சூழலில் உள்ள திருக்கோவில்

நீங்கள் பல கோவில்களுக்கு உங்கள் பெற்றோர்கள், உறவினர்களுடன் சென்று இருப்பீர்கள். பல விடயங்கள் உங்களுக்கு புரியாமல் இருந்திருக்கும். தேவையான விளக்கங்கள் கிடைக்காமல் இருந்திருக்கலாம்.

கீழே உள்ள விபரங்கள் உங்களுக்கு பல புதிய விபரங்களை தருவதுடன் நீங்கள் அடுத்த முறை கோவிலுக்கு செல்லும் போது, இவை உங்களுக்கு உதவுவதுடன் மிகவும் வேறு பட்ட ஆனந்தமான அனுபவத்தினை தரும்.

கிழே ( – ) குறியீட்டினை அழுத்தி, பதிவுகளின் பெயர் விபரங்களை பார்க்கலாம்.

அன்புக் குழந்தைகளே,

பல வகையான இந்த கோவில்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். தெரு முனையில், அரச மரத்தடியில் அமைந்திருக்கும் சிறு கோயிலில் தொடங்கி வான் உயர்ந்த கோபுரங்களை கொண்ட பெரிய கோயில்கள் வரை பல வகையான கோயில்கள் உள்ளன.

அங்கோர் வாற்: கம்போடியாவிலுள்ள உலகின் மிகப் பெரிய இந்துக் (விஷ்ணு) கோவில்

கோவிலின் கட்டிட கலையிலும் கூட வட இந்திய முறைக்கும், தென் இந்திய மற்றும் இலங்கை முறைக்கும் வித்தியாசம் இருக்கிறது என்பதனை நீங்கள் அவதானித்து இருக்கலாம்.

ஆனால் எல்லாக் கோயில்களுக்கும் அடிப்படை நோக்கம் ஒன்று தான். இறைவனுக்கும், மனிதனுக்கும் பாலமாக விளங்கி, இறைவனையும், மனிதனையும் ஒன்றாக இணைப்பதே கோவில்கள் ஆகும்.

நாம் இறைவனை நமது உள்ளத்தில் தியானித்து வணங்கலாம்.

நமது வீட்டிலேயே இறைவனின் திரு உருவப் படத்தினை அல்லது சிலையினை வைத்து வணங்கலாம். இவ்வாறு இறைவனை நாம் எங்கு வேண்டு மென்றாலும், எப்படி வேண்டுமென்றாலும் வணங்கலாம்.

ஆயினும் கோயிலுக்கு சென்று இறைவனை வணங்குவதே மிகவும் சிறந்தது.

”கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்”

”ஆலயம் தொழுவது சாலமும் நன்று”

ஆகிய பழமொழிகள் கோயில்களின் சிறப்பை விளக்குகின்றது.

கடவுள் இல்லாத இடமே இல்லை. அவர் எங்கும் இருக்கிறார்.

பசுவின் உடலில் உள்ள ரத்தமே பாலாக மாறி நமக்கு கிடைக்கிறது. பசுவின் உடல் முழுவதும் அதன் ரத்தம் பரவி ஓடுகின்றது. ஆயினும் பசுவின் மடியில் இருந்து மட்டுமே எமக்கு பால் கிடைக்கிறது. அதே போல எங்கும் பரவி நிறைந்திருக்கும் இறைவனின் அருளையும், அன்பையும் பெற நாம் கோயிலுக்கு செல்ல வேண்டும். கோவிலில் இறைவனின் கருணையும், அருளும் நிறைந்து இருக்கிறது.

சைவத் திருக்கோயில்கள் ‘சிவாகமம்’ எனும் நூலில் சொல்லப்பட்ட விதிமுறைகளின் படியே அமைக்கப் படுகின்றன. இதனாலேயே நாம் சென்று வணக்கும் திருக்கோயில்கள் ஒரே மாதிரியாக இருப்பதனை காண்கிறோம்.

எனினும் சைவ கோயில்கள், இந்து சமயத்தின் ஏனைய உப பிரிவுகளின் கோயில்களில் இருந்து வேறு பட்டதாக காணப்படும். உதாரணமாக வைஷ்ணவ திருக்கோயில்கள், சைவத் திருக்கோயில்களிள் இருந்து வேறு பட்டதாக காணப்படும்.

 
வட இலங்கையில் ஒரு கோவில்: நல்லூர்
 
வட இந்தியாவில் ஒரு கோவில்: வாரணாசி
 
குஜராத்திலுள்ள சோமநாதர் சிவாலயம்
 
நான்கு கோபுரங்களுடன் மதுரை
மீனாட்சி ஆலயம்

 திருகோயில்களின் அமைப்பு மனித உடலின் அமைப்பை ஒத்ததாக காணப்படுகின்றது.

திருக்கோவில் ஒன்றில் நாம் காணக் கூடிய முக்கிய அம்சங்களை இப்போது பார்போம்.

திருக்கோயிலின் முக்கிய அம்சங்களில் திருக்கோபுரமும் ஒன்று. இது திருக்கோயிலின் முன் வாயிலின் மேலாக நெடிதுயர்ந்ததாக அமைக்கபட்டிருக்கும். எத்திசையிலிருந்தும் , வெகு தூரத்தில் இருந்து பார்க்கும் போதும் நன்கு தெரிய கூடியதாக அமைக்கப்பட்டிருக்கும். 
திருகோபுரத்தில் பல அடுக்குகள் உள்ளன.

இதில் கடவுள் உருவங்கள் அழகான சிற்பங்களாக அமைக்கப்பட்டிருக்கின்றன. மேலும் உலகில் வாழும் மனிதர்கள், பறவைகள்,விலங்குகள் முதலியனவற்றின் உருவங்களும், தேவர்கள், தேவதைகள், வாயிற்காவலர்கள் முதலிய பல உருவங்களும் திருகோபுரத்தில் அழகாக அமைக்கப்பட்டிருக்கின்றன.

உலகில் உள்ள யாவும் கடவுளில் அடக்கம் என்ற உண்மையை எமக்கு புரிய வைப்பதற்காகவே, திருக்கோபுரம் இவ்வாறு அமைக்கப்படுகின்றன.

திருக்கோபுரம் ‘ஸ்தூலலிங்கம்’ என்றும் அழைக்கப்படுகின்றது.
தென்னிந்தியாவிலே தஞ்சாவூர் எனும் ஓர் இடம் உள்ளது. இது தமிழ்நாட்டிலே அமைந்து உள்ளது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், சோழ பேரரசரான முதலாம் ராஜ ராஜசோழன், இங்கே கருங்கல்லினால் ஆனதோர் சிவன் கோயில் ஒன்றை கட்டுவித்தான்.

இக்கோயிலின் 66 மீற்றர் உயரமான திருக்கோபுரம், அதி உயர்ந்த கோயில் கோபுரமாக கருதப்படுகின்றது.

மிக அதிகமாக யாத்திரிகர்களை கவரும் இக்கோயிலின், முற்றிலும் கருங்கல்லினால் ஆன கோபுரம் பல சிறப்பு அம்சங்களை கொண்டது.

இக் கோவிலின் உச்சியில் 339.5kg எடையுள்ள கலசம் வைக்கப்பட்டு உள்ளது. இக்கலசத்தில் 1902 சவரின் நிறையுள்ள தங்க முலாம் இடப்பட்டு உள்ளது.

இப்போது கிடைக்கக் கூடிய பாரம் தூக்கிகள் போன்ற நவீன உபகரணங்கள் இல்லாத அக்காலத்தில். இத்தகைய பாரிய கலசம் எவ்வாறு கோபுரத்தின் உச்சிக்கு கொண்டு செல்லப் பட்டு வைக்கப் பட்டிருக்க முடிந்தது என்பது இப்போதும் ஒரு பெரும் ஆச்சரியத்துக்கு உரிய விடயம் ஆகும்.

ஒவ்வொரு கோயிலிலும் ஓர் அழகிய தேர் இருப்பதனை நீங்கள் காணலாம். இது ரதம் என்றும் அழைக்கப்படுகின்றது. திருக்கோபுரத்தினை போலவே ரதமும் உயர்ந்ததாக அமைக்கப்பட்டிருக்கும்.

ரதத்தில் பெரிய மரத்தாலான நான்கு சக்கரங்கள் பொருத்தப்பட்டிருக்கும்.

கோயில்களின் திருவிழாக்காலங்களில், இறுதி நாட்களில் வரும் தேர்த்திருவிழாவானது மிகவும் முக்கியமான பிரசித்தி பெற்ற நிகழ்வாகும். இத் தேர்த்திருவிழாவன்று இறைவனின் திருவுருவச்சிலையினை தேரின் மைய பகுதியில் வைத்து தேருடன் இணைக்கப்பட்டிருக்கும் நீண்ட இரு கயிறுகளை பக்தர்கள் கூடி கோயிலை சுற்றி வலது புறமாக இழுத்து செல்வார்கள்.

இவ்வாறு தேரில் வீற்றுருக்கும் இறைவனை, தேர்க்கயிறு பற்றி இழுத்து செல்வதன் மூலம் இறைவன் பேரருளைப் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

கோயில்களின் திருவிழாக்காலங்களில், இறுதி நாட்களில் வரும் தேர்த்திருவிழாவானது மிகவும் முக்கியமான பிரசித்தி பெற்ற நிகழ்வாகும். இத் தேர்த்திருவிழாவன்று இறைவனின் திருவுருவச்சிலையினை தேரின் மைய பகுதியில் வைத்து தேருடன் இணைக்கப்பட்டிருக்கும் நீண்ட இரு கயிறுகளை பக்தர்கள் கூடி கோயிலை சுற்றி வலது புறமாக இழுத்து செல்வார்கள்.

 
தேரில் வீ ற்றிருக்கும் தெய்வச்சிலை
 
தேரை இழுக்க தயார் நிலையில் பக்தர்கள்

இவ்வாறு தேரில் வீற்றுருக்கும் இறைவனை, தேர்க்கயிறு பிடித்து இழுத்து செல்வதன் மூலம் இறைவன் பேரருளைப் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். உலகின் எப்பாகத்தில் வாழ்ந்தாலும் தமக்கு பிடித்தமான கோயில் தேர்த்திருவிழாவன்று அக்கோயிலுக்கு யாத்திரையாக சென்று தேர்க்கயிறு பிடித்து இழுப்பதற்காக செல்லும் பக்தர்கள் பலரும் நம்மிடையே இருக்கிறார்கள்.

தமிழ் நாட்டில் திருவாரூர் இன்னும் இடத்தில் உள்ள சிவன் கோயில் தேர்த்திருவிழாவன்று பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் திரள்வார்கள். இந்தியாவின் ஒரிசா மாநிலத்தின் பூரி எனுமிடத்திலுள்ள ஜெகநாதர் கோவில் தேர் திருவிழாவிற்கும் இதேபோல் பெருமளவில் பக்தர்கள் திரள்வார்கள்.

திருவாரூர் தேர்

 
நல்லூர் தேர்

சாதாரண காலங்களில் தேர், கோயிலின் முன்னால் அமைக்கப்பட்டிருக்கும் தரிப்பிடம் ஒன்றில் நிறுத்தி வைக்கப் பட்டு இருக்கும்.

தேர் மனித உடலையும் அதன் உள்ளே வைக்கப்பட்டிருக்கும் இறைவன் ஆத்மாவையும் குறிக்கும்.

ஒவ்வொரு கோயிலிலும் ஒரு குறிப்பிட்ட வகை மரம் ஸ்தல விருட்சமாக வைக்கப்பட்டிருக்கும். (விருட்சம் = மரம்).

ஸ்தல விருட்சம் ஒன்றினை சுற்றி வணக்கும் பக்தர்கள்

சிவன் கோவில்களில் வில்வமரம் அல்லது மாமரம் ஸ்தல விருட்சமாக வளர்க்கப் பட்டிருப்பதைக் காணலாம்.

தென் இந்தியாவிலே, தமிழ் நாட்டிலுள்ள காஞ்சிபுரம் எனும் இடத்தில், ‘ஏகம்பர ஈஸ்வரர்’ எனும் பெயருடன் சிவபெருமானும், ‘காமாட்சி’ எனும் பெயருடன் உமாதேவியும் வீ ற்றிருக்கும் ‘ஸ்ரீ ஏகம்பர ஈஸ்வரர்’ ஆலயம் அமைந்துள்ளது.

உமாதேவியாரின் திரு அவதாரமாக பிறந்த அன்னை காமாட்சி, சிவபெருமானை பிரிந்து இருப்பது குறித்து மன வருத்தம் அடைந்து, அவரை மீண்டும் அடைவதற்காக, ஒரு மாமரத்தின் கீழ், மண்ணினால் ஒரு சிவலிங்கத்தை உருவாக்கி அதன் முன்னால் தவம் இருந்தார் என ‘ஸ்தல புராணம்’ சொல்கிறது.

‘ஸ்ரீ ஏகம்பர ஈஸ்வரர்’ ஆலயத்தில் காணப்படும் ஸ்தல விருட்சமாக உள்ள மாமரம் இதற்கு சாட்சியாக விளங்குகிறது. நான்கு பக்கங்களிலும் கிளைகள் கொண்டதான இம்மாமரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது எனச் சைவ அறிஞர்களால் உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.

நான்கு வகையான சுவைகளை கொண்ட இதன் கனிகள் நான்கு வேதங்களை குறித்து காட்டுவதாக அமைத்திருக்கின்றன.

ஆலயமணி திருக்கோவிலினுள்ளே அமைந்திருக்கின்றது. ஒரு சிறிய கோபுரத்திலும் ஆலயமணி அமைந்து இருக்கும்.

பூஜைகள் ஆரம்பமாகும் போதும், பூஜையின் இறுதியில் கற்பூரதீப ஆராதனை செய்யப் படும் போதும், ஆலய மணி ஒலிக்கின்றது.

ஆலயமணியில் இருந்து கீழே தொங்கி கொண்டிருக்கும் கயிற்றினை இழுத்து பக்தர்கள் மணியோசையை உண்டாக்குகிறார்கள்.

இந்த கம்பீரமான, இனிய ஒலியினை கேட்டு கோயிலின் நாலா பக்கமும் இருக்கும் மக்கள் பூஜை ஆரம்பமாவதனை உணர்ந்து அதனை காண்பதற்க்காக கோவிலுக்கு வருவார்கள்.

பக்தர்களை ”வா…, வா..” என அழைக்கும் கடவுளின் குரலாக ஆலயமணி ஒலிக்கின்றது.

ஆலய மணிக் கோபுரமானது இலங்கை மற்றும் தென் இந்தியாவில் இருக்கக் கூடிய கோவில்கள்ளிடையே காணப்படும் ஒரு முக்கியமான வேறுபட்ட அம்சம் கொண்டதாக இருக்கிறது.

தென் இந்தியாவில், கோவில்களில் ஆலய மணி கோவிலின் ஒரு மூலையில் சாதாரணமாக காணப்படலாம்.

இலங்கை போர்த்துகேயரின் காலனித்துவ ஆட்சிக்கு உட்பட்டிருந்த போது இந்து கோவில்கள் முழுவதுமாக அழிக்கப்பட்டு, இந்து மத வழிபாடு தடை செய்யப்பட்டு இருந்தது.
அதே வேளை ஆலய மணிக் கோபுரத்துடன் கூடிய கத்தோலிக்க ஆலயங்கள் பல நிர்மாணிக்கப் பட்டன.

போர்த்துகேயரின் பின்னர் வந்த ஒல்லாந்தர்கள் தமது ஆட்சியின் இறுதியில், பிரித்தானியர்களின் அச்சுறுத்துதல்களை எதிர் கொள்வதற்காக, உள்ளூர் மக்களது ஆதரவினை பெறுவதற்காக இந்து கோவில்கள் கட்டுவதற்கு அனுமதித்தனர்.

அவ்வாறு மீண்டும் அமைக்கப் பட்ட கோவில்கள், கத்தோலிக்க ஆலயங்கள் போன்று ஆலய மணிக் கோபுரத்துடன் அமைக்கப்பட்டன. இந்த ஐரோப்பிய கட்டிட கலை சேர்ந்த முறையானது பின்னர் பிரித்தானியர்களின் காலத்திலும், இப்போது ம் கூட தொடர்கின்றது.

 

aathy koneswaram temple trinco
 
கிழக்கு மற்றும் வட இலங்கையில் உள்ள கோவில்கள்
இரு கோவில்களிலும் ஆலயமணிக்கோபுரம் காணப்படுகின்றது.

திருகோயிலுக்கு வெளியே, கோயிலுக்கு அருகாமையாக திருக்குளம் அமைந்திருக்கும். இது தீர்த்தக்குளம் எனவும் அழைக்கப்படும்.

கோயிலுக்கு வரும் பக்தர்கள், கோயிலினுள்ளே செல்லுமுன்னர் குளித்து அல்லது முகம், கை, கால் ஆகியவற்றைக் கழுவிச் சுத்தமாக்கிக் கொள்ள இக்குளம் பயன்படுகின்றது. பக்தர்கள் குளத்தினுள் இறங்கி நீராடுவதற்கு வசதியாகத் திருக்குளத்தின் நாலா பக்கமும் படிகள் அமைக்கப்பட்டிருக்கும்.

சில திருக்குளங்களில் தாமரை, அல்லி முதலிய மலர்ச்செடிகள் வளர்ந்திருக்கும்.

திருவிழா காலங்களில் தேர்த்திருவிழாவிற்க்கு அடுத்த நாள் வரும் ‘தீர்த்த திருவிழா’ அன்று இறைவனின் திருவுருவச் சிலை இத் திருக்குளத்தில் நீராட்டுவார்கள்.

 

பின்னணியில் நான்கு கோபுரங்களுடன் மதுரை மீனாட்சி ஆலயத்தின் ‘பொற்தாமரைக்குளம்’.

கோயிலினுள்ளே ஒரு கிணறு அமைந்திருக்கும். இது திருமஞ்சன கிணறு எனப்படும்.
அந்தணர்களும், பக்தர்களும் தினமும் கடவுளுக்கு பூஜை, அபிஷேகம் செய்வதற்கும், பிரசாதம் தயார் செய்வதற்கும் 
மற்றும் கோயிலினை சுத்தம் செய்வது தொடர்பான தேவைகளுக்கும் இக்கிணற்றில் இருந்து பெறும் தண்ணீரைப் பயன் படுத்துவார்கள்.

முற்றிலும் இறைகாரியங்களுக்காகவே இக்கிணற்றுத் தண்ணீர் பயன் படுத்தப்படுவதனால் பொது மக்கள் இக்கிணற்று நீரை குளித்தல் போன்ற காரணங்களுக்காக பயன்படுத்துவதில்லை.

எனினும் குழாய் வழியாக தண்ணீர் பெறும் இன்றைய காலக்கட்டத்தில் நகர்புற கோவில்களில் இது போல் கிணறுகள் அவசியமில்லை. ஆயினும் கிராமங்களில் இருக்கக் கூடிய கோவில்களில் கிணறுகள் கட்டாயமாக காணப்படலாம்.

திருக்கோயிலின் முக்கியமான அம்சமான திருநந்தவனம் கோயிலின் ஒரு பக்கத்தில் அமைந்து இருக்கும். இது பல வகையான பூச்செடிகளும், பழ மரங்களும் வளரும் பூந்தோட்டம் ஆகும்.

பூந்தோட்டத்தில் அடியார்கள்

நறுமணம் மிக்க மல்லிகை, முல்லை, ரோஜா முதலிய பூச்செடிகளும் தோடை, மா, பலா, வாழை முதலிய பழ மரங்களும் இங்கு வளர்க்கப்படும். இங்கிருந்து பறிக்கப்படும் பூக்களை பூஜைக்குப் பயன்படுத்துவார்கள். அழகிய மாலைகளைத் தொடுத்து இறைவனுக்கு அணிவிப்பார்கள். பழ மரங்களில் இருந்து கிடைக்கும் பழங்கள் இறைவனுக்கு அபிஷேகம் செய்யவும், பஞ்சாமிர்தம் தயாரிக்கவும் பயன்படும்.

 
தட்சனாமூர்த்தி மற்றும் பிள்ளையார் சிலைகளுடன்கூடிய அழகிய பூந்தோட்டம்,
இறைவன் திருக்கோவில், ஹவாய்.

திருக் கோயிலில் மூலஸ்தானத்தினை சுற்றியதாக உள்வீதி அமைந்திருக்கும். இதனை அடுத்து உயரமான மதிற்சுவர் அமைந்திருக்கும். இந்த மதிற்சுவருக்கு அடுத்ததாக கோயிலை சுற்றி வெளி வீதி அமைந்து இருக்கும்.

கோயில் வழிபாட்டின் கடைசியாக பக்தர்கள் உள்வீதியில், வலது புறமாக ஒருமுறையாயினும் அல்லது மூன்று முறையாயினும் வலம் வந்து வணங்குவது வழக்கமாகும்.

வெளி வீதி சுவாமி வலம் வருவதற்காக அமைக்கப்பட்டுள்ளது. திருவிழாக்காலங்களில் இறைவனின் திருவுருவச் சிலையை ரதத்தில் வைத்தோ, யானையில் வைத்தோ அல்லது பக்தர்கள் தங்கள் தோள்களில் சுமந்தோ இவ்வீதியில் வலம் வருவார்கள்.

 

பக்தர்கள் தங்கள் தோள்களில்….

யானையில்….

இறைவனுக்கு நேர்த்தி வைத்த, சில பக்தர்கள் தமது நேர்த்திக் கடனை நிறை வேற்றுவதற்காக பல முறை இந்த உள்வீதி வலம் வருவார்கள். (பார்க்க: நேர்த்தி வைத்தல்). மேலும் சிலர் வெளிவீதியில் சுவாமி வலம் வரும் போது, பின்னே பிரதட்டை எனும் நேர்த்கிக்கடன் செய்வார்கள்.

தேரின் பின்னே பிரதட்டை செய்கிறார்கள்

தமிழகத்தில் மதுரை எனும் புகழ் பூத்த நகரம், மீனாட்சி அம்மன் திருகோவிலினை மையப் புள்ளியாக கொண்டதோர் மிகப் பெரும் வெளிவீதியில் அமைந்ததாக காணப்படுகின்றது.

தமிழகத்தில் உள்ள இன்னுமோர் பெருமை மிக்க திருத்தலமான ‘திருவண்ணாமலை’ ஒரு மலையின் அடிவாரத்தில்அமைந்து உள்ளது. ஒவ்வொரு முழுநிலா தினத்திலும் இரவில் பால் போன்ற நிலவொளியில் பல லட்சக் கணக்கான பக்தர்கள் இம்மலையை சுற்றி 14 km நீளமான வெளி வீதியில் வலம் வருவார்கள்.

ஜில்லென்ற தென்றல் மென்மையாக வீச, முழு வட்ட பௌர்ணமி நிலவின் பால் ஒளியில் பரவசத்துடன் சுற்றிவரும் போது மலையை மிகப் பெரிய சிவலிங்கமாக கருதி வணங்கி வலம் வருவார்கள். இது ‘கிரிவலம்’ என அழைக்கப்படுகின்றது.

‘கிரிவலம்’ வரும் பக்தர்கள்

திருவண்ணாமலையும் ஆலயமும்

திருக் கோபுரத்துக்கு கீழே கோயிலின் முன் வாசல் அமைந்து இருக்கிறது. வாசலினைத் கடந்து முன்னே சென்றால் வாயிலுக்கு நேர் முன்னதாக, வாயிலினை நோக்கியவாறு கர்ப்பகிரகம் அமைந்து இருக்கும். இது மூலஸ்தானம் எனவும் அழைக்கப்படும்.

அங்கே, அக்கோவிலுக்கு உரிய கடவுளின் திருவுருவச்சிலை அமைந்து இருக்கும்.

சிவன் கோவிலாயின் சிவபெருமானின் திருவுருவச்சிலை அல்லது சிவலிங்கம், விஷ்ணு கோவிலாயின், மஹா விஷ்ணுவின் திருவுருவச்சிலையும், விநாயகர் கோவிலில் விநாயகப் பெருமானின் திருவுருவச்சிலையும், முருகன் கோவிலில் வேல் அல்லது முருகப் பெருமானின் திருவுருவச்சிலையும் அமைக்கப்பட்டு இருக்கும்.

கோவிலின் வெவ்வேறு பகுதிகளில், நவக்கிரகங்கள், சண்டேசுவரர், துர்க்கை போன்ற விக்கிரகங்களையும் (உருவச்சிலைகள்) காணலாம். மேலும் கோவிலில் அர்த்த மண்டபம், சபா மண்டபம் போன்றனவும் காணப்படும். இவற்றில் பல்வேறு இயல், இசை, நாட்டிய நிகழ்வுகளும் நடைபெறும். கோவிலில் காணப்படக் கூடிய கல்யாண மண்டபத்தில், பக்தர்களின் கல்யாண விழாக்களும் நடைபெறும்.

கர்ப்பக்கிருகத்திலுள்ள மூலவிக்கிரகத்துக்கு எதிரே, அக்கடவுளின் வாகனம், கர்ப்பக்கிருகத்தையே நோக்கியபடி அமைந்திருக்கும்.

சிவன் கோயிலாயின் எருது வாகனம் ( நந்தி தேவர் ), முருகன் கோயிலாயின் மயில் வாகனம், விஷ்ணு கோயிலாயின் கருட வாகனம், அம்பாள் கோயிலில் சிங்க வாகனம், விநாயகர் கோயிலில் மூஞ்சூறு வாகனத்தையும் நாம் இவ்வாறு காண முடியும்.

கோவிலின் பிறிதொரு பகுதியில் மடப்பள்ளி அமைந்து இருக்கும். இது சமையல் செய்யும் அறையாகும். இறைவனுக்கு நைவேத்தியம் செய்வதற்க்காக, பொங்கல், சுண்டல், அவல், லட்டு போன்றன இங்கே தயார் செய்யப்படும்.

சில கோவில்களில் பசு மாடுகள் வளர்க்கப் படும். இதிலிருந்து கிடைக்கும் பால், அபிசேகத்துக்கும், பிரசாதம் தயாரிக்கவும் பயன்படுத்தப்படும். சில கோவில்களில் யானைகள் வளர்க்கப் படுகின்றன. பக்தர்கள் தமது தோல் மீது வைத்து சுவாமியை வெளிவீதி வலம் வருவது பற்றி மேலே பார்த்தோம். அதே போல் சுவாமியை யானை மீது வைத்து வீதி வலம் வருவதற்காக இந்த யானைகள் பயன்படும்.

விஷ்ணு கோவில் யானை

சிவன் கோவில் யானை

 

முருகன் கோவில் மயில்

பிள்ளைகளே,

இதுவரை நாம் பார்த்தது, ஒரு கோவிலில் நாம் பார்க்கக் கூடிய பொதுவான அம்சங்கள் ஆகும். இந்தியாவிலும், இலங்கையிலும் உள்ள பெரிய கோவில்களில் நாம் இவற்றை எல்லாம் பார்க்க முடியும்.

மேலை நாடுகளில் உள்ள திரு கோவில்களில், இட வசதி குறைவு காரணமாக, மேலே உள்ள எல்லா அம்சங்களையும் நாம் காண முடியாது. எனினும், எச் சிறு கோவிலாயினும், அங்கே கட்டாயமாக, மூலஸ்தானம் அமைந்து இருப்பதனை காணமுடியும்.

நாம் அடுத்து கோவிலுக்கு செல்லும் முறை மற்றும் அங்கு வழிபடும் முறை பற்றியும் பார்ப்போம்.

Leave a Comment