திருநாவுக்கரசு நாயனார் (அப்பர்)

திருநாவுக்கரசர், கி பி 7ம் நூறாண்டில் வாழ்ந்தவர் ஆவார். நான்கு சமய குறவர்களில் ஒருவரும், 63 நாயன்மாரில் ஒருவருமாவார்.

திருமுனைப்பாண்டி நாட்டிலே, திருவாமூர் என்னும் ஊரில் புகழனாருக்கும் மாதினியாருக்கும் மகனாக பிறந்தார் அவர்.

புகழனார் சிறந்த சிவபத்தர். அவரது மனைவி மாதினியார்.

மாதினியாருக்கு முதலில் ஒரு பெண்குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு திலகவதியார் என்னும் பெயரிட்டு வளர்த்து வந்தனர். சில காலத்துக்கு பின்னர் அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு மருணீக்கியார் என்னும் பெயரிட்டு வளர்த்து வந்தனர்.

இளமையிலேயே சகல விடயங்களையும், சாத்திர சம்பிரதாயங்களையும் கற்றறிந்து கொண்டார். 

திலகவதியார் 12 வயதான போது, அப்போது இருந்த சமூக வழக்கங்களினால், பல்லவ மன்னனின் படைத்தளபதியாக இருந்த கலப்பகையார் என்பவரை மணமுடித்து வைக்க பெரியவர்கள் நிச்சயம் செய்தார்கள்.

குடும்பமே மகிழ்வாக இருந்த இந்த தருணத்தில் தீடிரென நோய் வாய்ப்பட்ட புகழனார், மறைந்தார். அக்கால வழக்கப்படி அவரது மனைவியார், மாதினியார் உடன்கட்டை ஏறி உயிர் நீத்தார். (இந்த உடன்கட்டை ஏறும் வழக்கம் 18ம் நூறாண்டில் பிரிட்டிஷ் காலனித்துவ அரசால் தடை செய்யப்பட்டது)

அந்த நிலைமையில் போருக்காக, யுத்தகளம் சென்றிந்த கலப்பகையார் அங்கே வீரமரணம் அடைந்தார் என்ற துரதிஸ்ட்ட செய்தியும் வந்து சேர்ந்தது.

கலப்பகையாரை தனது கணவனாகவே நினைத்திருந்த திலகவதியார் தனது உயிரை துறக்க முனைந்தார். ஆனால், தன்னை தனியே விட்டு செல்லவேண்டாம் என மருணீக்கியார் தனது தமக்கையாரிடம் கெஞ்சினார்.

தன்னை தனியே விட்டு போக வேண்டாம் என கெஞ்சும் தம்பி

தனது சிறுவயதான தம்பி, தவித்து போவாரென வருந்திய திலகவதியார், அவருக்காக உயிர் வாழ நினைத்தார். ஒரு தமக்கையார் அன்று முதல், தனது தம்பியாரின் தாயானார்.

இளமையானவராக இருந்த போதிலும் திலகவதியார், ஒரு துறவியாகவே, சிவபெருமானின் தீவிர பக்தையாகவே வாழ்ந்தார். இவரது மேன்மையான துறவத்துவ வாழ்க்கை சேக்கிழார் பெருமான் தொகுத்த பெரியபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 63 நாயன்மாரில் இருந்த பெண் நாயன்மாரில் ஒருவராகவும், திலகவதியார் உள்ளார்.

இளமையிலேயே வாழ்க்கையின் நிலையாமை குறித்து தெளிவுடன் இருந்த மருணீக்கியார், பொது தொண்டு சேவைகளில் ஈடுபட்டு வந்தார். அவ்வாறு ஈடுபடுகையில் சமண சமயத்தாரின் தொடர்புகள் உண்டானது. அவர்களது, ‘அகிம்சா’ என்னும் வழக்கம் குறித்து ஆர்வம் கொண்டார். நாளடைவில் சமண சமய துறவிகள் அவரை தமது மதத்தினை ஏற்றுக் கொள்ள வைப்பதில் வெற்றி கண்டனர்.

சமண சமயத்தினை சேர்ந்த மருணீக்கியார், பெயரை தருமசேனர் என மாற்றி அமைத்து கொண்ட சமணர்கள் அவரை இன்றைய தென் ஆற்காடு பகுதியில் இருந்த பாடலிபுத்திரம் என்னுமிடத்தில் இருந்த சமண துறவிகள் பாடசாலைக்கு அனுப்பினர். அங்கே அவர் சமண சமய சாத்திரங்கள் அனைத்தையும் கற்றிந்தார் . 

தனது தம்பியார் சைவ சமயம் நீங்கி மதம் மாறி சமண சமயம் சேர்ந்த செய்தி அறிந்து திலகவதியார் மிகவும் மனம் வருந்தினார்.

தான் பிறந்த ஊரினை விட்டு நீங்கி, திருவதிகை வீரட்டானம் என்னும் ஊர் சென்று குடியேறி, அங்கே ஒரு மடத்தினை அமைத்துக் கொண்டார். அங்கிருந்த சிவாலயத்தில் இருந்த இறைவனார் வீரட்டானேசுவரர் இடம் தமது தம்பியார் மருணீக்கியார் குறித்து முறையிட்டு அழுது புலம்பினார். தனது தம்பியினை காத்து அருளுமாறு கோரினார்.

சிவபெருமானும், ஒருநாளிரவு அவரது கனவில் தோன்றினார். ‘மகளே, உனது தம்பி, மதம் மாறுவதற்கு முன்னரே செய்த பெரும் சேவைகளினாலும், தவத்தினாலும் எனது பேரருளை பெற்று உள்ளதால், அவரது மனதினை மாற்றி, அவரை தடுத்து, மீண்டும் நமது வழிக்கு கொண்டு வருவோம், கவலையினை விடுக’ என்று கூறி மறைந்தார்.

சமணர்கள் உடன் இருந்த தருமசேனருக்கு திடீரென வயிற்றுவலி உண்டாக்கியது. சமணர்கள் தமக்கு தெரிந்த மருத்துவம் அனைத்தையும் செய்து பார்த்தார்கள். வலி நீங்கவில்லை. மேலும் அதிகரித்தது. அவர் விரைவில் இறந்து விடுவார் என கருதி சமணர்கள் அவரை கவனிக்காமல் நீங்கினர். அந்த நிலையில் தனது தமக்கையாரால் மட்டுமே தன்னை சிறப்பாக கவனிக்க முடியும் என நினைத்தார். யாருக்குமே சொல்லாமல் கிளம்பி தமக்கையாரை சென்றடைந்தார்.

மருணீக்கியார் தமக்கையாரின் காலில் விழுந்து தன்னை காக்குமாறு அழுதார். இது இறைவனின் திருவிளையாடல் என அறிந்த திலகவதியார், சிவபெருமான் அருளால் அவர் குணமடைவார் என ஆறுதல் கூறினார்.

நோயுற்ற தம்பியின் நெற்றியில் திருநீறு பூசும் அக்கையார்

அவரது நெற்றியில் விபூதியினை பூசி, அவருக்கு சிவமந்திரத்தினை உச்சரித்தார். அவரை பிடித்திருந்த பிறமத இருள் நீங்கி, தெளிவு அடைந்தார் அவர்.

வீரட்டானேசுஸ்வரரிடம் பாடி சரணடையும் நாவுக்கரசர்

திலகவதியார், தனது தம்பியார் மருணீக்கியாரை அழைத்துக் கொண்டு, அருகில் இருந்த வீரட்டானேசுஸ்வரர் கோவிலுக்கு சென்றார். அங்கே “இறைவனை வணங்கிய மருணீக்கியார் தனது அறியாமை குறித்தும், சிவ பெருமைகளை மறந்து பிறமதம் ஒன்றினை தழுவிவியத்துடன், தனக்காக உயிர் வாழ்ந்த தமைக்கையாரினை, தனியே விட்டு சென்று, பெரும் பாவம் செய்தமை குறித்தும் வருந்தி தன்னை மன்னித்து அருளுமாறு, கண்ணீர் விட்டு புலம்பி அழுதார். இதோ மீண்டும் வந்து விட்டேன் என கூறி, தன்னை மன்னித்து ஏற்று, காத்து அருள் செய்யுமாறும், இறைவனின் திருக்கமல பாதங்களை இனி தனது நெஞ்சில் போற்றி வைத்திருப்பேன்” எனும் கருத்துப் பட அருமையான பாடல் ஒன்றினை பாடினார்.

பாடலை முடிக்கும் போதே, அவரை வருத்திக் கொண்டிருந்த வலியும் மறைந்தது.

அப்போது ஒரு அசரீரி வானில் இருந்து ஒலித்தது, “இன்று முதல் உனது பெயர் நாவுக்கரசர் என விளங்கும். உனது பெயர் உலகம் முழுவதும் பரவி நிலைத்திருக்கும்” என்று கூறியது. (உண்மையில் இன்றும் கூட அவர் பெயரை நாம் வாசித்து உச்சரிக்கிறோம், அவர் பாடிய பாடல்களை தினமும் பாடுகிறோம் அல்லவா)

இவ்வாறாக, சிவபெருமானின் கருணையினால், நாவுக்கரசரின், சைவசமயம் மீதான நம்பிக்கை மீளுறுதி செய்யப்பட்டது. திலகவதியார் மிகவும் மகிழ்வடைந்தார். நாவுக்கரசர் அனுதினமும் சிவமந்திரத்தினை கூறி சிவ பக்தராகவே வாழ தலைப்பட்டார்.

தருமசேனரின் நோயினை குணப்படுத்த முடியாமையினால், அவர் தமக்கையாரிடம் மீளவும் சென்று, சைவமதம் மீண்டு குணமாகி கொண்டமை குறித்து, பாடலிபுரத்தில் இருந்த சமணர்கள் கவலை அடைந்தனர். இது குறித்து அரசர் அறிந்து கொண்டால், தமது நிலைமைக்கு குந்தகம் ஆகும் என கருதினர். ஆகவே அவர்கள் புனைகதைகளை சோடித்து, நாவுக்கரசர், அரசருக்கும், அரச மதமான சமணத்துக்கும் பெரும் துரோகம் செய்துவிட்டார் என்று அரசரிடமே கோள் மூட்டி முறையீடு செய்தார்கள்.

அரசரும், நாவுக்கரசரை இழுத்து வந்து தன் முன்னால் நிறுத்துமாறு தனது அமைச்சர்களிடம் உத்தரவு இட்டார். அமைச்சர்கள், நாவுக்கரசரிடம் சென்று அரசரின் உத்தரவினை சொன்ன போது, “அமைச்சர்களே, நாம் இப்போது அரசரின் குடியில்லை, மாறாக எம்பெருமான் சிவனாரின் குடியாவேன். அரச மதத்தில் இருந்து விலகுவது என்பது அடுத்தவர்களுக்கு அரச துரோகமாக இருக்கலாம். ஆனால் எமக்கோ, அவ்வாறு இல்லை, ஏனெனில் நாம் யமனிடம் இருந்து மார்கண்டேயரினை காத்த  இறைவனின் முழு பாதுகாப்பில் இப்போது இருக்கிறோம்” என்று கூறினார்.

அமைச்சர்கள் அவரது பெருமைகளை புரிந்து கொண்டாலும், அரசரின் உத்தரவு படி, அவர் இல்லாமல் திரும்பி சென்றால், தாம் பிரச்சனைகளுக்கு உள்ளாகலாம் என்பதால், பெரும் கருணை கொண்டு தம்முடன் வந்து அரசரினை சந்தித்து, அவரது, சைவசமயம் குறித்த கருத்தினை மாற்றிவிட முயலலாமே என கூறி, அவரை தம்முடன் வர உடன்பட வைத்தனர்.

ஆயினும் நாவுக்கரசரை பார்த்தவுடனே, கோபம் தலைக்கேற, தனது அருகாமையில் இருந்த சமணர்களை அழைத்து, நாவுக்கரசருக்கான தண்டனையினை முடிவு செய்யுமாறு கூறினார். அவர்களும், நாவுக்கரசரை பெரும் வெக்கை மிக்க, சுண்ணாம்புக் கால்வாய்க்குள் ஏழு நாட்கள் அடைக்க உத்தரவு இட்டனர்.

அங்கேயே ஏழு நாட்கள் இருந்தால், வெக்கை தாளாமல், உணவு, தண்ணீர் இல்லாமல் அவர் இறந்து விடுவார் என அவர் நினைத்திருந்தனர். ஆயினும், இறைவன் மேலே மனதினை நிறுத்தி, சிவமந்திரத்தினை உச்சரித்துக் கொண்டு இருந்தார், நாவுக்கரசர். ‘மாசில் வீணையும், மாலை மதியமும்’ என்னும் பாடலையும் பாடினார்.

இறைவனின் பெரும் கருணையினால் சுண்ணாம்புக் கால்வாய், குளிமையான, மென்காற்று வீசும் இடமாக மாறியது.

வெக்கை மிக்க அறை, குளுமையான இடமாகியது

ஏழு நாட்களின் பின்னர் சுண்ணாம்புக் கால்வாயினை திறந்து பார்த்த சமணர்கள், அங்கே உயிருடன், ஆழந்த தியானத்தில் எவ்வித பாதிப்பும் இல்லாமல் இருந்த நாவுக்கரசரை கண்டு திகைத்தனர்.

சமண சமயத்தில் இருந்த போது அவருக்கு கிடைத்த ஆன்மீக பலத்தினால் தான் அவர் உயிருடன் இருக்கிறார் என கூறி, அவருக்கு வேறு பல தண்டனைகளையும் தந்தனர். ஒவ்வொன்றிலும் தீங்கின்றி மீண்ட நாவுக்கரசரை பட்டத்து யாணை கொண்டு இடறி கொல்ல வேண்டும் என அரசரிடம் கூறினார்கள்.

கொல்ல வந்த யானை பணிந்து வணங்கியது

நாவுக்கரசர், யானையினைக் கண்டு பயப்படாது, ஒரு பாடல் ஒன்றை பாடினார். யானை, அவரை சுற்றி வந்து, அவர் முன் மண்டியிட்டு வணங்கியது. யானையின் பாகனோ அதனை உசுப்பி, நாவுக்கரசரை இடருமாறு தூண்ட, யானை மதம் கொண்டு, பாகனை தாக்கி, சுற்றிலும் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சமணர்கள் சிலரையும் தாக்க, மிகுதி இருந்த சமணர்கள் தலை தெறிக்க ஓட்டம் பிடித்தார்கள். அவர்கள் அரசரிடம் சென்று பெரும் அவமானம் அடைந்தமை குறித்து கூறி கதறினார்கள்.

அரசர் பெரும் கவலை அடைந்தார். இறுதியாக ஒரு தண்டனை கொடுத்து விடலாம் என அரசரும், சமணர்களும் முடிவு செய்தார்கள். அதன்படி, நாவுக்கரசரை கல் ஒன்றின் மீது வைத்து, கயிறு கொண்டு இறுக கட்டி, கடலில் வீசி எறிவதன் மூலம், அவரை தண்ணீரில் மூழ்கி சாகடிக்கலாம் என முடிவு செய்து, அவ்வாறே செய்தனர்.

கல்லில் கட்டி கடலில் தள்ளப்பட்டார்

ஆனால் நாவுக்கரசரோ, இறைவனை நினைத்து சிவாயநம மந்திரத்தினை சொல்லியவாறே, “சொற்றுணை வேதியன்” என்னும் பதிகத்தினை பாடினார். பாடலை முடிக்கும் போதே, இறைவனின் பெரும் கருணையினால் அவரை பிணைத்த கயிறுகள் அறுந்து, அவர் இருந்த கல், ஒரு படகு போல அலைகளில் மிதந்து, மிதந்து, திருப்பாப்புலியூர் என்னுமிடத்தில் கரையினை அடைந்தது.

படகு போல மிதந்த கல்

பல்லவ அரசர் வெகுண்டார். இனிமேலும் சமணர்களை நம்பிக் கொண்டிருக்க முடியாது என தீர்மானித்தார். இவ்வாறு நடக்கும் என தெரிந்திருந்த சமணர்கள் அங்கிருந்து ஓடோடி விட்டார்கள். அரசர் விரைந்து சென்று, நாவுக்கரசரின் காலில் விழுந்து தன்னை மன்னிக்குமாறு கோரினார். நாவுக்கரசரும் அவருக்கு திருநீறு வழங்கி ஆசீர்வாதம் செய்து, சிவமந்திரத்தினை உபதேசித்தார். அரசரும் தான் சைவசமயத்தினை தழுவுவதாக அறிவித்து, நாட்டு மக்களும் அவ்வாறே செய்யவேண்டும் என உத்தரவு இட்டார்.

மேலும் அரசர், திருவதிகை எனும் ஊரில், குணபாரவீச்சரம் எனும் பெரும் சிவாலயத்தினை அமைத்தார்.

இறைபலத்துடன் சமணர்களை வென்று, அரசரை, நாட்டினை சைவசமயத்துக்கு திருப்பிய நாவுக்கரசர், ஊர் திரும்புகிறார் என்றவுடன், திருப்பாதிருப்புலியூர் கிராமம் அவரை வரவேற்க விழாக்கோலம் பூண்டது. நாவுக்கரசர் திருப்பாதிருப்புலியூர் சிவாலயத்துக்கு சென்று, தந்தையாக, தாயாக, தமக்கையராக தம்மை பெரும் ஆபத்துகளில் இருந்து காத்து சைவத்தினை மீள் நிலைநாட்டிட பெரும் கருணை செய்த இறைவனுக்கு நன்றி தெரிவித்து, வணங்கினார்.

நாவுக்கரசர் பல சிவாலயங்களுக்கு சென்று இறைவனை வணங்கி, சைவத்துக்கு பெரும் தொண்டு செய்து வந்தார்.

இவ்வாறு கோவில்களுக்கு செல்லும் போதெல்லாம், கோவிலை சுற்றி உள்ள இடங்களில் உள்ள, புதர்கள், புற்கள் போன்றவையினை, கையிலே எப்போதும் கொண்டு செல்லும் உழவாரம் கொண்டு சுத்தம் செய்வார்.

உழவாரம் கொண்டு திருப்பணி செய்தல்

நாவுக்கரசர் சிதம்பரம் சென்று நடராஜரை தரிசிக்க விரும்பினார். சிதம்பரத்தில் இருந்த போது, சீர்காழியில் இருந்த சம்பந்தர் குறித்த பெருமைமிக்க விபரங்களை, அவர் அன்னை உமாதேவியினால் ஆசீர்வாதம் பெற்ற செய்திகளை கேள்வியுற்று, அவரை சீர்காழி சென்று சந்திக்க விரும்பினார்.

நாவுக்கரசர் தம்மை சந்திக்க வருகிறார் என்கிற செய்தி கிடைத்ததும், சீர்காழியின் எல்லைக்கே வந்து அவரை வரவேற்று அழைத்து சென்றார் சம்பந்தர். துறவிகள் வழக்கப் படி, இருவரும் ஒருவர் காலில் ஒருவர் விழுந்து வணங்கி ஆசிகள் பெற்றுக் கொண்டனர்.

வயதான நாவுக்கரசர், சிறுவரான சம்பந்தர் காலில் விழுதல்

இருவருமாக சீர்காழி தோணியப்பர் ஆலயத்துக்கு சென்று வணங்கி, அங்கே சம்பந்தரின் வேண்டுதலில் ஒரு பதிகம் பாடினார்.

பின்னர் திருக்கோலக்கா என்னும் இடத்தில இருந்த சிவாலயத்துக்கு இருவருமாக சென்றார்கள். சேர்ந்து வணங்கியபின்னர் , தனது யாத்திரையினை தொடர விரும்பிய நாவுக்கரசர், சம்பந்தரிடம் விடை பெற்று திருவாவடுதுறை சென்று அங்குள்ள இறைவனை வணங்கி, “இறைவா, இந்த வாழ்வுத்துயரில் இருந்து நீக்கி, என்னை எடுத்துக் கொள்” என்று வேண்டினார்.

அங்கிருந்து சத்திமுத்தம் எனும் ஊருக்கு சென்று அங்குள்ள இறைவனை வணங்கி, “இறைவா, இந்த உயிர், இந்த உடலை விட்டு நீங்க முன்னர், உன் திருப்பாதங்களை என் தலை மீது வைத்தருள வேண்டும்” என வேண்டினார். இறைவனோ, அவரை, திருநல்லூர் வந்தால் அவரது வேண்டுதல் நிறைவேறும் என கூறினார். அவ்வாறே நாவுக்கரசரும் திருநல்லூர் சென்று, இறைவனை வணங்கி வேண்டியது கிடைக்க பெற்றார்.

இவ்வாறு பல ஆலயங்களை வணங்கி, நாவுக்கரசர் திங்களூர் வந்தார். அங்கே அப்பூதி அடிகளை சந்தித்து, பாம்பு தீண்டிய அவரது மகனை பிழைக்க வைத்தார். 

திருவாரூர் தலத்தில், சிவபக்தர்களால், நாவுக்கரசருக்கு பெரும் வரவேற்ப்பு கொடுக்கப்பட்டது. அங்கே இறைவனை தரிசித்த அவர், மனம் பூரித்து, தெய்வீக பேரின்பத்தில் ஆனந்தக்கண்ணீர் வடித்தார்.

பின்னர் பல தலங்களுக்கு சென்று, திருப்புகலூர் என்னும் தலத்தினை அடைந்தார். அங்கே ஆச்சரியமாக சம்பந்தரும் இருந்தார். இருவருமாக இரண்டாவது தடவையாக சந்தித்துக்கொண்டு, அத்தலத்தில் தங்கி இருந்து இறைவழிபாடு செய்தனர். நாவுக்கரசர் வேண்டுதலின், சம்பந்தர் திருவாரூர் சென்று இறைவனை தரிசித்து வந்தார். திருப்புகலூரில் இருவருமாக தங்கி இருந்த போது, நீலகண்டயாழ்ப்பாணர், சிறுதொண்டர், முருகநாயனார் போன்ற பல சிவனடியார்களையும், நாயன்மார்களையும் சந்தித்து இறைவனின் பெருமைகளை பகிர்ந்து கொண்டனர்.

இருவருமாக பின்னர், திருவீழிமிழலை சென்றார்கள். அங்கெ பெரும் பஞ்சம் நிலவியது. மக்களின் துன்பத்தினை கண்டு பெரிதும் மனம் வருந்தினர். இறைவனிடம் புலம்பி, அவரிடம் இருந்து தினமும் இரு பொற்காசுகளை, கிழக்கு, மற்றும் மேற்கு வாசல் படிகளில் வைக்கப்பட்ட நிலையில், நாவுக்கரசர் ஒன்றும், சம்பந்தர் ஒன்றுமாக பெற்று அதனைக் கொண்டு அயலூரில் இருந்து பொருட்கள் வாங்கி மக்கள் பஞ்சம் தீர்க்க உதவினார்கள். விரைவிலேயே மழை வந்து பஞ்சம் தீர, இருவருமாக கிளம்பி சென்றார்கள்.

பின்னர் அவர்கள், இன்றைய வேதாரணியம் பகுதியில், இருந்த திருமறைக்காடு என்னும் இடத்தினை அடைந்தார்கள். அங்கிருந்த கோவில் குறித்து அறிந்து கொண்டார்கள். தேவர்களினால் முன் ஒருகாலத்தில் வணங்கப்படட தலம் திருமறைக்காடு. அங்கே மக்கள் வேத நூல்களை படிப்பதை மறந்து நிறுத்தியதால், தேவர்கள் கோவிலினுள் வருவது நின்று போனது. அவர்கள் உள்ளே செல்ல பயன்படுத்திய கதவு அன்று முதல் பூட்டியவரே இருக்கின்றது எனவும் மக்கள் வேறு ஒரு கதவு மூலமாகவே கோவிலினுள் சென்று வணங்கி வருகிறார்கள் என தெரிந்து கொண்டனர்.

இருவருமாக சென்று பல நூறு வருடமாக பூட்டியிருந்த கதவின் முன் நின்று இறைவனை நினைத்து, நாவுக்கரசர் ஒரு பதிக்கத்தினை பாட கதவு திறந்து கொண்டது. அதன் ஊடாக நுழைந்து இறைவனை வணங்கி வெளிய வந்து, பின்னர் சம்பந்தர் ஒரு பாடலை பாட கதவு மீண்டும் மூடிக் கொண்டது.

சம்பந்தர், அப்பர் இருவருமாக கோவிலுக்கு செல்லுதல்

நாவுக்கரசர் பின்னர், சம்பந்தரிடம் விடை பெற்று, திருவாவடுதுறை சென்று அருகிலுள்ள பழையாறை அடைந்தார். அங்கிருக்கும் வடதலை ஆலயத்தினை தரிசிக்க சென்றார். அங்கே, சமணர்கள், அந்த ஆலயத்தினை கைப்பற்றி அங்கிருந்த சிவலிங்கத்தினை வேறிடம் கொண்டு சென்று ஒளித்து வைத்து, இந்த சிவாலயத்தினை ஒரு சமண கோவிலாக மாற்றி வைத்திருந்தனர். நாவுக்கரசரோ, இறைவனை வணங்கி, “இறைவா, ஒளித்து வைக்கப்பட்டுள்ள சிவலிங்கத்தின் மீளவும் இங்கே என்கண்களால் தரிசிக்கும் வரையில் இந்த இடத்தினை விட்டு ஒரு அங்குலம் கூட நகரேன்”, என்று அவ்வாலயத்தின் முன்னால் அமர்ந்து கொண்டார்.

அரசரின் கனவில் தோன்றிய இறைவன், நாவுக்கரசர் உணவின்றி விரதம் இருக்கும் விபரத்தினை கூறி, சிவலிங்கம் ஒளித்து வைக்கப்பட்டுள்ள இடத்தின் விபரத்தினை சொல்லி, கோவிலில் இருந்து சமணர்களை வெளியேற்றி சிவலிங்கத்தினை அங்கே மீள் பிரதிஷடை செய்வதுடன், நாவுக்கரசர் தனது விரதத்தினை முடிக்க உதவுமாறும் வேண்டிக் கொண்டார்.

துயில் நீங்கி எழுந்த அரசர், மந்திரிகளை அழைத்துக்கொண்டு, குறித்த ஆலயம் சென்று, சமணர்களை வெளியேற்றி, ஒளித்து வைக்கப்பட்டிருந்த இடத்தில இருந்து சிவலிங்கத்தை மீட்டுக் கொண்டு வந்து, ஆலயத்தில் வைத்து அதனை மீண்டும் சிவாலயம் ஆக்கினார். நாவுக்கரசர் மகிழ்வுடன் சிவதரிசனம் செய்து தனது விரதத்தினை முடித்தார்.

திருவண்ணாமலை, காஞ்சிபுரம், காளகஸ்தி (அங்கே கண்ணப்பர் பெருமைகளை குறித்து பாடினார்) போன்ற தலங்களை தரிசனம் செய்த நாவுக்கரசர் அவ்வாறே வடக்கில் இருந்த கைலாசத்துக்கும் செல்ல விரும்பினார். அது மிக நீண்ட தூரத்தில் இருக்கினறது என அவர் அறியவில்லை. ஆகவே அவர் கைலாசம் நோக்கி நடந்து செல்ல தொடங்கினார். காடுகள், மலைகள் என மிகவும் கடினமாக பாதையில் நடந்து சென்றார். கொடிய மிருகங்கள் நெருங்கி வருவதும், அவரை அண்மித்ததும், விலகிச் செல்வதுமாக இருந்தன. நாளாக, நாளாக, வெயிலில், மழையில், குளிரில் அல்லலுற்று, சரியான உணவு இன்றி தளர்வடைந்தார். அவரது கால்கள், முட்கள், கற்கள் தாக்கி காயமடைந்தன. நடக்க முடியவில்லை. இருந்தாலும் தனது பயணத்தினை நிறுத்தாமல், தவன்றும் , உருண்டும் சென்றார். அவரது உடலில் இருந்து இரத்தம் வழிந்தோடியது. காயங்கள் வலிகளை தந்தன.

இருந்தாலும் அவர் தனது பயணத்தினை தீர்க்கத்துடன் தொடர்ந்தார். அவர் கைலாயத்துக்கு சென்று வாழ்வினை முடிக்க நினைக்க, இறைவனோ, அவர் மேலும் பல ஆண்டுகள் வாழ்ந்து, சைவத்தின் பெருமைகளை பாடி, மேலும் தொண்டு செய்யவேண்டும் என விரும்பினார்.

ஆகவே இறைவன் ஒரு வயதான முனிவர் வேடத்தில், தலையில் சடா முடியுடன், உருத்திராட்ச மாலைகளுடன், உடெழுங்கும் விபூதி அணிந்தவராக தோன்றி, நாவுக்கரசர் இருக்கும் இடத்தில், பக்கத்திலே ஒரு சோலையினை தடாகம், பழம் தரும் மரங்ககளுடன் உருவாக்கி நாவுக்கரசர் பக்கத்திலே வந்தார். ‘அன்பரே, எங்கே செல்கிறீர்’ என்று கேட்க, ‘நாம் கைலாசம் செல்கிறோம்’ என்றார் அவர்.

“மனிதரூபத்தில் கைலாசம் செல்ல முடியாதே, நீர் திருப்பி செல்வதே நல்லது” என்று கூறினார் முனிவர்.

“இந்த உடலில் உயிர் இருக்கும் வரை கைலாசம் செல்லாமல் திரும்ப போவதில்லை” என்று கூறி அவரை வணங்கி கொண்டே, நகர்ந்து செல்ல முனைந்தார் நாவுக்கரசர்.

அவ்வாறு நகரும் போது, இறைவனிடம் , தனது உடல் வலியினை, காயங்களை நீக்கி புதிய வலு மிக்க உடலை தந்துவிடுமாறு மனமுருக வேண்டினார்.

அவ்வாறு புதிய உடல் வேண்டுமானால், இந்த சோலையிலுள்ள தடாகத்தில் குளித்து செல்லுமாறு அந்த முனிவர் கூறினார். தான் மனதில் வேண்டியதனை புரிந்து, உடனடியாக பதில் கொடுத்த, முதியவர் இறைவனே என புரிந்த நாவுக்கரசர், அவரை வணங்கி அவர் சொல்லியவாறு தடாகத்தில் இறங்கி, நமசிவாய மந்திரத்தினை சொல்லிக் கொண்டே தண்ணீரில் மூழ்கினார்.

மூழ்கி வெளியே வந்தபோது அவர் தெற்கே பல நூறு மைல்கல் தொலைவில் திருவாரூரில் இருந்த சிவாலயத்தின் ஆலய தடாகத்தில் இருந்தார். தடாகத்தில் இருந்து வெளியே வந்து கோவிலின் உள்ளே சென்ற போது, அவரது கண்ணிலே அன்னை உமையவளுடன், சிவபெருமான் இருக்கும் கைலாய காட்சி தெரிந்தது. அவர்களை சூழந்து சிவசேனையினரும், தேவர்களும் இருந்தார்கள். கைலாய காட்சியினை கண்குளிர கண்டு மெய்மறந்து போனார் நாவுக்கரசர். ஆனந்தக் கூத்தாடினார்.

திருவாருரில், கைலாய காட்சி

பின்னர், நாவுக்கரசர் திருப்பெரும்துறையில் மடம் ஒன்றை அமைத்து அங்கே தங்கி இருந்தார். மதுரையிலே சமணர்களை வாதில் வென்ற சம்பந்தர் திருப்பெரும்துறை வந்தார். அவர் வரும் செய்தி கேள்வியுற்று, விரைந்து சென்ற சம்பந்தர் அறியா வண்ணம், அவரது பல்லக்கினை தூக்கி வந்தவர்களுடன் சேர்ந்து பல்லக்கினை தாங்கி நடந்தார்.

சம்பந்தரின் பல்லக்கினை சுமக்கும் அப்பர்

பெரும்துறை வந்ததும் நாவுக்கரசர் மடத்தினை அடைந்து, வெளியே நின்றவாறே, ‘அப்பரே’ என்று குரல் கொடுத்தார் சம்பந்தர்.

இங்கே இருக்கிறேன் என்று பதில் குரல் கொடுத்தார் அப்பர். திகைத்துப்போன சம்பந்தர், பல்லக்கில் இருந்து குதித்து, அவரது காலில் வீழ்ந்து வணங்கினார். துறவிகளுக்கே உரிய எளிமைக்கு ஒரு உதாரணமாக இது அமைந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் கட்டி அனைத்து அன்பினை பகிர்ந்து கொண்டனர். அந்த நேரத்தில் சம்பந்தர் 10 வயதுக்கு குறைவாகவும், அப்பரோ 80 வயதினை நெருங்கியவராகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

பின்னர் அப்பர் பாண்டிய நாட்டிலே, சைவத்தின் நிலை குறித்து அறிந்து கொள்ள விரும்பி மதுரை கிளம்பி சென்றார். அங்கே பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாற நாயனார், அவர் மனைவி மங்கையற்கரசி நாயனார், அமைச்சர் குலச்சிறை நாயனார் ஆகியோர், அப்பரை சிறப்புடன் வரவேற்றனர். மதுரை சொக்கலிங்க பெருமானை தரிசித்து, அங்கிருந்து ராமேசுவரம் சென்று வணங்கி, திருப்புகலூர் மீண்டார்.

அப்பர் திருப்புகலூரில் இறைதொண்டு செய்து 81 வயது வரை வாழ்ந்து இறைவன் திருவடியினை அடைந்தார்.

Leave a Comment