நாம் யார்?

Welcome to Learnhinduism.org

வணக்கம்.

இந்த தளத்தினை நாம் பல ஆண்டுகள் பெரு முயற்சி செய்து உருவாக்கி உங்கள் முன் சமர்ப்பிக்கின்றோம். இத் தளம் மேலும் வளர்வதற்க்கு உங்கள் பேராதரவையும் கோருவதுடன் உங்கள் குழந்தைகள் இந்த தளத்தினை பயன் படுத்துவதனை ஊக்குவிக்கு மாறு பணிவுடன் கோருகின்றோம்.

தமிழகத்தில் திராவிட அரசியல் கட்சிகளின் கொள்கைகளினால் பாடசாலைகளில் சமையக் கல்வி தடைப்பட்ட அதே வேளை இலங்கையில் 3 வது வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரை இந்து (சைவ) சமையம் ஒரு பாடத் திட்டமாக (Syllabus) கற்பிக்கப்படுவதுடன் இலங்கையின் இப் பாடத்திட்டம் மொரிஷிய, சிங்கப்பூர் பள்ளிகளிலும் பயன்படுத்தப்படுகின்றது.

குறிப்பிட்ட இப்பாடத் திட்டத்திற்கு ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் அவர்களின் பங்களிப்பு முக்கியமானது.

1997ம் ஆண்டில், தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு, ஜேர்மன் ஆகிய மொழிகளில், மிகவும் நேர்த்தியான படங்களுடன் கூடிய நூல் ஒன்றுடன் எமது பயணம் ஆரம்பித்தது. எனினும், லாபத்தினை எதிர்பாரா சேவை ஒன்றில், செலவீனம் மிகவும் அதிகமானதால், அதனை மேலும் இரண்டு நூல்களுக்கு மேல் தொடர முடியவில்லை.

தொழில்நுட்ப முன்னேற்றங்களை தொடர்ந்து, 2007ம் ஆண்டு hindukidsworld.org என்னும் இணைய தளம் ஆரம்பிக்கப்பட்டது.

மறு சீரமைக்கப்பட்ட புதிய தளம் ஒன்று 2011ல் வெளியான நிலையில், இப்போது 2019ல் புதிய தளம் ஒன்றினை வெளியிடுகின்றோம்.

நீங்கள் இந்த முயற்சிக்கு பேராதரவு தருவீர்கள் என்று உளமார நம்புகின்றோம்.

இத்தளத்தில் இரண்டு உறுப்பினர் நிலைகள் உள்ளன. முதலாவது Basic Level – வழமையான கட்டுரைகள், படங்கள் போன்றன வாராந்த ரீதியிலும், இரண்டாவது Standard Level – இது வாராந்த ரீதியில் ஆன வீடியோ மூலமாகவும் கிடைக்கும். இது சிறுவர்களுக்கானது. இலவசமானது.

ஆறுமுக நாவலர் (1822 – 1879) பற்றிய சிறு குறிப்பும் சமர்பணமும்:

பிரித்தானிய காலனித்துவ ஆதிக்கத்துக்கு இலங்கை உட்பட்ட ஆரம்ப காலத்தில் அமெரிக்க கிறிஸ்துவ மிசினரிகள் பல, இலங்கையில், குறிப்பாக யாழ்ப்பாணப் பகுதியில், பல பாடசாலைகளை நிறுவி அதன் மூலமாக ஆங்கில கல்வியினையும் கிற்ஸ்துவ மதத்தினையும் வளர்ப்பதில் மிகுந்த அக்கறை செலுத்தினர்.

இக்காலப் பகுதியில் யாழ்ப்பாணம் நல்லூரில் கந்தப்பிள்ளைக்கும், சிவகாமிக்கும் மகனாக 1822 டிசம்பர் 12ம் நாள் ஆறுமுக நாவலர் தோன்றினார்.

இளமையில் தந்தையிடம் தமிழ், சமஸ்கிருதம் மொழிகளையும் மற்றும் உவெஸ்லியன் மிசன் பாடசாலையில் (தற்போது யாழ்பாணம் மத்திய கல்லூரி) ஆங்கில மொழியும் கற்று 20 வயதிலே தமிழ்ப்பண்டிதராகி, அப்பாடசாலைத் தலைவரான பீற்றர் பேர்சிவல் பாதிரியாருக்கு தமிழ் கற்பிக்கும் ஆசிரியருமாகி, பின்னர் அவரது கோரிக்கைக்கு இணங்கி அதே பாடசாலையில் ஆசிரியரும் ஆனார்.

பாதிரியார் பீட்டர் பெர்சிவல் பைபிளை தமிழில் மொழிமாற்றம் செய்ய விரும்பினார். இப்பணிக்கு ஆறுமுக நாவலரே தகுதியுடையவர் என்று அவர் தீர்மானித்தார். ஆறுமுக நாவலரின் கைதேர்ந்த பைபிள் தமிழ் மொழிபெயர்ப்பு அறிஞர்களை வியப்புறச் செய்தது. இந்த தமிழ் மொழிபெயர்ப்பு இலங்கையிலும், தென் இந்தியாவிலும் பல சைவ தமிழர்களை கிறிஸ்துவராக மாற வழி வகுத்தது.

சைவ சிந்தாந்தத்தில் பற்றுடனும், சிறந்த தெளிவுடன் இருந்த ஆறுமுக நாவலர், ஆங்கிலேயர்களுக்கு முன்னர் ஆண்ட காலனித்துவ ஆட்சியாளர்களான டச்சுக்காரர்களினாலும் போர்துக்கேயர்களாலும் தடை செய்யப்பட்டிருந்து அப்போது தான் வழிபாட்டுக்கான மீள் அனுமதி பெற்ற தனது சொந்த மதமும் பெரும் உதவி வேண்டிய நிலையில் உள்ளதனை உணர்ந்து தமது வேலையை விட்டு நீங்கி, தனது வாழ்வை சைவத்துக்கும், தமிழுக்கும் அர்பணித்தார். 60 க்கு மேற்பட்ட பல புத்தகங்களை வெளியிட்டார்.

யாழ்ப்பாணத்திலும், தென் இந்தியாவில் சிதம்பரத்திலும், ‘சைவப் பிரகாச வித்தியாசாலை’ எனும் பெயரில் பாடசாலைகளை உருவாக்கினார். கோயில்களில் ஆன்மிக உரைகள் நடாத்தி மக்களுக்கு சமய அறிவு மேம்பட வைத்தார். இதன் காரணமாக மதம் மாறுவோர் தொகை வீழ்ச்சி அடைந்தது.

இவர் வெளியிட்ட பாலபாடம், சைவ வினாவிடை போன்றன, மேலே குறிப்பிட்ட இப்பாடத் திட்டத்திற்கும், நமது இச்சிறு முயற்சிக்கு அடிப்படையாக இருப்பதனால் நாம் இந்த இணையதளத்தினை சைவத்துக்கும் தமிழுக்கும் பெரும்தொண்டாற்றி தமிழ் கூறும் நாடெங்கணும் தனக்கிணையில்லதாராய் திகழ்ந்த யாழ்ப்பாணம், நல்லை நகர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்வதில் பெரு மகிழ்வுறுகிறோம்.

www.learnhinduism.org
2011 – 2019

எங்கள் இலக்கு

சிறுவர்களுக்கு அறிவுபூர்வமான, கருத்தாழமிக்க தகவல்கள் மூலம் சமய அறிவை வளர்த்தெடுப்பதே எமது நோக்கமாகும்.

மிகத்தரமான பதிவுகள் மூலமும், வீடியோ பதிவுகள் மூலமும் இதனை வெற்றி கரமாக நடைமுறுத்தலாம் என உறுதியாக நம்புகிறோம்.

எமது நோக்கம்

1997 ஆண்டு முதல் பல ஆண்டுகள் இயங்கி, கிடைத்த அனுபவம் மூலம், இந்த தளத்தினை நாம் பெரு முயற்சி செய்து உருவாக்கி உங்கள் முன் சமர்ப்பிக்கின்றோம். 

 

இளைய தலைமுறையினரை இந்துசமயம் காட்டும் நல்வழியில் வளரும் வகை செய்வதே எமது நோக்கமாகும்.

எமது அடிப்படை அம்சங்கள்

தரமான கட்டுரைகள், இனிமையான கதைகள் மற்றும் தரமான விளக்கப்படங்களுடன் இந்துமதத்தின் அம்சங்களை யாரும் எளிதாக புரிந்து கொள்ள வைப்பதே எமது வழிமுறை.