணியன் தன் மகனிடம் வந்தான்.

இரணியனுக்கு உபதேசம்

“மகனே பிரகலாதா, உன் ஆசிரியர்கள் கற்றுக்கொடுத்த நல்ல விஷயங்களை விட்டுவிட்டு, எனது பரம விரோதியின் பெயரை நீயே உச்சரிப்பது சரிதானா?” என்று கேட்டான்.

“தந்தையே, நீங்கள் என் தந்தை. அந்தப் பாசம் எனக்கு எப்போதும் உள்ளது. ஆனால், சர்வ லோகங்களையும் காத்து ரட்சிக்கும் நாயகர், சகல உயிர்களுக்கும் தந்தை, நாராயணராகிய மகா விஷ்ணு. அவரை வணங்குவதில் என்ன தவறு?” என்று அச்சமின்றிக் கேட்டான் பிரகலாதன்.

‘மகா விஷ்ணு’ என்ற பெயரைக் கேட்டதுமே இரணியனின் கோபம் மிகவும் அதிகமாகியது.

‘யாரைக்கொன்று பழி வாங்குவதற்காக அவன் துடிக்கின்றானோ, அந்த விரோதியின் பெயரை அவனது மகனே சொல்வதா?’ என்று கடும் கோபம் கொண்டான் இரணியன்.

“மகனே, இன்னொரு முறை அவன் பெயரைச் சொல்லாதே. நாராயணன் நமது அரக்க குலத்துக்கே விரோதி. உன் சிற்றப்பனைக் கொன்ற கொடியவன் அவன். அவனைப் பழி வாங்குவதே என் வாழ்க்கையின் இலட்சியம்” என்று சீறினான் இரணியன்.

பிரகலாதன் புன்னகைத்தான்.

“தந்தையே, சகல உலகங்களிலும் வியாபித்து நிறைந்திருக்கும் இறைவனாகிய மகா விஷ்ணுவை உங்களால் எதிர்க்க முடியுமா? அவரது பாதங்களைச் சரணடைந்து வணங்குங்கள். உங்களுக்கு நற்கதி கிடைக்கும்” என்று புத்தி கூறினான் புதல்வன்.

கொடும் தண்டனை

“ச்சீ!.. எனக்கே உபதேசம் செய்கிறாயா?” என்று ஆத்திரத்துடன் கூறிய இரணியன், மகனைத் தூக்கி ஒரு மூலையில் எறிந்தான். தனது அரக்க வீரர்களை அழைத்தான்.

“வீரர்களே, இவன் என் மகனேயல்ல. என் குலத்தைக் கெடுக்க வந்த கோடரிக்காம்பு இவன். இவனை உயிரோடு விட்டு வைத்தால், எமது அரக்க குலத்தையே அழித்து விடுவான். இவனைக் கட்டி இழுத்துச் சென்று, சித்திரவதை செய்யுங்கள்” என்று கட்டளையிட்டான்.

சிறுவனாகிய பிரகலாதனைச் சங்கிலிகளால் கட்டி இழுத்துச் சென்ற அரக்க வீரர்கள், அந்தப் பாலகனைத் தங்கள் ஈட்டி, சூலம், வாள் முதலிய ஆயுதங்களால் தாக்கினார்கள்.

சிறுவன் பிரகலாதன், “ஓம் நாராயணாய நம” என்று மகா விஷ்ணுவின் திருநாமத்தையே உச்சரித்துக் கொண்டிருந்தான்.

பிரகலாதனின் மேனியில் (உடலில் ) பட்ட ஆயுதங்கள் யாவுமே, மகா விஷ்ணுவின் அருளால், ‘பட பட’ என்று முறிந்து வீழ்ந்தன.

அரக்க வீரர்கள் திகைத்து நின்றார்கள்.

அந்தச் சின்னஞ்சிறு பாலகனின் சக்தியைக்கண்டு கோபங்கொண்ட வீரர்கள், கொடிய விஷப்பாம்புகளைப் பிரகலாதனின் உடலின்மேல் விட்டுக் கடிக்கும்படி செய்தார்கள்.

பல நாட்கள் பசியாகக் கிடந்த அந்தக்கொடிய பாம்புகள் பயங்கரமான வேகத்துடன் அந்தப் பாலகன்மேலே பாய்ந்து, விஷம் நிறைந்த தமது பற்களால் கடித்தன.

ஆனால், என்ன ஆச்சரியம்! அந்தப் பாம்புகளின் பற்கள் யாவுமே முறிந்து வீழ்ந்தன. அவற்றின் விஷம் அந்தச் சிறுவனுக்கு எந்தத் தீங்கும் செய்யாதவாறு பகவான் மகாவிஷ்ணு பாதுகாத்து அருள் செய்தார்.

எப்படியாவது பிரகலாதனைக் கொன்றுவிட வேண்டும் என்று தீர்மானித்துக்கொண்ட அரக்க வீரர்கள், மதங்கொண்ட யானைகளை அந்தச் சிறுவன்மேல் ஏவி விட்டார்கள்.

அந்தக் கொடிய யானைகளின் காலடிகளில் நசுங்கி அவன் இறந்து விடுவான் என்று நம்பினார்கள்.

ஆனால்,….

‘ஓ…’ என்று கடுங்கோபத்துடன் பிளிறியவண்ணம் பிரகலாதனைச் சூழ்ந்துகொண்ட அந்த வெறி பிடித்த யானைகள், திடீரென்று அவன்முன் பணிந்து வணங்கின.

பின்னர், திரும்பிவந்து, தங்களை ஏவிவிட்ட அரக்க வீரர்களின்மேல் பாய்ந்தன. தமது தும்பிக்கைகளினால் அவர்களைப் பிடித்துத் தூக்கி எறிந்து கொன்றன.
ஏனைய வீரர்கள் ‘தப்பினோம், பிழைத்தோம்’ என்று ஓட்டம் பிடித்தார்கள்.

பிரகலாதன், “ஓம் நாராயணாய நம” என்று பாடியபடியே மாளிகைக்குத் திரும்பினான்.

அரக்க வீரர்களின் முயற்சிகள் தோல்வியடைந்ததையும், மகாவிஷ்ணுவின் பெயரைச் சொல்லிக்கொண்டே பிரகலாதன் உயிர் தப்பி விட்டதையும் அறிந்து ஆத்திரம் கொண்டான் இரணியன்.

முள்ளை முள்ளால் எடுப்பதுபோல், மாயாவியான மகா விஷ்ணுவின் சக்தியை, மற்றொரு மாயாவியின் சக்தியால் முறியடிக்க நினைத்தான்.

மிகவும் சக்தி வாய்ந்த அரக்கனாகிய சம்பாசுரனை அழைத்தான்.

பிரகலாதனைக் கொன்றுவிடும்படி கட்டளையிட்டான். சம்பாசுரன் மிகப்பெரிய உருவமெடுத்துக்கொண்டு, பிரகலாதனை நெருங்கி, அவனைக்கொல்ல முயன்றான்.

ஆனால், மகா விஷ்ணுவின் திருநாமத்தைப் பக்தியுடன் உச்சரித்தபடியே அமர்ந்திருந்த பிரகலாதனை அந்த அரக்கனால் நெருங்கவே முடியவில்லை.

மகா விஷ்ணுவின் சக்தி பிரகலாதனைச் சூழ்ந்து நின்று காத்தது. சம்பாசுரன் அவமானத்துடன் தோற்று ஓடினான்.

சம்பாசுரன் தோற்று ஓடியதைக்கண்டு அடக்க முடியாத ஆத்திரம் கொண்டான் இரணியன்.

வலிமை மிக்க தனது வீரர்கள் சிலரை அழைத்தான்.

நாகபாசங்களினால் ( நாகபாசம் = கொடிய நாக பாம்புகளையே கயிறுகளாக உபயோகித்து ஒருவனைக் கட்டி வைத்தல்) பிரகலாதனைக் கட்டிச் சமுத்திரத்தின் நடுவில் போட்டு விடுமாறு கட்டளையிட்டான்.

அதன்படி, அந்த வீரர்களும் பாதாளத்திலிருந்து கொடிய கருநாகப் பாம்புகளைப் பிடித்துவந்து, அவற்றினால் பிரகலாதனைக் கட்டினார்கள்.

பின்னர், ஒரு கப்பலில் அவனை ஏற்றி, சமுத்திரத்தின் மிக ஆழமான பகுதிக்குச் சென்று, அங்கே அவனைத் தண்ணீரில் தள்ளி விட்டார்கள்.

பிரகலாதன் வீழ்ந்த இடத்திலே தண்ணீர் மிக வேகத்துடன் பொங்கி எழுந்தது.
அப்போது,………

………….. சமுத்திர ராஜன் (=சமுத்திர அரசன்) அங்கே தோன்றினான்.

மகா விஷ்ணுவின் அரிய சக்தியால், நாக பாசங்கள் யாவும் பிரகலாதனின் உடலைவிட்டு நீங்கி மீண்டும் பாதாளத்தை அடைந்தன.

சமுத்திரராஜன் அன்புடன் பிரகலாதனைத் தூக்கிக்கொண்டு மீண்டும் கரைக்குக் கொண்டுவந்து சேர்த்தான். பிரகலாதனை ஆசீர்வதித்துவிட்டு மீண்டும் சமுத்திர நீரில் மறைந்து விட்டான்.

எவ்வித சேதமுமின்றிக் கரைக்கு வந்து சேர்ந்த பிரகலாதன், தன்னைக்காப்பாற்றிய மகாவிஷ்ணுவைப் போற்றினான்.

கருணைக் கடவுளாகிய மகா விஷ்ணு அங்கே தோன்றி, அந்தப் பாலகனை அன்புடன் ஆசீர்வதித்தார். அரிய பல வரங்களை வழங்கி அருள் புரிந்தார்.
மகிழ்ச்சியுடன் மாளிகைக்குத் திரும்பி வந்த மகன் பிரகலாதனைக் கண்டு இரணியன் ஆச்சரியம் அடைந்தான்.

மகனைக் கண்டதும் அவனது உள்ளத்தில் பாசம் ஏற்பட்டாலும், அவன் தனது பரம விரோதியின் பெயரை விடாமல் உச்சரித்துக்கொண்டே இருப்பதைக்கண்டு வெறுப்பும், கோபமும் கொண்டான்.

மீண்டு வந்த மகன்

மகனை அருகே அழைத்தான். “மகனே பிரகலாதா, .. எனது வலிமையையும், நான் பெற்ற வெற்றிகளையும் கண்டு மூன்று உலகங்களும் நடுங்குகின்றன.

தேவர்களும், மனிதர்களும், தவ வலிமை படைத்த முனிவர்களும்கூட என்னையே கடவுளாகப் போற்றி வணங்குகின்றார்கள். நீ ஒருவன் மட்டுமே என் கட்டளைகளை மீறி என் பரம விரோதியின் பெயரைச் சொல்லிக்கொண்டே இருக்கின்றாய். இந்தத் துணிச்சலை உனக்குத் தந்தவன் யார்? சொல்” என்று கேட்டான்.

எங்கும் நிறைந்த ஸ்ரீ மகா விஷ்ணு

பிரகலாதன் தன் தந்தையின் முகத்தைப் பார்த்து அன்புடன் புன்னகைத்தான்.
“தந்தையே, சர்வ லோகங்களையும் காத்து ரட்சிக்கும் ஸ்ரீ நாராயணராகிய மகா விஷ்ணுவைச் சரணடைந்தவன் வேறு யாருக்கும் பயப்பட மாட்டான். அவனுக்கு நேரிடும் ஆபத்துகளைஎல்லாம் அந்த மகா விஷ்ணுவே நீக்கிக் காப்பாற்றி அருள் செய்வார்” என்று பதிலளித்தான்.

“ஓ, அப்படியானால், உன்னைப் பாதுகாக்கும் அந்த விஷ்ணு இப்போது எங்கே ஒளிந்திருக்கின்றான்?” என்று இரணியன் கேலியாகக் கேட்டான்.

“தந்தையே, அவர் எங்கும் நிறைந்தவர்; அவர் இல்லாத இடமேயில்லை. அவர் தூணிலும் இருப்பார்; துரும்பிலும் இருப்பார்” என்று பிரகலாதன் பதில் கூறியபோது,……

இரணியன் வெற்றிச் சிரிப்புச் சிரித்தான். அவனது உள்ளத்திலே ஒரு பயங்கரமான திட்டம் உருவாக்கி விட்டிருந்தது.

‘பிரகலாதனின் உயிரைப் பலமுறை, பலவித ஆபத்துகளிலிருந்து பாதுகாத்தவன் அந்த மகா விஷ்ணுவேதான். இது நிச்சயமான உண்மை. இப்போது பிரகலாதன் அழைத்தால் அந்த மகா விஷ்ணு இங்கே தோன்றுவான். உடனே அவனைக் கொன்று விடலாம்” என்று திட்டமிட்டான் இரணியன்.

இரும்பினால் செய்யப்பட்ட தனது கதாயுதத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொண்டான்.

“பிரகலாதா, உன் விஷ்ணு தூணிலும் இருப்பான் என்று சொன்னாயே,… இதோ இந்தத் தூணிலும் அவன் இருக்கின்றானா?” என்று ஒரு பெரிய தூணைக் காட்டிக் கேட்டான்.

பிரகலாதன் அமைதியாகப் பதில் கூறினான்.

“தந்தையே, ஸ்ரீ மகா விஷ்ணு பகவான் இல்லாத இடமேயில்லை. இந்தத் தூணில் மட்டுமல்ல, இங்குள்ள எல்லாப் பொருட்களிலுமே நிச்சயமாக அவர் நிறைந்திருக்கின்றார்”

“அப்படியா?” என்று கூறி, அட்டகாசமாகச் சிரித்தான் இரணியன். “அப்படியானால், இதோ, என் கதாயுதத்தினால் இந்தத் தூணை அடித்து நொறுக்கி விடுகின்றேன். அந்த மகா விஷ்ணு உண்மையிலேயே வலிமையுற்றவனாக இருந்தால், என் முன்னே வரட்டும் பார்க்கலாம்” என்று கூறிக்கொண்டே, தனது கதாயுதத்தை ஓங்கி,…….

அந்தத் தூணில் வேகமாக அடித்தான் இரணியன்.

அப்போது,……….

…… அந்தத் தூண் ‘படீர்’ என்று இரண்டாகப் பிளந்தது.

ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி

பகவான் ஸ்ரீ மகா விஷ்ணு சிங்கத்தைப் போன்ற முகமும், மனித உடலும் கொண்ட நரசிம்ம உருவத்துடன் அந்தத் தூணிலிருந்து மின்னலைப் போல் வெளியே வந்தார். அப்போது உலகம் முழுவதும் நடுங்கும்படியான பெரும் சத்தம் கேட்டது.
இரணியன் பிரம்மாவிடத்தில் பெற்ற வரத்தில் கேட்டபடியே, மகா விஷ்ணு மனிதனும் இன்றி, மிருகமும் இல்லாததாக, சிங்க முகமும் மனித உடலும் கொண்டு, அழகும் பயங்கரமும் ஒருங்கே கொண்ட அதிசயமான உருவத்தில் அங்கே தோன்றினார்.

அப்போது பகலும் இன்றி, இரவும் இன்றி, அந்திப்பொழுதாக இருந்தது.
ஸ்ரீ நரசிம்ம மூர்த்தியின் உருவத்தைக்கண்டு, கதிகலங்கி நின்றான் இரணியன்.

அவனது கொடுமைகளுக்கெல்லாம் முடிவுகாலம் வந்து விட்டது.

ஒரு பூச்சியைப் பிடிப்பதுபோன்று, அவனைப்பிடித்த நரசிம்ம மூர்த்தி அவனைத் தரதர வென்று இழுத்துச் சென்று அந்த மாளிகையின் வாயிலில் இருந்த படிகளில் அமர்ந்தார். அவனைத் தமது மடிமீது கிடத்தினார். தமது கூரிய நகங்களால் அவனது வயிற்றைப் பிளந்து, குடலைத் தமது கழுத்தில் மாலையாக அணிந்துகொண்டார்.
கொடிய அரக்கன் மாண்டொழிந்தான்.

ஏனைய அரக்கர்கள் ஓடி ஒளிந்தார்கள்.

தேவர்கள் பூமாரி பொழிந்து இறைவனைப் போற்றினார்கள்.

தன்னையும், மூவுலகங்களையும் காப்பதற்காக நரசிம்ம அவதாரம் செய்த ஸ்ரீ நாராயணராகிய மகா விஷ்ணுவின் புகழைப் பிரகலாதன் போற்றிப் பாடினான்.

தமது தேவியாகிய ஸ்ரீ மகா லக்ஷ்மியுடன் அங்கே ஒளி வெள்ளத்தில் காட்சியளித்த ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி, பிரகலாதனுக்கு மணிமுடி சூட்டி அவனை அரக்க குலத்துக்கு அரசனாக்கித் தமது அருள் வரங்களை அளித்து மறைந்தார்.

மகா விஷ்ணு பகவானின் அருளுடன், பிரகலாதன் நீண்ட காலம் நீதி முறைப்படி ஆட்சி புரிந்தான்.

Leave a Comment