சிவபெருமானும், அனாதைப் பன்றிக்குட்டிகளும்

சிவபெருமானும், அனாதைப் பன்றிக்குட்டிகளும்

தென் இந்தியாவிலே, மதுரை மாநகரத்திற்குத் தெற்கே, சிறிது தூரத்தில், வைகை ஆற்றின் தெற்குக் கரையோரத்திலே குருவருந்ததுறை என்னும் ஊர் ஒன்று இருந்தது. அந்த ஊருக்குச் சற்றுத் தூரத்தில், அடர்ந்த காடு இருந்தது. அந்தக் காட்டில், பலவிதமான மிருகங்களும் வசித்து வந்தன. கொடும் புலி,சிறுத்தை, நரி, ஓநாய், முதலிய மிருகங்களுடன், ஏராளமான பன்றிகளும் அந்தக் காட்டிலே கூட்டம் கூட்டமாக வாழ்ந்து வந்தன.

பன்றிகள் குடும்பம்

அந்தப் பன்றிக்கூட்டங்களுக்கெல்லாம் அரசனாக ஒரு பெரிய பன்றி இருந்தது. அது தனது மனைவியுடனும், பன்னிரண்டு குட்டிகளுடனும் அந்தக்காட்டின் மத்தியில் இருந்த ஒரு குகையில் வாழ்ந்து வந்தது. அந்தப் பன்னிரண்டு குட்டிகளும் சில நாட்களுக்கு முன்னர்தான் பிறந்திருந்தன.

‘கொழுக், மொழுக்’ கென்று பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்த அந்தப் பன்னிரண்டு குட்டிகளையும், அவற்றின் தாயும், தந்தையும் மிகுந்த பாசத்துடன் பாலூட்டிச் சீராட்டி வளர்த்து வந்தன.

இவ்வாறு அவை மிகுந்த அன்புடன் வாழ்ந்து வரும்போது, ஒருநாள் பெரும் சோதனை ஒன்று நேரிட்டது.

அந்தக் காட்டில் வாழ்ந்து வந்த புலி, சிறுத்தை, நரி முதலிய கொடிய மிருகங்கள் அடிக்கடி பக்கத்தில் இருந்த ஊருக்குள் புகுந்து, அங்கு வசித்து வந்த மக்களையும், அவர்கள் வளர்த்து வந்த வீட்டு மிருகங்களையும் காயப்படுத்தியும், கொன்றும் துன்புறுத்தின. இந்தச் செய்தி கேட்ட மதுரை மாநகர மன்னனான (அரசன்) ராஜராஜ பாண்டியன் மக்களைக் காப்பதற்காக வேட்டைக்குப் புறப்பட்டான்.

அரசனின் வேட்டை

மக்களைத் துன்புறுத்தும் காட்டு மிருகங்களை வேட்டையாடுவது மன்னர்களின் கடமைகளுள் ஒன்று. அதன்படி, ராஜராஜ பாண்டிய மன்னன் தனது வீரம் மிகுந்த படைத் தலைவர்களையும், விசுவாசமிக்க படைவீரர்களையும், காட்டில் வழி காட்டுவதற்கு சிறந்த வேடர்களையும், மிருகங்களை விரட்டுவதற்கு திறமை மிக்க வேட்டை நாய்களையும் அழைத்துக்கொண்டு பெரும் படையாக அந்தக் காட்டுக்கு வந்தான்.

அவர்கள் கண்ணில் தென்படும் காட்டு மிருகங்களை எல்லாம் அம்புகளால் எய்தும், வாளினால் வெட்டியும் வேட்டையாடினார்கள். மேலும் சில மிருகங்கள் அவர்கள் விரித்த வலைகளில் சிக்கிக் கொண்டன. கொடிய காட்டு மிருகங்கள் எல்லாம் அவர்களுக்குப் பயந்து நாலா திசைகளிலும் அலறிக்கொண்டு ஓடின.

அந்தக் காட்சியைக் கண்ட பன்றியொன்று தமது தலைவனிடம் ஓடி வந்தது.

“அரசே, ஆபத்து. பாண்டிய மன்னன் இந்தக் காட்டில் உள்ள மிருகங்களைஎல்லாம் வேட்டையாடிக் கொன்று வருகின்றான். இன்னும் சிறிது நேரத்தில், அவனது படைகள் நாம் இருக்கும் இந்த இடத்துக்கு வந்து விடும். நாம் என்ன செய்வது? ” என்று கேட்டது.

பன்றி அரசன் அஞ்சாமல் பதில் கூறியது. ” பன்றிகளே, நீங்கள் பயப்பட வேண்டாம். என் உயிர் உள்ளவரை நான் அவர்களுடன் போராடி உங்களைப் பாதுகாப்பேன்” என்று கூறிய பன்றி அரசன், போருக்கு ஆயத்தமாகியது. தனது கணவன் போருக்குப் புறப்படுவதை அதன் மனைவிப் பன்றி பெரும் கவலையுடன் பார்த்துக் கண் கலங்கியது.

பன்றி அரசனின் போர்

அப்போது, பன்றி அரசன் தனது மனைவியை அழைத்து, “பெண்ணே, எனது குடிமக்களான பன்றிகளைக் காப்பாற்றுவதற்காக நான் பாண்டிய மன்னனுடன் போரிடப் போகின்றேன். இந்தப் போரில் நான் வெற்றி பெறுவேனா, நான் உயிருடன் திரும்பி வருவேனா என்பது நிச்சயமில்லை. ஆகவே, நீ நமது பன்னிரண்டு செல்லக் குட்டிகளையும் அழைத்துக்கொண்டு, வேறு இடத்துக்குச் சென்று விடு. நமது குழந்தைகளைக் காத்துக் கொண்டு இரு ” என்று கூறியது.

அப்போது பெண் பன்றி, ” என் அன்புத் தலைவரே, உங்களை விட்டுப் பிரிந்து நான் ஒரு கணங்கூட உயிர் வாழ மாட்டேன். உங்களுக்குத் துணையாக நானும் போருக்கு வருவேன். உங்கள் எதிரி எனக்கும் எதிரியே. என் உயிர் உள்ளவரை நானும் அவர்களை எதிர்த்துப் போராடுவேன்” என்று கூறித் தானும் போருக்குக் கிளம்பியது.

“பெண்ணே, நமது பன்னிரண்டு குழந்தைகளையும் பார்த்தாயா? நாம் இருவரும் இறந்துபோனால், அவர்களை யார்தான் பாதுகாத்து வளர்ப்பார்கள்? நமது பிள்ளைகள் அனாதைகளாக வாழ வேண்டுமா?” என்று கேட்டது பன்றி அரசன்.

“தலைவா, ‘திக்கற்றவர்களுக்குத் தெய்வமே துணை’. உலகங்களைஎல்லாம் கத்து ரட்சிக்கும் கருணைக் கடலான இறைவன் நமது குழந்தைகளைக் கைவிட்டு விடுவானா? கவலைப்படாமல் வாருங்கள். நாம் மன்னனுடன் போரிட்டு நமது இனத்தைக் காப்பாற்றுவோம்” என்று கூறித் தைரியமாகத் தனது கணவனையும் அழைத்துக்கொண்டு மன்னனின் படைகள் இருக்கும் இடத்தை நோக்கி ஆவேசத்துடன் கிளம்பியது.

சிறிது தூரம் தமது பெற்றோர்களின் பின்னே அழுது கொண்டு ஓடிய அந்தப் பன்னிரண்டு சின்னக் குட்டிகளும், அவர்களின் வேகத்துக்கு ஈடு கொடுத்து ஓட முடியாமல் நின்று, தங்கள் தாய் தந்தையை நினைத்து அழுதுகொண்டிருந்தன.

பன்றி மலை

பன்றி அரசனும், அதன் மனைவியும் ஏராளமான பன்றிகளை அழைத்துக்கொண்டு மன்னனும், அவனது படைகளும் இருக்கும் இடத்துக்குச் சென்று அவர்களை வீரத்துடன் எதிர்த்துப் போரிட்டன. அந்தப் போர் மிகவும் கடுமையானதாகவும், பரிதாபமானதாகவும் இருந்தது. பயங்கரமான ஆயுதங்களுடன் போராடிய படை வீரர்களையும் அவர்களின் வேட்டை நாய்களையும் எதிர்த்து, எவ்வித ஆயுதங்களும் இன்றித் தங்கள் நகங்களாலும், கூரிய பற்களாலுமே பன்றிகள் போரிட்டன.

பாண்டிய மன்னனின் கூரிய அம்புக்கு பன்றி அரசன் பலியானது. தனது தலைவன் கொல்லப்பட்டதைக் கண்ட பெண் பன்றி, பாண்டிய மன்னனுக்கு முன்னே வந்து நின்று கடும் கோபத்துடன் போரிட்டது. பாண்டிய மன்னனின் கட்டளைப்படி, அவனது வேடர் தலைவன் அந்தப் பெண் பன்றியைத் தன் வாளால் வெட்டிக் கொன்றான்.

கணவனும், மனைவியுமான அந்த இரு பன்றிகளும் ஒன்றாக உயிர் துறந்தன.

பன்றி அரசனின் உடல் வீழ்ந்த இடம் ஒரு மலையாகியது. அந்த மலை ‘பன்றி மலை’ என்று அழைக்கப்பட்டது. ( இந்தப் ‘பன்றி மலை’ தற்போதும் அதே பெயரில் அழைக்கப் படுகின்றது.)

பன்றி அரசனும், அதன் மனைவியும் கொல்லப்பட்டவுடனே, அதனுடன் நின்று போரிட்ட ஏனைய பன்றிகள் யாவும், அஞ்சி நடுங்கித் தங்கள் உயிரைக் காப்பாற்றுவதற்காக நாலா திசைகளிலும் சிதறி ஓடின.

பன்றிக் குட்டிகள்

தங்கள் தாயும், தந்தையும் இறந்துவிட்டதை அறியாமல், பால் மணம் மாறாத அந்தப் பன்னிரண்டு இளம் பன்றிக் குட்டிகளும், தங்கள் பெற்றோர்களைத் தேடி அங்குமிங்கும் அலைந்து திரிந்தன. வேறு பன்றிகள் எதிரே வந்தால் அவற்றைத் தங்கள் தாய் தந்தை என்று நினைத்துக் கொண்டு அவற்றின் பின்னே அழுதுகொண்டு ஓடின.

கடுமையான பசியால், நடக்கவும் பலமில்லாமல், தள்ளாடியபடியே, பன்னிரண்டு குட்டிகளும் ஒன்றாகஓரிடத்தில் வாடிக் கிடந்து, தங்கள் தாய் தந்தையை நினைத்துப் பசியுடன் அழுதன.

அந்தப் பிஞ்சுக் குட்டிகள் அழுத பரிதாப ஒலி வானம் வரை கேட்டது.

இறைகருணை

வானவெளியில், தமது துணைவியாரான உமாதேவியாருடன் இடப (காளை) வாகனத்தின் மீது அமர்ந்து பவனி வந்து கொண்டிருந்த சிவபெருமானின் திருச் செவிகளிலும் அந்தப் பரிதாபமான அழுகை ஒலி கேட்டது. உலக அன்னையான உமாதேவியாரும் அந்த அழுகை ஒலி கேட்டுக் கண்கள் கலங்கினார்.

கருணைக் கடலான சிவபெருமான் ஒரு கணங் கூடத் தாமதிக்காமல் மண்ணுலகுக்கு இறங்கி வந்தார். தாய்ப்பாலுக்காகப் பசியுடன் அழுத அந்தப் பன்றிக்குட்டிகளின் பசியைத் தீர்க்க, இறைவன் அந்தக் குட்டிகளின் தாய்ப்பன்றியின் உருவத்தில் அங்கே தோன்றினார்.

தாயாகி பால் தந்த இறைவன்

உலகில் வாழும் சகல உயிர்களுக்கும் தாயும், தந்தையும் (அம்மை அப்பன்) ஆகிய சிவபெருமான், அந்தக் குட்டிகளின் தாயின் வடிவத்தில், கருணையே உருவான ஒரு பன்றித் தாயாக அந்தக் குட்டிகளின் முன்னே வந்து நின்று, குட்டிகளை அதன் தாய் அழைப்பதுபோன்றே அழைத்தார். பசியால் வாடியிருந்த அந்தக் குட்டிகள் பன்னிரண்டும், தாயிடம் ஓடோடி வந்தன.

செல்லமாகச் சத்தமிட்டபடி வந்த அந்தப் பன்றிக்குட்டிகளுக்கு, சிவபெருமான் அன்புத் தாயாகி, அவற்றுக்கு அருகில் நின்று தாய்ப்பால் கொடுத்தார். குட்டிகளும், இறைவன் ஊட்டிய அந்த ஞானப் பாலை அன்புடன், தங்கள் பசிதீரும் வரை குடித்தன.

தெய்வீக ஞானம்

சர்வ ஞானம் படைத்த இறைவன் கொடுத்த ஞானப்பாலைக் குடித்த அந்தப் பன்றிக்குட்டிகளுக்கு, இறைவனின் அருளால், வலிமையும், ஞானமும், நன்மை தீமைகளை ஆராய்ந்து அறியும் நுட்பமான தகுதியும் கிடைக்கப் பெற்றன.

இறைவன் தந்த தெய்வீக ஞானத்தின் மகிமையால், தங்களுக்குப் பால் கொடுத்துக் காத்தவர் இறைவனே என்பதை உணர்ந்துகொண்ட பன்னிரண்டு பன்றிக்குட்டிகளும் அந்தச் சர்வலோக நாயகனின் பாதங்களில் வீழ்ந்து பக்தியுடன் வணங்கின.

இறைவன் அந்தப் பன்றிக்குட்டிகளை ஆசிர்வதித்தார். பின்னர், அந்தக் குட்டிகளுக்கு, முகம் மட்டும் பன்றியினுடையதாகவும், உடல் மனித உடலாகவும் மாற்றி அமைத்து, அவர்களுக்கு அருள் வழங்கி மறைந்தார்.

இதன்மூலம், மூவுலகங்களிலும் வாழும் சகல உயிர்களுக்கும் தாயும், தந்தையும் தாமே என்ற உண்மையைச் சிவபெருமான் அனைவர்க்கும் உணர்த்தினார். 

சிவபெருமான் மறைந்தபின்னர், அந்தப் பன்னிரு பன்றிக்குட்டிகளும் ஞானத்திலும், பண்பிலும் சிறந்த பன்னிரண்டு சூரியர்களாக விளங்கி, அந்தப் பன்றி மலையில் ஒன்றாக வாழ்ந்து வந்தார்கள்.

அதே வேளையில், சிவலோகத்தில், உமாதேவியார் தமது துணைவராம் சிவபெருமானிடத்தில் ஒரு சந்தேகத்தைக் கேட்டார், ” சுவாமி, உலகில் வாழும் மிருகங்களிலெல்லாம் மிகவும் அசுத்தமானதும், அறிவற்றதுமான பன்றிக்குட்டிகளுக்கு இரக்கம் காட்டி அவற்றுக்கு ஞானப் பாலை ஊட்டியது சரிதானா?” என்று கேட்டார்.

சிவபெருமான் அன்புடன் புன்னகை புரிந்தார். “தேவி, உலகில் உள்ள சகல வேதங்களும், ஆகமங்களும், புராண நூல்களும் எம்மைச் சகல உயிர்களுக்கும் அன்பும், கருணையும் காட்டுபவர் என்று கூறிப் போற்றுகின்றன. எம்மைப் பொறுத்தளவில், அறிவுள்ளது – அறிவில்லாதது; அழகானது – அருவருப்பானது; மனிதர் – மிருகம் என்ற பேதமேதும் இல்லை. பால்மணம் மாறாத அந்தப் பன்றிக்குட்டிகள் பசியினால் வாடியபோது அவைகளைக் காப்பது எமது கடமையாயிற்று.

அவற்றுக்குத் தெய்வீக ஞானத்தையும், விவேகத்தையும் எமது பாலுடன் கலந்து ஊட்டினோம். அவை நல்ல அறிவும், ஞானமும், வலிமையும் பெற்று உலகுக்கு ஒளியாக விளங்குகின்றன. இனிமேல், அவற்றைப் பாண்டிய மன்னனின் அரசவையில், மக்கள் போற்றும் மந்திரிகள் ஆக்குவோம். அவர்கள் மன்னனுக்கும், மக்களுக்கும் ஞான வழி காட்டி இறுதியில் நமது சிவலோகத்தை வந்தடைவார்கள்” என்று விளக்கினார்.

மன்னனின் கனவு

அன்றிரவு, சிவபெருமான் பாண்டிய மன்னனின் கனவில் தோன்றினார். ” பாண்டிய மன்னனே, பன்றி மலையிலே, பன்றி முகத்துடன் மனித உடல் கொண்ட பன்னிரண்டு குமாரர்கள் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்கள் எமது ஞானப்பால் அருந்திச் சர்வ ஞானம் கிடைக்கப் பெற்றவர்கள்.

அவர்களை அழைத்து வந்து, உனது அரசவையில் மந்திரிகளாக வைத்துக்கொள்வாயாக. அவர்களின் தெய்வீக ஞானம் உனக்கும், பாண்டிய நாட்டு மக்களுக்கும் நல்வழி காட்டும் ஞான விளக்காக விளங்கும்” என்று கூறி மறைந்தார்.

மறுநாள் காலையில், பாண்டிய மன்னன் தனது அமைச்சர்களையும், பிரதானிகளையும் அழைத்துத் தான் கண்ட கனவைக் கூறினான். தனது அமைச்சர்களையும், பிரதானிகளையும் பன்றி மலைக்கு அனுப்பி, அந்தப் பன்னிரண்டு குமாரர்களையும் அழைத்து வரும்படி செய்தான்.

அவ்வாறே, அந்தப் பன்னிரண்டு குமாரர்களும், மிகுந்த மாலை மரியாதைகளுடன் மதுரை மாநகரத்துக்கு வரவழைக்கப் பட்டார்கள்.

பன்னிரு குமாரர்கள்

பாண்டிய மன்னன் அந்தப் பன்னிரு குமாரர்களையும் பார்த்து, அவர்களின் வரலாற்றைக் கேட்டு, இறைவனின் அற்புதங்களை எண்ணி எண்ணி வியந்தான். அவர்களின் ஞானத்தையும், விவேகத்தையும் பார்த்து அவன் மிக்க வியப்படைந்தான். இறைவன் கூறியபடியே, அந்தப் பன்னிருவரையும், தனது அரசவையில் மந்திரிகளாக்கிக்கொண்டான்.

அந்தப் பன்னிரு குமாரர்களும், அன்பும், அடக்கமும், சிறந்த சிவபக்தியும் உடையவர்களாக அந்த அரசவையில் மன்னனுக்கும் மற்றவர்களுக்கும் வழிகாட்டி வாழ்ந்து, இறுதியில், சிவபெருமான் திருவருளினாலே சிவலோகம் அடைந்தனர். அங்கே, சிவபெருமானுக்கு என்றென்றும் அன்புடன் திருப்பணி செய்யும் சிவகணத் தலைவர்கள் ஆனார்கள்.

Leave a Comment