அன்புக் குழந்தைகளே,
நம்மையும், ஏனைய மனிதர்கள், மிருகங்கள், பறவைகள் மற்றும் சகல உலகங்களையும் படைத்தது காப்பாற்றி வருபவர் கடவுள் ஆவார்.
கடவுள் என்றால் கட+உள் = எல்லாவற்றையும் கடந்தும், எல்லாவற்றுக்கும் உள்ளேயும் நிறைந்திருப்பவர் என்பது பொருள்.
கடவுள் இல்லாத இடமே இல்லை.
சர்வ சக்தி வாய்ந்த கடவுளை நாம் பல உருவங்களில், பல பெயர்களில் வணங்குகின்றோம். சிவபெருமான், மகாவிஷ்ணு, துர்கை அம்மன், காளி அம்மன், சரஸ்வதி தேவி, லஷ்மி தேவி, முருகன், விநாயகர் என்று பல்வேறு பெயர்களில், பல்வேறு உருவங்களில் கடவுளை நாம் வழிபடுகிறோம்.
“இத்தனை உருவங்கள், இத்தனை பெயர்கள் இறைவனுக்கு ஏன்”? என்று கேட்கிறீர்களா? நாம் குடிக்கும் தண்ணீர் திரவமாக இருக்கிறது. அதுவே உறையும் போது பனிக்கட்டி ஆகிறது . கொதிக்கும் போதோ நீராவியாகிறது.
திரவமாக இருக்கும் நீர், குடிக்கவும், குளிக்க, கழுவ, சமைக்க உதவுகிறது, மின்சாரத்தினை பெற உதவுகிறது. நீராவியாக அது இயந்திரங்களை இயக்குகிறது. பனியாகும் போது உணவு பொருட்கள் பாதுகாப்பில் உதவுகிறது.
அது போலவே, சர்வ சக்திகளும் நிறைந்த இறைவனின் பல்வேறு திரு உருவங்களுக்கும், பெயர்களுக்கும் பல்வேறு காரணங்களும், ஆற்றல்களும் உள்ளன.
அவற்றை நாம் இப்பகுதியில் படித்து அறிந்து கொள்ளுவோம்.