நாம் வணங்கும் தெய்வங்கள்

மும் மூர்த்திகள்: சிவபெருமான்

“உலகெல்லாம் உணர்ந்து ஓதுதற் கரியவன்நிலவுலாவிய நீர்மலி வேணியன்அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான் மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவோம்”

சிவபெருமான் - அழிக்கும் கடவுள்

இந்து சமயத்தின் ஆணிவேராக விளங்குவது சைவ சமயமாகும். சைவசமயம் சிவபெருமானை முழுமுதற் கடவுளாக கொண்டது. சிவபெருமானை முழுமுதற் கடவுளாக கருதி வழி படுபவர்கள் ‘சைவர்கள்’ என அழைக்கபடுகிறார்கள்.

தென் இந்தியாவிலும், இலங்கையிலும் மற்றும் மலேசியா, சிங்கபூர், பிஜி, தென் ஆபிரிக்கா, மொரிசியஸ், கரிபியன் முதலிய நாடுகளில் சைவர்கள் அதிகமாக வாழ்கிறார்கள்.

அண்மை காலத்தில் பெருமளவில் சைவ இந்துகள், வட அமெரிக்க, ஐரோப்பிய சமூக, ஸ்கண்டினேவிய நாடுகளிலும் மற்றும் ஆஸ்திரேலிய , நியூசிலாந்து போன்ற நாடுகளிலும் குடியேறி வாழுகின்றார்கள்.

வேதங்களும் புராணங்களும் மும்மூர்த்திகள் பற்றி எமக்கு விளக்குகின்றன. சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவரும் மும் மூர்த்திகள் என்று அழைக்கப் படுகின்றார்கள்.

பிரம்மதேவர் ஜீவராசிகளை படைக்கின்றார். மஹா விஷ்ணு அந்த ஜீவராசிகளை ஆபத்திலிருந்து காக்கின்றார். சிவபெருமான் அந்த ஜீவராசிகளை, உலகங்களையும் அழிக்கின்றார்.

நாம் இவ்வுலகில் பிறப்பதற்கு முன்னரே, எம்மை படைக்கும் பிரம்மதேவரின் தொழில் முடிந்து விடுகிறது. அதாவது நாம் ஆணா? பெண்ணா?, எங்கே, யாருக்குப் பிள்ளைகளாக பிறக்கின்றோம் என்பதனை அவர் தீர்மானித்து முடித்து விடுகின்றார். எனவே நாம் பிறந்த பின்னர் அவருக்கும் எமக்கும் அதிக தொடர்புகள் இருப்பதில்லை.

இவ்வுலகில் பிறந்து விட்ட நாம் துன்பங்களில் இருந்தும், ஆபத்துகளிலிருந்தும் காக்கப்பட வேண்டும் என்பதற்காக மஹா விஷ்ணுவை வணங்குகின்றோம். மஹா விஷ்ணுவை முழு முதற் கடவுளாக வழிபடுபவர்கள் ‘வைஸ்ணவர்கள்’ என அழைக்கப்படுகின்றார்கள்.

இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் எமது வாழ்வு எப்போது, எவ்வாறு முடிவுக்கு வரும் என்பதனை தீர் மானிப்பவரே சிவபெருமான் ஆவார். அவரே மரணத்தின் மூலம் எமது இவுலக வாழ்வை முடித்து வைப்பவர் ஆவார். ஆகையால் அவரை அழிக்கும் கடவுள் என்கின்றோம்.

இதில் ஆச்சரியமான விடயம் என்னவெனில், படைக்கும் பிரம்மனை வணங்காமல், அழிக்கும் சிவனை அதிகமாக வணகுகின்றோமே, அது ஏன்? என்பது தான்.

பெற்றோர்களால் ஒரு குழந்தையை இந்த உலகத்துக்கு கொண்டு வரலாம், அதாவது எப்போது ஒரு குழந்தையை பெற்று எடுக்கலாம் என்பதைத் தீர் மானிக்க முடிகின்றது.

நவீன வசதி வாய்புகள், ஒரு குழந்தை கருவில் இருக்கும் போதே அது ஆணா, பெண்ணா என்பதனை துல்லியமாக சொல்ல கூடியதாக இருக்கின்றன. அதே போல் நவீன மருத்துவ வசதிகள் எம்மை பெரும் நோய்களில் இருந்து காத்து எமது வாழ்நாள் காலத்தை அதிகரிக்கின்றன.

ஆனால் சகல உயிர்களுக்கும் நிச்சயமான மரணத்தினை நாம் எப்போது, எவ்வாறு அடைய போகிறோம் என்பதனை எம்மை அழிக்கும் கடவுளாகிய சிவபெருமான் ரகசியமாகவே வைத்திருக்கின்றார்.

ஒருவர் விபத்து ஒன்றில் மரணமாகலாம். இன்னுமொருவர் கடும் நோயினால் மரணமாகலாம். வேறு ஒருவரோ திடிரென மாரடைப்பால் மரணமாகலாம். இது எப்போது நேரக்கூடும் என்பது இறைவனை தவிர வேறு எவருக்கும் தெரியாது.

இந்து சமய தத்துவங்களின் படி, புண்ணியங்களை அதிகமாக செய்தவர்கள், மரணத்தின் பின் சொர்க்கத்தில் இறைவனின் பாதங்களை அடைவார். பாவங்களை அதிகமாக செய்தவரோ நரகத்துக்கு அனுப்பப்படுவர்ர். குறைந்தளவு பாவம் செய்தவர்களோ, அவற்றின் பலாபலன்களை தீர்த்து விடுவதற்க்காக மீண்டும் இப்ப பூமியில் பிறப்பு எடுப்பார்.

இவ்வாறு பிறப்பவர்கள் தமது முற்பிறப்பில் செய்த பாவ புண்ணியங்களின் அளவை பொறுத்து, ஏழைகளாகவோ, வசதி படைத்தோர்களாகவோ அல்லது நாட்டை ஆளும் அரச குடும்பத்திலோ பிறக்கின்றனர். இன்னும் சிலரோ வாழவின் பெரும் பகுதியினை சிறையிலேயே முடித்து விடுவர்.

ஆகவே இந்துகள் தம்மை மீண்டும், மீண்டும் இப் பூமியில் பிறந்து துன்பமடைய வைக்காமல் முற்பிறவிப் பாவங்களை நீக்கி சொர்க்கத்தில் இறைவன் திருவடிகளை அடையும் பேரின்பத்தை தருமாறு வேண்டியே சிவபெருமானை வணங்குகின்றனர்.

இவ்வாறு முற்பிறவிப் பாவங்களை நீக்குமாறு கோரி வணங்கி நிற்கும் இந்துகள் இப்பிறப்பில் புதிதாக பாவம் எதனையும் செய்ய மாட்டார்கள் அல்லவா?

சிவபெருமான் அழித்தல் என்னும் தொழிலை செய்பவராக கருதப்பட்டாலும், அவர் கருணையே உருவானவர். தன்னை நம்பி வணக்கும் பக்தர்கள் துன்பப்படும் போது அவர் பலவித உருவங்களில் தோன்றி அவர்களுக்கு அருள் புரிகின்றார். இது போன்ற சம்பவங்களை புராணங்கள் விரிவாக எடுத்து உரைக்கின்றன.

சிவபெருமானுக்கு ஹரன், திருநீலகண்டன், உருத்திரன், உமாமகேஸ்வரர், பரமேஸ்வரன், சம்பு, முக்கண்ணன் என்பது போன்ற பல வேறு பெயர்களும் உண்டு.

சிவபெருமானின் துணைவியார் உமாதேவி. இவர் பார்வதி தேவி என்றும் அழைக்கப்படுகின்றார். இவர் வீரத்துக்கு தலைவி. இவர்களது பிள்ளைகள் பிள்ளையாரும், முருகப் பெருமானும் ஆவர். பிள்ளையார் அறிவையும், முருகப்பெருமான் ஆற்றலையும் குறிக்கும் உருவங்களாக விளங்குகின்றனர்.

சிவபெருமான், உமாதேவி, பிள்ளையார், முருகப்பெருமான் ஆகிய நால்வரும் சேர்ந்து குடும்பமாக தோன்றும் அழகிய காட்சி, உலக மக்களுக்கு குடும்ப வாழ்வின் சிறப்பை உணர்த்துவதாக விளங்குகிறது. மேலும் இத்தெய்வ குடும்பத்தில், இத் தெய்வங்களின் வாகனங்களான எருது, பாம்பு, சிங்கம், மயில், மூஞ்சூறு முதலியன தங்கள் வேற்றுமைகைளையும், பகைமையும் மறந்து நட்புடன் காணப்படுகின்றன. இறைவன் சந்நிதியில் எல்லா உயிர்களும் சமம் என்ற உண்மையை இக்காட்சி நமக்கு உணர்த்துகின்றது.

சிவபெருமான், உமாதேவி, முருகப்பெருமான் ஆகிய மூவரும் சேர்ந்து தோன்றும் அழகிய காட்சி, ‘சோமாஸ்கந்த மூர்த்தம்’ எனப்படும்.

சிவபெருமானின் வாகனம் எருது. இவர் ‘நந்திதேவர்’ என அழைக்கபடுகின்றார். சிவன் கோவில்களில், கர்ப்ப கிரகத்துக்கு எதிரே நந்திதேவரின் சிலை அமைந்து இருப்பதை காணலாம்.

சிவலோகத்தில் இருந்து பிரபஞ்சத்தில் உள்ள அணைத்து உயிர்களுக்கும் அருள் புரியும் சிவபெருமானும் பார்வதி தேவியும் இவுலகத்தின் மிக உயர்ந்த மலையாகிய கைலாய மலையில் வீ ற்றிருந்தே பூலோகத்தில் வாழும் எமக்கும் ஏனைய உயிர்களுக்கும் அருள் புரிவதாக புராணங்கள் கூறுகின்றன. சிவனுக்கு தொண்டாற்றும், சிவகணங்களும், முனிவர்களும், சிவலோகத்தில் அவரது பாதாரவிந்தங்களில் வாழும் பெரும் பாக்கியத்தை பெற்றுள்ளார்கள்.

சிவபெருமான் அன்பே உருவானர்களாக விளங்குகின்றார். அவரது சிவந்த, பொன்னிற மேனி முழுவதும் திருநீறு பூசி வெண்மையாக விளங்குகின்றது. அவரது நெற்றியிலே ஞானகண் எனப்படும் மூன்றாவது கண் அமைந்து உள்ளது. கழுத்தில் பாம்பை மாலையாக அணிந்து கொண்டிருக்கிறார். தலையில் பிறைசந்திரனை அணிந்து இருக்கிறார். தலையில் உள்ள உச்சி கொண்டையில் கங்கா தேவி அமர்ந்து இருக்கிறார்.

இடுப்பிலே புலித்தோலை ஆடையாக உடுத்தி இருக்கிறார். புலி ஆசைகளை குறிக்கிறது. ஆசைகளை வென்றவர் என்பதை விளக்கவே சிவபெருமான் புலியின் தோலை ஆடையாக அணிந்து இருக்கிறார்.

சிவபெருமானை நாம் பல்வேறு உருவங்களில் வழிபடுகின்றோம். அவற்றை பற்றி இப்போது பார்ப்போம்.

சிவலிங்கம்

பெரும்பாலான சிவன் கோவில்களில் கர்ப்ப கிரகங்கள் எனப்படும் மூலஸ்தானந்தினுல் சிவபெருமானை சிவலிங்க உருவத்தில் வழிபடுகின்றோம். சிவலிங்கம் சிறந்த தத்துவங்களை கூறும் திருவுருவம் ஆகும்.

ஆவுடையார் எனும் கீழ்ப்பகுதி உமாதேவியராகிய சக்தியையும் அதில் நாட்டப்பட்டுள்ள லிங்கம் சிவனையும் குறிக்கும். சிவன், சக்தி ஆகிய இருவரினது இணைவினாலே அணைத்து உலகங்களும் தோன்றின என்னும் உயர்ந்த கருத்தை சிவலிங்க உருவம் விளக்குகின்றது.

சிவலிங்கம் எப்படி உருவாகியது? இதனை விளக்க ‘சிவமகாபுராணம்’ என்னும் நூல் அழகியதொரு கதையை நமக்கு கூறுகின்றது.

இப் பிரபஞ்சம் உண்டாகிய காலத்தில் மகாவிஷ்ணுவிற்கும், பிரம்மதேவனுக்கும் இடையே ஒரு வாக்குவாதம் உண்டானது. தமக்குள் யார் பெரியவர் என்று அவர்களுக்குள் கேள்வி எழுந்தது. இருவரும் தத்தம் பெருமைகளை கூறி தாமே பெரியவர் என்று வாதிட்டனர்.

வாதம் முடிவில்லாமல் தொடர்ந்த போது திடீர்ரென, அவர்கள் இருவருக்கும் இடையே பிரமாண்டமான ஜோதி உருவம் ஒன்று நெருப்பு தூணாக எழுந்தது. அந்த ஜோதியின் ஆரம்பமும் முடிவும் தெரியவில்லை.

சண்டையிட்ட இருவரும் மலைத்து நின்றார்கள். அந்த ஜோதியின் ஆரம்பத்தையும் முடிவையும் கண்டு கொள்வது எனத் தீர்மானித்து கொண்டார்கள்.

மகாவிஷ்ணு மிகவும் பெரிய பன்றியாக உருவம் எடுத்து கொண்டார். ஜோதியின் அடி பாகத்தை கண்டு வருகிறேன் என்று கூறி, நிலத்தை குடைந்து கொண்டு கீழே சென்றார். பிரம்மதேவனோ அழகிய அன்ன பறவையாக உருவம் எடுத்து கொண்டார். அந்த ஜோதியின் உச்சி பகுதியை பார்த்து விடுவேன் என்ற தீர்மானத்துடன் மேலே பறந்து சென்றார்.

பன்றியால் ஜோதியின் அடிப்பகுதியை கண்டு பிடிக்க முடியவில்லை. அன்னபறவையால் ஜோதியின் உச்சிப் பகுதியை கண்டு பிடிக்க முடியவில்லை. இருவரும் களைத்துப் போனார்கள். களைப்புடன் திரும்பி வந்த இருவரும் ஒற்றுமையாக நின்று அந்த ஜோதியை வணங்கினார்கள். “எங்கள் இருவரை விட நீரே பெரியவர். நீர் யார்?” என்று கேட்டார்கள்.

அப்போது, அந்த அக்கினி லிங்கத்தினில் இருந்து, ‘லிங்கோற்பவர்’ ஆகிய சிவபெருமான் வெளிப்பட்டு அருள் புரிந்தார்.

சிவலிங்கம் பெரும்பாலும் உலோகங்களால் அல்லது கருங்கல்லினால் அமைக்கபட்டு இருக்கும். ‘ஸ்படிகம்’ என்னும் பளிங்கினால் ஆன சிவலிங்கங்களும் உள்ளன. இந்த ஸ்படிகக் கல், இந்தியாவில் உள்ள நர்மதா எனும் நதியில் தானாக உருவாகிறது.

மேலும் இமய மலை பகுதியில், அமர்நாத் எனும் இடத்தில், ஒரு குகையினுள்ளே, பனியினாலான சிவலிங்கம் உருவாகின்றது.

தென் இந்தியாவில், ‘தஞ்சாவூர்’ என்னும் திருத்தலத்தில் ‘இராஜராஜ சோழன்’ என்னும் அரசன் கி.பி 1010 ம் ஆண்டில் கட்டுவித்த பெரிய சிவன் கோவில் உள்ளது. கருங்கல்லினால் கட்டப்பட்ட இக்கோயில் மிக அழகானது.

இக்கோயிலில் மிகவும் பெரிய சிவலிங்கம் காணப்டுகின்றது. இச்சிவலிங்கம் 13 அடி உயரமானது.

நடராஜமூர்த்தி

அனைத்து உலகங்களையும் ஆட்டிப் படைக்கும் இறைவனாகிய சிவபெருமான் ஒரு காலைத் தூக்கி ஆடும் நிலையே நடராஜ மூர்த்தி உருவமாகும்.

தென் இந்தியாவிலே, சிதம்பரத்தில் உள்ள சிவன் கோவில் நடராஜ விக்கிரகம் பல சிறப்புகள் வாய்ந்தது.

இயற்கையாக நாம் காணும் சகல பொருட்களும், சகல உயிர்களும் இயங்கி கொண்டே இருக்கின்றன. சூரியன் சுழன்று ஒளியையும் வெப்பத்தையும் தருகின்றது. சூரியனைச் சுற்றி நாம் வாழும் பூமியும், ஏனைய கிரகங்களும் வட்ட பாதையில் சுழன்று வருகின்றன.

வெற்று கண்களால் பார்க்க முடியாத மிக சிறிய அணுக்களினுள்ளே இருக்கும் எலக்ட்ரோன்ஸ் எனப்படும் மிகச் சிறிய துணிக்கைகள் மட்டற்ற வேகத்துடன் சுழன்று கொண்டிருக் கின்றன என்று விஞ்ஞானிகள் நிரூபித்திருக்கின்றனர்.

இவ்வாறு இயற்கையில் நாம் காணும் யாவும் ஓர் ஒழுங்கு முறைப்படி இயங்குவதற்கு சிவபெருமானின் திரு நடனமே ஆதாரமாக விளங்குகின்றது.

சிவபெருமான் சாந்தமூர்த்தியாக ‘ஆனந்த நடனம்’ ஆடுகின்றார். கொடியவர்களின் தீமைகளை பொறுக்க முடியாமல், அவர்களை அழித்து ஒழிக்க புறப்படும் போது, கடும் கோவத்துடன் ‘உக்கிர தாண்டவம்’ ஆடி அவர்களை அழிகின்றார்.

நடராஜ மூர்த்தி நான்கு கரங்களுடன் காட்சியளிக்கின்றார். அவரது கரங்களில் உடுக்கை, நெருப்பு, மான் ஆகியன காணப்படுகின்றன.

தட்சிணாமூர்த்தி

அழிக்கும் கடவுளாகிய சிவபெருமான், உலகத்து உயிர்களுக்கு எல்லாம் சிவஞானத்தை அறிவிக்கும் ஞானகுருவாகவும் காட்சி தருகின்றார். இந்த சிறப்பான உருவம் ‘தட்சிணாமூர்த்தி’ எனப்படுகின்றது.

சைவத் திருக்கோவில்களில் நாம் தட்சிணாமூர்த்தி உருவத்தை கண்டு வணங்கலாம். கோயில்களில் தெற்கு திசை நோக்கி அமர்ந்திருக்குமாறு தட்சிணாமூர்த்தி உருவம் அமைந்திருகின்றது.

கல்லினால் ஆன ஆலமரத்தின் கீழே, தட்சிணாமூர்த்தி யாகிய சிவபெருமான் கருணையே உருவானவராக, அமைதியாக அமர்ந்திருக்கின்றார்.

இறைவன் வலது கையால் சின் முத்திரை காட்டி மௌனமாக அமர்ந்திருக்கின்றார். அவரது காலடியில் அமர்ந்திருக்கும் நான்கு முனிவர்களும், மௌனகுருவின் உபதேசத்தை பெற்று வணங்குகின்றார்கள்.

அர்த்த-நாரீஸ்வரர்

சிவபெருமான் அர்த்த நாரீஸ்வரர் என்னும் உருவத்திலும் காட்சியளிக்கின்றார். (அர்த்த = பாதி; நாரி = பெண்) இந்த உருவத்தில் அவர் பாதி ஆணாகவும், பாதி பெண்ணாகவும் காணப்படுகின்றார். ஆண் உருவம் சிவபெருமானையும், பெண் உருவம் பராசக்தியாகிய உமா தேவியாரையும் குறிக்கின்றது.

சக்தி இல்லையேல் சிவம் இயங்க முடியாது என்னும் சிறந்த தத்துவத்தை விளக்கவே அவர் இந்த அற்புதமான உருவத்தில் காட்சியளிக்கின்றார்.

இயற்கையில் இப்படி ஆணும் பெண்ணும் ஒரே உருவமாகக் காணப்படுவதில்லையே என்று சிலர் கேட்கலாம். ஆனால் நம் தோட்டங்களிலே காணப்படும் பூக்களே இத் தத்துவத்துக்கு அரிய உதாரணமாக விளங்குகின்றன.

பூக்களிலே ஆண்பாகம், பெண்பாகம் என்பன சேர்ந்தே காணப்படுகின்றன. அவற்றின் சேர்க்கையினாலே காய்களும், பழங்களும் நமக்கு கிடைக்கின்றன.

சிவபெருமானை வழிபடும் சைவர்கள் நெற்றியிலும், தோள்கள், கைகள், மார்பு முதலிய அங்கங்களிலும் ‘திருநீறு’ பூசி கொள்கின்றார்கள். மூன்று சமாந்தர கோடுகளாகத் திருநீறு அணிந்து கொள்கிறார்கள்.

புனிதமான பசுவின் சாணத்திணை நெல்லின் உமியுடன் சேர்த்து எரித்து பெறப்படும் சாம்பலே திருநீறு ஆகும்.

அரசனாக வாழ்ந்தாலும், ஆண்டியாக, பரம ஏழையாக வாழ்ந்தாலும் உயிர் போனபின் உடலானது எரிக்கப்பட்டு ஒரு பிடி சாம்பலாக மண்ணோடு மண்ணாகச் சேர்ந்து விடும் என்பதனை நினைவில் கொண்டு, பாவங்களை செய்வதிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்பதே திருநீறு பூசுவதில் உள்ள தத்துவம் ஆகும்

நீங்கள் அணியக் கூடிய திருநீறு குறித்து மேலை நாடுகளில் பிறமதத்தினை சேர்ந்தவர்கள் ஆர்வத்துடன் கேட்டால், ‘blessing’ என பதில் கூறலாம்.

 

சிவபெருமானுக்குரிய பண்டிகை ‘மகா சிவராத்திரி’ ஆகும்.

சிவபெருமானை வணங்குவதற்குரிய மந்திரம் “ஒம் நமசிவாய” என்னும் பஞ்சாட்சர மந்திரம் ஆகும். இது ஐந்துதெழுத்து மந்திரம் எனவும் அழைக்கப்படும்.

மஹாவிஷ்ணுவின் புகழை பாடிய பன்னிரு ஆழ்வார்கள் போல் சிவபெருமானின் புகழை நான்கு ‘சமய குரவர்கள்’ பாடி உள்ளனர்.

இறைவன் மீது பேரன்பு கொண்டிருந்த அறுபத்தி மூன்று நாயன்மார்களில், அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய இந்த நான்கு சமய குரவர்களது பாடல்கள் பன்னிரு திருமுறைகளாக ஒழுங்கு படுத்தப் பட்டுள்ளன. இந்த அறுபத்தி மூன்று நாயன்மார் வரலாறு குறித்து நாம் பின்னர் படிப்போம்.

ஐந்தெழுத்து மந்திரத்தின் பெருமைகளை விளக்கும் ஓர் இனிய தேவார பாடலை இப்பொது படியுங்கள். இதைப் பாடி அருளியவர் ‘திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார்.

“காதல் ஆகி கசிந்து கண்ணீர் மல்கி

ஓதுவார் தமை நன்நெறிக் குய்ப்பது

வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது

நாதன் நாமம் நமசிவாயவே” 

இந்த இனிய தேவாரப் பாடலை கானொளியில் கேளுங்கள் (இரு தேவாரப் பாடல்கள் உள்ளன)

Leave a Comment