ஞானக்குழந்தை

தென் இந்தியாவில், சீர்காழி என்னும் ஊர் உள்ளது. நெல்வயல்களும், பூங்காவனங்களும் நிறைந்த அந்த அழகிய ஊரின் மத்தியிலே, தோணியப்பர் என்னும் பெயருடன் சிவபெருமான் குடிகொண்ட, பிரசித்தி பெற்ற திருக்கோவில் இருக்கிறது.

சீர்காழியிலே, சிவபாத இருதயர் என்ற பிராமணர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் சிறந்த அறிவும், ஒழுக்கமும் உடையவர். அவரது மனைவியின் பெயர் பகவதியார். இருவரும் சிவபெருமான் மீது, மாறாத அன்புடனும், பக்தியுடனும் வாழ்ந்து வந்தார்கள்.

அக்காலத்தில், தென் இந்தியாவில் சமண சமயம் பரவி இருந்தது. சமண சமயத்துறவிகளும், மக்களும் சைவ சமயத்தைச் சேர்ந்த மக்களைத் துன்புறுத்தினார்கள்; அவமானப்படுத்தினார்கள். மக்கள் சைவ சமயத்தின் பெருமைகளை மறந்து வாழ்ந்தார்கள்.

சமண சமயத்தவர்கள் செய்யும் கொடுமைகளையும், சைவ மக்கள் அனுபவிக்கும் துன்பங்களையும் கண்டு, சிவபாத இருதயர் மனம் வருந்தினார்.

திருத்தோணியப்பரான சிவபெருமானின் சன்னதியிலே நின்றுகொண்டு, இரு கைகளையும் குவித்து வேண்டினார். ” இறைவா, இந்தச் சீர்காழிப் பதியிலே, சைவ மக்கள் படும் துன்பங்களைக் கண் திறந்து பாரும். சைவ சமயத்தை மீண்டும் இந்த நாட்டில் பரப்புவதற்கு ஒரு பிள்ளையை எங்களுக்குத் தந்தருளும்” என்று மனமுருகிக் கேட்டார்.

சிவபெருமானின் திருவருளினால், பகவதியார் கருவுற்றார். அழகு மிக்க ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

உதய சூரியனைப்போல் அழகுடன் விளங்கிய அந்தப் பிள்ளைக்கு ஆளுடைய பிள்ளையார் என்று பெயரிட்டுப் பெற்றோர் அன்புடன் வளர்த்து வந்தார்கள்.

ஆளுடைய பிள்ளையாருக்கு மூன்று வயதாயிற்று. ஒருநாள் காலையில், சிவபாத இருதயர் வழக்கம்போல் சிவபூசை செய்வதற்காகச் சிவன் கோவிலுக்குப் புறப்பட்டார்.

பிள்ளையும் தந்தையின் பின்னே ஓடிச் சென்றார்.

பிள்ளை தன்னைப் பின்தொடர்வதைக் கண்டு, சிவபாத இருதயர் கோபம் கொண்டார்.

” என் பின்னே வராதே. வீட்டுக்குப் போய் அம்மாவுடன் இரு ” …. என்று அதட்டினார்.

பிள்ளை கேட்கவில்லை. தமது இரண்டு பாதங்களையும் நிலத்தில் மாறி மாறி வேகமாக உதைத்துப் பிடிவாதம் செய்தார். அவரது கால்களில் அணிந்திருந்த சலங்கைகளும், ‘ கலீர், கலீர் ‘ என்று ஒலித்து, அவரது பிடிவாதத்துக்குத் தாளம் போட்டன.

அதைக்கண்ட சிவபாத இருதயருக்குச் சிரிப்பு வந்தது. ” சரி, சரி. … வா .. ” என்று கூறிப் பிள்ளையைத் தம்முடனேயே அழைத்துச் சென்றார்.

திருக் கோவிலுக்குள்ளே செல்ல முன்னர், உடல் அழுக்கு நீங்கும்படி குளிக்க வேண்டும் அல்லவா? சிவன் கோவிலுக்கு அருகிலே அழகிய திருக்குளம் ஒன்று இருந்தது. சிவபாத இருதயர் குழந்தையுடன் அந்தக் குளக்கரையை அடைந்தார்.

பிள்ளையை அந்தக் குளக்கரையிலே இருக்க வைத்தார். ‘ குளிக்கும்போது பிள்ளை தவறிக் குளத்தில் விழுந்து விட்டால் என்ன செய்வது?’ என்று கவலைப்பட்டார்.

அதனால், அங்கிருந்தே கடவுளை வேண்டினார். ” சிவபெருமானே,…. இந்தக் குழந்தையை நீரே உமது பொறுப்பில் காத்துக் கொள்ளும், சுவாமி ” என்று வழிபட்டார். பின்னர், குளிப்பதற்காகக் குளத்துக்குள் இறங்கினார்.

குளிக்கும்போது, சிவபெருமானுக்குரிய மந்திரங்களைச் சொல்லிக்கொண்டே, நீரினுள் மூழ்கி மூழ்கி எழுந்தார்.

தகப்பனையே பார்த்துக் கொண்டிருந்த பிள்ளை, திடீரென்று அவரைக் காணாமல் பயம் அடைந்தார். தந்தை நீரினுள் மூழ்கி விட்டாரோ என்று அஞ்சினார். சுற்று முற்றும் பார்த்தார். யாரையும் காணவில்லை. உதவிக்கு யாருமில்லை.

தமது அழகிய கண்களை உயர்த்திப் பார்த்தார். கோவில் திருக்கோபுரத்தில் இறைவனாகிய சிவபெருமான் உமாதேவியாருடன் நிற்கும் காட்சியைக் கண்டார்.

பிள்ளையின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. ” அம்மையே,… அப்பா …. ” என்று அழத் தொடங்கினார்.

தண்ணீரினுள் மூழ்கிக் குளித்துக் கொண்டிருந்த சிவபாத இருதயருக்கு அந்த அழுகுரல் கேட்கவில்லை.

ஆனால், முற்பிறப்பிலே பெரும் புண்ணியம் செய்திருந்த அக்குழந்தையின் அழுகுரல், உலகத்து உயிர்களுக்கெல்லாம் அன்னையான உமாதேவியாருக்கும், சர்வலோக நாயகனாகிய சிவபெருமானுக்கும் கேட்டது.

குழந்தையின் அழுகுரலைக் கேட்டு அவர்கள் மனம் இரங்கினார்கள்.

அடுத்த நிமிடமே, சிவபெருமான் உமாதேவியாருடன் அந்தக் குழந்தையின் முன் தோன்றினார்.

உலகில் யாருக்கும் காணக் கிடைக்காத அந்தத் திருக்காட்சியைக் கண்டு, பிள்ளை மலங்க மலங்க விழித்து அழுதார்.

சிவபெருமான் புன்னகையுடன் உமாதேவியாரைப் பார்த்தார். ” தேவி,…. இந்தப் பிள்ளைக்கு உன் ஞானப்பாலை ஊட்டு “… என்று அன்புடன் கூறினார்.

அன்னை உமாதேவியார், பிள்ளையின் அருகே வந்தார். தமது திருமுலைப் பாலை ஒரு பொற்கிண்ணத்தில் கறந்து, பிள்ளையை அன்புடன் அணைத்தவாறே, அந்த ஞானப்பாலைப் பிள்ளைக்கு ஊட்டினார்.

அழுகையை மறந்து, பிள்ளை அந்த ஞானப்பாலை ஆவலுடன் பருகினார். அனைத்து உலகங்களுக்கும் அறிவை அள்ளித்தரும் ஞானத்தாயாகிய அந்த உமாதேவியாரின் ஞானப்பாலைப் பருகியவுடனே, பிள்ளையின் அழுகை நின்று விட்டது.

தெளிந்த அறிவைப் பெற்ற தெய்வக் குழந்தையாகி அன்புடன் புன்னகை செய்தார். தேவர்கள், முனிவர்கள் ஆகியோர் ஆயுள் முழுவதும் தவம் செய்தாலும் கிடைக்க அரிதான சிவ ஞானத்தை ஒரே நொடியில் பெற்றுத் திருஞான சம்பந்தராக மாறினார்.

சிவபெருமானும், உமாதேவியாரும் பிள்ளையை ஆசீர்வதித்து மறைந்தனர்.

சிறிது நேரத்தில், சிவபாத இருதயர் குளத்தை விட்டுக் கரையேறித் தமது குழந்தை இருக்கும் இடத்தை அடைந்தார். குழந்தையின் முகத்தில் ஆனந்த பரவசத்தைக் கண்டு ஆச்சரியம் அடைந்தார்.

குழந்தையின் வாயின் இரு ஓரங்களிலும் பால் வடிந்திருந்தது. சிவபாத இருதயர் கடும் கோபம் கொண்டார். ” யார் தந்த பாலைக் குடித்தாய்? ” என்று கேட்டார்.

அந்த ஞானக் குழந்தை பதிலேதும் சொல்லாமல், தெய்வீகப்புன்னகையுடன் நின்றார். அதைக் கண்ட தந்தையின் கோபம் மேலும் அதிகமாயிற்று.

பக்கத்திலே கிடந்த சிறு தடி ஒன்றை எடுத்துக் கொண்டார். பிள்ளைக்கு அருகில் வந்து, தடியை ஓங்கியபடி, ” உனக்கு இந்தப் பாலைத் தந்தவர் யார்? சொல்லு. … இல்லாவிட்டால், அடித்து விடுவேன் ” என்று அதட்டினார்.

சிவஞானக்குழந்தை, தன் புன்னகை மாறாமலே தலையை உயர்த்தினார். கோவில் கோபுரத்திலே அமர்ந்திருந்த சிவபெருமான், உமாதேவியார் திரு உருவங்களை நோக்கினார். சிவபெருமான் தமது திருச் செவிகளிலே அணிந்திருந்த தங்கத் தோடுகள் இரண்டையும் கண்டார்.

வலது கரத்தை உயர்த்தி, அந்தத் திருத்தோடுகளைச் சுட்டிக்காட்டியபடியே, புன்னகையுடன் பாடத் தொடங்கினார்.

“தோடுடைய செவியன் விடையேறி ஓர் 
தூவெண் மதிசூடி 
காடுடைய சுடலைப்பொடி பூசி என் 
உள்ளங்கவர் கள்வன் 
ஏடுடைய மலரான்முனை நாட்பணிந் 
தேத்த அருள் செய்த 
பீடுடைய பிரமாபுர மேவிய 
பெம்மான் இவனன்றே”

மூன்று வயதே நிரம்பிய அந்தச் சின்னக் குழந்தை பாடிய அழகிய தேவாரப் பாடலைக் கேட்டுச் சிவபாத இருதயர் அதிசயமும், ஆச்சரியமும் அடைந்தார். அவரது கையிலிருந்த தடி தானாக நழுவிக் கீழே விழுந்தது. இது இறைவனின் திருவிளையாடலே என்பதை உணர்ந்துகொண்டு, அந்தச் சிவஞானக் குழந்தையை அள்ளி அணைத்துக் கொண்டார்.

திருஞான சம்பந்தப் பெருமான் பாடிய தேவாரப் பாடலைக் கேட்டு விண்ணுலகத்துத் தேவர்கள் பூமழை பொழிந்தார்கள்.

இந்த அதிசயச் செய்திகளையெல்லாம் கேட்டுச் சிவபக்தர்கள் அனைவரும் கோவிலில் கூடினார்கள்.

திருஞான சம்பந்தர் தமது அழகிய, சிறிய பாதங்களை மெல்ல எடுத்து வைத்துத் திருக் கோவிலினுள்ளே நடந்தார். தந்தையும் அவர் பின்னே தொடர்ந்தார்.

சிவபெருமானைப் போற்றும் தேவாரப் பாடல்களைப் பாடியவாறே, சிவன் கோவிலினுள்ளே சென்ற திரு ஞான சம்பந்த மூர்த்தி நாயனார், இறைவனை அன்புடன் வழிபட்டுப் பேரானந்தம் அடைந்தார்.

அன்றுமுதல், சிவபாத இருதயர் தமது புதல்வரைத் தோளில் சுமந்து கொண்டு, பல திருக்கோவில்களுக்கு அழைத்துச் சென்றார்.திரு ஞான சம்பந்தரும் அத் திருக்கோவில்களில் எழுந்தருளியுள்ள இறைவனாரை வணங்கிப் பல தேவாரப் பாடல்களைப் பாடி அருளினார். சிவபக்தர்கள் அவரை வணங்கிப் போற்றினார்கள்.

பிள்ளைகளே, உங்களைப் போன்றே சிறு பிள்ளையாகிய திரு ஞான சம்பந்த நாயனாரைப் பற்றிய மேலும் பல கதைகளைப் பின்னர் படிப்போம்.

 

Leave a Comment