ஆண்டாள் கதை

ஆண்டாள் கதை

தென் இந்தியாவின் பக்தி மார்க்கம் மீளெழ வைக்கும் வகையில், சிவபெருமானை புகைந்து பாடிய சைவ சமயத்தின்,  சேர்ந்த 63 நாயன்மார்கள் போலவே, விசுணுவை புகழ்ந்து பாடிய வைஷ்ணவ சமயத்தினை பன்னிரு வைஷ்ணவ ஆழ்வார்களில் ஆண்டாள் மட்டுமே ஒரு பெண் அடியார் ஆவார்.

உண்மையான இறையன்பும், சத்தியமுமே, நமது ஊழ்வினை நீங்கி பேரின்ப பெருவாழ்வினை அடைய வழி வகுக்கும் என்பதனை இந்த நாயன்மார்களும், ஆழ்வார்களும் தமது செய்கைகள், பாடல்கள் மூலம் காட்டி உள்ளனர். இந்த வகையில் இவர்கள், தமிழ் மொழிக்கும், தமிழ் இலக்கியத்துக்கும் பெரும் சேவை செய்துள்ளனர்.

ஆழ்வார் காலமானது கிறிஸ்துவுக்கு முன்னர் 4வது நூறாண்டிலிருந்து 2 வது நூறாண்டுவரை என கருதப்படுகின்றது. ஆண்டாளை நினைக்கும் போது, தமிழ் மாதங்களில் 9வது மாதமான மார்கழி நினைவுக்கு வந்துவிடும்.

தென் இந்தியாவில், தமிழ்நாட்டில், ஸ்ரீவில்லிபுத்தூர் என்னும் ஊரிலே வாழ்ந்து வந்த விஸ்ணுசித்தர் என்பவர், விஷ்ணு பகவானின் பெரும் பக்தர் ஆவார். 

பன்னிரு வைஷ்ணவ ஆழ்வார்களில், இரண்டு ஆழ்வார்கள் ஆகிய ஆண்டாளும், பெரியாழ்வாரும் இந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஊரைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

திருமணம் செய்யாமல் பிரம்மச்சரிய விரதம் கொண்டு, தனது வாழ்வினை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆலய விஷ்ணு பகவானின் சேவைக்கு அர்பணித்திருந்தார் விஸ்ணுசித்தர்.

‘திவ்வியதேசம்’ எனப்படும் 108 வைஷ்ணவ தலங்களுள், இந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஆலயமும் ஒன்றாகும்.

அதிகாலையில் துயில் எழுந்து, காலை கடன்களை முடித்து, அருகில் உள்ள குளத்தில் மூழ்கி குளித்து, பின்னர் பூக்கூடையினை எடுத்துக் கொண்டு, பூந்தோட்டத்துக்கு சென்று விடுவார். காலையில் மலர்ந்து இருக்கும், பூக்களை பறித்து வந்து, பெரும் இறை அன்புடன்  இறைவனுக்கு அழகிய மாலையினை தொடுப்பார்.

இவ்வாறு செய்யும் போது, பக்தி மிக்க கனிவான இறை பாசுரங்களை  பாடிக் கொண்டே இருப்பார்.

மாலை தயாரானதும், அதனை எடுத்துக் கொண்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆலயத்தில் வடபத்திரசாயீ பெருமா ளுக்கு அணிவிற்பதற்காக, விரைந்து செல்வார். ஆலயத்தின் பிரதம குருவிடம் கையளித்து, இறைவனுக்கு அணிவித்தவுடன், பெருமகிழ்வுடன் வணங்கி பாசுரங்களை பாடி, மன மகிழ்வுடன் வீடு திரும்பி, அதன் பின்பே காலை உணவினை உண்பார்.

ஆலயத்தில் இருந்து வெளியே வரும் போது, ‘என்னிடம் மட்டும் தேவையான பொருள் இருந்தால், இந்த ஆலயத்தினை புனரமைப்பு செய்து விடுவேன்’ என நினைத்துக் கொள்வார்.

அனாதையான, ஏழ்மை மிக்க  விஸ்ணுசித்தர், அவ்வாறு ஆசைப்பட மட்டுமே முடியும்.

மதுரையில் இருந்து ஆண்டு கொண்டிருந்த, வல்லபதேவ  பாண்டிய மன்னருக்கு, ஆன்மிக விடயம் ஒன்றில் ஒரு சந்தேகம் ஒன்று எழுந்தது. யாருமே அவர் திருப்தி அடையும் வகையில் விளக்கம் கொடுக்கவில்லை. ஆகவே அரசரும், தகுந்த விளக்கம் தரும் ஒருவருக்கு, தகுந்த சன்மானம் தருவதாக அறிவித்து விட்டார்.

ஒருநாள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த விஷ்ணுசித்தரின் கனவில் தோன்றிய பகவான், மன்னரின் அவைக்கு சென்று, அவரது சந்தேகத்தினை தீர்த்து வைக்குமாறு கூறினார்.

ஒரு சாதாரண ஏழ்மைமிக்க இறைபக்தரான விஸ்ணுசித்தர் பெரிதாக படித்த ஒருவர் அல்ல. அவருக்கு தெரிந்தது எல்லாமே, பூக்களை பறித்து, அதில் மாலை தொடுப்பது மட்டுமே. இறைவனுக்கு முதல் மாலை செய்து கொடுத்த பின்னர், மாலை செய்து விற்று அதில் வரும் சிறு வருமானத்தில் வாழ்ந்து வந்தார் அவர்.

அரசரின் சந்தேகத்தினை தீர்த்து வைக்கும் ஆழ்ந்த அறிவு தம்மிடம் இல்லையே என்று கவலை கொண்டார் அவர். பின்னர், இறைவன் மீது நம்பிக்கை கொண்டு, அரசரை சந்திக்க கிளம்பி செனறார் அவர்.

அவரை அறியாமலே, இறைவன் அருளால், அவரது நாவில் இருந்து அம்புகள் போல சொற்கள் வெளியே வந்தன. அரசரின் சந்தேகமும் தீர்ந்தது. மனம் மகிந்த அரசர் அவருக்கு பெரும் பொருள் தந்து, மிக்க மரியாதை செய்து அனுப்பி வைத்தார்.

விஸ்ணுசித்தர் அந்த பொருளை வைத்து தான் விரும்பியவாறு அந்த ஆலயத்தினை புனரமைத்தார்.

ஒருநாள் காலை வழக்கம் போல, பூக்கள் பறிக்க கிளம்பிச் சென்றார் விஸ்ணுசித்தர். அவரது கவனத்தினை, துளசி மரத்தின் கீழே இருந்த ஒரு குழந்தை ஈர்த்தது. ஆச்சரியத்துடன் சென்று பார்த்த போது, அது ஒரு பெண் குழந்தை என அறிந்து கொண்டார்.

குழந்தையை கையில் எடுத்துக் கொண்டே, அதனை அங்கே விட்டு சென்றது யார் என அங்கும் இங்கும் தேடி பார்த்தார். யாருமே இல்லை. யாரும் அவசரமாக காலை கடன்களை கழிக்க. குழந்தையினை விட்டு சென்று இருப்பார்களோ என்று சிறிது நேரம் காத்திருந்தார். யாருமே வரவில்லை.

என்ன செய்வது என்று சிந்தித்த விஸ்ணுசித்தர், குழந்தையுடன் கிராமத்து பெரியவர்களை சந்தித்தார். அவர்களோ,  ‘ஒருவரும் இல்லாமல் அனாதையாக வாழும் உனக்கு இறைவன் தந்ததே இந்த குழந்தை, அதனை நீயே வளர்த்து எடு’ என்று சொன்னார்கள்.

யாருமே இல்லாமல் தனியே வாழ்ந்து வந்த விஸ்ணுசித்தர், அந்த குழந்தையை தனது வீட்டுக்கு கொண்டு சென்றார். ‘கோதை’ என்று பெயரிட்டு அந்த குழந்தையினை அன்புடன் வளர்த்து வந்தார்.

அந்த குழந்தைக்கு, தாயாகவும், தந்தையாகவும் இருந்து மிகுந்த அன்புடன் வளர்த்து வந்தார் அவர். கோதையும், கிருஷ்ணா, ராமா கதைகளை கேட்டு வளர்ந்து வந்தார். அதனால் அவர் எப்போதும் இறைவனை நினைத்தவாறே வளர்ந்தார்.

ஒரு நாள் காலை வழக்கம் போல பூக்களை பறித்து வந்த விஸ்ணுசித்தர் மாலையினை தொடுத்தார். ஆலயத்துக்கு செல்லும் முன்னர், ஒரு சிறு வேலை காரணமாக வெளியே சென்றார்.

அந்த கணத்தில், அங்கே ஓடி வந்த கோதை, அங்கிருந்த அழகிய மாலையினை கண்டார். அதனை முன்னரும் பார்த்து இருக்கிறார். ஆனால் அது தயாரானதும், விஸ்ணுசித்தர் அதனை எடுத்துக் கொண்டு கோவிலுக்கு கிளம்பி விடுவார்.

இன்று தான் அவர் இல்லையே. இதனை அணிந்து பார்த்தால் எப்படி இருக்கும் என்று நினைத்தார்.  ஒரு ஆவல் உண்டாக்கிற்று.

இறைவனுக்கு அர்ப்பணிக்கும் எதுவுமே மிகவும் புனிதமாக கருதப்படும். இறைவனுக்கு அர்ப்பணிக்கும் முன்னர், அதனை அணிவது, யாருமே செய்யாத ஒரு செயல்.

ஆனால் கோதை வித்தியாசமாக சிந்தித்தாள். இதனை அணிந்து கொண்டால் நான் எப்படி இருப்பேன் என்று 5 அல்லது 6 வயதே ஆன அந்த சிறுபெண் நினைத்தாள்.  

அடுத்த கணமே அதனை எடுத்து கழுத்தினை சுற்றி அணிந்து கொண்டாள். நீண்ட அந்த மாலை, தோலின் இருபுறமாக வீழ்ந்து, நிலத்தினை தொட்டது. அங்கிருந்த கண்ணாடியில் தன்னை பார்த்து ரசித்துக் கொண்டாள்.

‘ம்..ம்ம்ம் நன்றாக இருக்கிறேன் இந்த மாலையில்’ நினைத்துக் கொண்டாள் கோதை. தூரத்தில் தந்தை வரும் சத்தம் கேட்டது. மாலையினை இருந்த இடத்தில அப்படியே வைத்து விடடாள், அவள்.

உள்ளே வேகமாக வந்த விஸ்ணுசித்தர் மாலையினை எடுத்துக் கொண்டு, ‘கோதை, நான் கோவிலுக்கு சென்று இந்த மாலையினை கொடுத்து வருகிறேன், கவனமாக இரு’ என்று கூறி கிளம்பி சென்றார்.

ஏற்கனவே அணியப்பட்ட, புனித்தன்மை இழந்து விட்ட ஒரு மாலையினை, இறைவனுக்கு சமர்ப்பிக்க கொண்டு செல்கிறோம் என அறியாமலே அதனை கொண்டு சென்றார் விஸ்ணுசித்தர்.

மாலை இறைவனுக்கு அணிவிக்கப்பட்டது.

மாலையினை செய்து முடித்து, சிறிது நேரம் விஸ்ணுசித்தர் வெளியே செல்வதும், கோதை மாலையினை அணிந்து, அழகு பார்த்து திருப்பி வைப்பதும் பின்னர் அந்த மாலை வடபத்திரசாயீ  பெருமாளுக்கு அணிவிக்கப்படுவதுமாக நாட்கள் கடந்தன.

கோதை தன மீது கொண்டிருந்த அன்பினை உலகுக்கு காட்டிட விரும்பினார், இறைவன்.

ஒருநாள், தான் கொண்டு வந்த மாலையினை, ஆலயத்தில் பிரதம குருவிடம் கொடுத்து விட்டு அதனை இறைவனுக்கு அணிவிப்பதை பார்க்க தயாரானார் விஸ்ணுசித்தர்.

‘விஸ்ணுசித்தா, என்ன இது’ என்று சத்தமிட்டார்  பிரதம குரு. ‘ஒருபோதுமே இல்லாத புனிதமில்லா நிகழ்வு, இந்த மாலையில் ஒரு நீண்ட தலைமுடி எவ்வாறு வந்தது’ மாலையில் இருந்த தலை முடியினை காட்டியவாறே, ‘புனிதமில்லாத இதனை எடுத்துக் கொண்டு போய் விடு’. என்று சொல்லியவாறே, அதனை விஸ்ணுசித்தர் கையில் திணித்தார் அவர்.

திகைத்துப் போன விஸ்ணுசித்தர், சோர்வாக வீடு திரும்பினார். எப்படி நடந்தது இது என்று குழம்பினார்.

கனத்த இதயத்துடன், சோர்வுடன், அன்றிரவு தூங்க சென்றார். தூக்கம் வரவில்லை. விஸ்ணுசித்தர் மாலை கட்டுவதில் திறமை மிக்கவர். தனது தலையில் அத்தகைய நீளமாக முடி இல்லாத நிலையில் மிகவும் கவனமாக, புனிதமாக தான் கட்டிய மாலையில் தலைமுடி எவ்வாறு வந்தது என்று அவரால் கணிக்க முடியவில்லை. தூக்கம் இல்லாமலே இரவும் கடந்து சென்றது.

காலையில் வழக்கம் போல எழுந்து, பூ பறிக்க சென்றார் அவர். திரும்பி வந்த அவர், பூமாலை ஒன்றை கட்டி, வெளியே வழக்கம் போல சென்றார்.

முதல் நாள் நடந்த விடயங்களை அறியாத கோதை, வழக்கம் போல மாலையினை அணிந்து கண்ணாடியில் அழகு பார்த்தாள். வெளியே போன விஸ்ணுசித்தர், மன சோர்வுடன் இருந்தபடியால், விரைவாக வீடு திரும்பினார்.

அவர் விரைவாக வீடு திரும்பியதை அறியாத கோதை, கண்ணாடியில், மாலையுடன் முன்னும், பின்னும் திரும்பி பார்த்துக் கொண்டிருந்தாள்.

அப்போது தான் உள்ளே வந்த விஸ்ணுசித்தர், அதிர்ந்து போனார்.

‘கோதை’…. என்று பெரும் கோபத்துடன் கத்தினார் விஸ்ணுசித்தர். ‘இறைவா, என்ன ஒரு புனிதமில்லா வேலை இது, இறைவனுக்கு சமர்ப்பிக்கும் மாலையினை நீதானா, நேற்றும் அணிந்தது’, கேட்டார் அவர் மிகவும் கோபமாக.

‘பெரும் பாவம் ஒன்றை செய்து விட்டேன், இதனை எவ்வாறு நீக்கிக் கொள்வது என்று தெரியவில்லை…. ‘நாராயணா, நாராயணா’ என்று தலையில் அடித்துக் கொண்டார் அவர்.

தந்தை கோபம் கொண்டு கத்தியதை ஒருநாளும் பார்த்திராத கோதை, அழத்தொடங்கினார். 

கோதையினை சமாதானப் படுத்த கூடிய நிலையில் விஸ்ணுசித்தர் இல்லை. அந்த மாலையினை தூக்கி வீசி எறிந்தார் அவர். மீதம் இருந்த பூக்களை கொண்டு வேகமாக வேறு மாலை ஒன்றை தயாரித்து, ஓடோடிச் சென்று கோவிலுக்கு சென்று கொடுத்து விட்டு வந்தார்.

அன்று இரவு, குழப்பத்துடனே நித்திரை கொள்ள சென்றார் விஸ்ணுசித்தர். அவரது கனவில் தோன்றிய இறைவன், ‘கோதை அணிந்திருந்த மாலையினை ஏன் தூக்கி வீசினாய்’ என்று கேட்டார். ‘கோதை அந்த மாலையினை அணிந்து கொண்டிருந்ததை இன்று மட்டுமே நீ பார்த்தாய்’. ‘ஆனால் நீண்ட நாட்களாக, அவள் அணிந்து, அனுப்பி வைக்கும் மாலையினையே நானும் மகிழ்வுடன் அணிந்து கொள்கிறேன்’. ‘அந்த பேரன்பு கொண்ட சிறுமி அணிந்து அனுப்பி வைக்கும் மாலையினை மட்டுமே நான் அணிந்து கொள்வேன்’  என்றார் அவர்.

விழித்தெழுந்த விஸ்ணுசித்தர் ஆச்சரியத்துடன் கோதையினை தேடினார். இன்னும் விசும்பிக் கொண்டிருந்தாள் கோதை. அவளருகில் சென்று, அவளை தேற்றி, தான் கண்ட கனவினை சொன்னார் அவர். அழுது சிவந்த கண்கள் வியப்பில் பிரகாசித்தன.

மறுநாள் முதல், தான் ரகசியமா செய்ததை, பெருமையுடன் செய்து அந்த மாலையினை இறைவன் அணியும் வண்ணம் அனுப்பி வைத்தாள்  கோதை.

கோதை, ‘சூடிக் கொடுத்த சுடர் விழியாள்’, எனவும் ஆண்டாள் எனவும்  அழைக்கப்பட்டாள்.

ஆண்டாள் வளர்ந்து வர, விஸ்ணுசித்தர் அவளுக்கு ஏற்ற மணமகன் ஒருவனை தேட தொடங்கினார். சிறுவயதில் இருந்தே விஷ்ணுபகவான் ஆகிய கிருஷ்ணனின், தனது இளம் பிராயத்தில் இளம் பெண்களிடம் குறும்புகள் செய்யும்  கதைகளை கேட்டு வந்த ஆண்டாளோ, கிருஷ்ணனையே தனது மணாளனாக நினைத்துக் கொண்டிருந்தாள்.

‘நான் கிருஷ்ணனான அந்த இறைவனையே மணந்து கொள்வேன்’ என்று சொல்லி எல்லோரையும் ஆச்சரியப்படுத்தினாள், ஆண்டாள்.

இறைவனிடம், தன்னை மணமகளாக ஏற்றுக் கொள்ளுமாறு தினமும் வேண்டிக் கொள்வாள்.

மார்கழி மாதத்தின் அதிகாலை வேளையில், எழுந்து, அதிகாலை குளிரில் குளித்து, தனது தோழிகளுடன், கிருஷ்ணனை துதிக்கும், “திருபாவை” பாசுரங்களை பாடுவதை வழக்கமாக வைத்துருந்தாள், ஆண்டாள்.

விஸ்ணுசித்தர் இன்னும் அதிகமாக தனது மகள் குறித்து கவலை கொண்டார். இறைவனை மணம் செய்யும் சாத்தியம் இல்லாமை குறித்து, அனுபவம் மிக்கவரான அவர் அறிந்த இருந்தபடியால், தனது மகள் தான் நம்புவதில் மிகவும் தீவிரமாக இருப்பது குறித்து கரிசனை கொண்டிருந்தார்.

ஒருநாள் அவர் கனவில் தோன்றிய ஸ்ரீ ரங்கநாதப்பெருமாள், தான் கோதையினை மனைவியாக ஏற்றுக்  கொள்ள விரும்புவதாகவும், அவளை, மணப்பெண்ணாக அலங்கரித்து, ஸ்ரீரங்கம் ஆலயத்துக்கு கூட்டி  வருமாறு கூறி மறைந்தார்.

மிக்க மகிழ்வடைந்த விஷ்ணுசித்தர், வேண்டிய ஏற்பாடுகளை செய்ய தொடங்கினார். செய்தியினை கேள்வி யுற்ற வல்லபதேவ பாண்டிய மன்னர், ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து, ஸ்ரீரங்கத்துக்கான நீண்ட தூர பயணத்தை,   (இன்றைய தூரம் 250 கிமி) கோதை பல்லக்கு ஒன்றில் பிரயாணம் செய்ய கூடியதாகவும், மேலும் தேவையான சீர்வரிசைப்பொருட்களையும், பயணத்துக்கு தேவையான குதிரைகள், யானைகள் போன்றவகைகளையும் ஏற்பாடு செய்தார்.

மணமகள் ஊர்வலம் ஸ்ரீரங்கத்தினை அடைந்ததும், பல்லக்கில் இருந்து இறங்கி வேகமாக ஆலய மூலஸ்தானம் நோக்கி விரைந்து சென்றாள் கோதை. அவளது தந்தையும் ஏனையோரும் பின்னே சென்றனர். மூலத்தானத்தினிலுள் வேகமாக கோதையும் உள்ளே செல்ல, ஒரு பேரொளி ஒன்று தோன்ற, கோதை இறைவனுடன் கலந்து மறைந்தாள்.

அங்கிருந்தவர்கள் அனைவரும் பேராச்சரியம் அடைந்தனர். விஷ்ணுசித்தர் கண்களில் இருந்து கண்ணீர் சொரிந்தது. மகளை இழந்த துயரம் ஒருபுறம், இறைவனே அவளை ஏற்றுக் கொண்ட மகிழ்வு ஒருபுறமாக மெய் மறந்த நிலையில் வெகுநேரம் நின்றார் அவர்.

ஆண்டாள் இறைவியாக அன்று முதல் வணங்கப் படுகின்றாள்.

ஸ்ரீ ரங்கம் ஆலய கோபுரம்

இலட்சுமி மட்டும் ஆண்டாள் உடன் ஸ்ரீ ரங்கநாதர்

குறிப்பு:

கோதை இறைவனுடன் கலந்த போது அவளுக்கு 15வயது இருக்கலாம் என கருதப்படுகின்றது. அந்தக்காலத்தில் சிறுவயது கலியாணங்கள் சாதாரணமானவை.

‘திருப்பாவை’ தவிர, 143 பாசுரங்கள் கொண்ட, ‘நாச்சியார் திருமொழி’ யையும் ஆண்டாள் இயற்றி உள்ளார்.

திருப்பாவை இன்றும் கூட, மார்கழி மாதத்தில், அதிகாலை வேளையில், விஷ்ணு ஆலயங்களில் பக்தியுடன் பாடப்படுகின்றன.

விஷ்ணுசித்தர், தனது மருமகன் என்கிற வகையில், இறைவனை நீடூழி வாழ்க வென வாழத்திப் பாடி பாசுரங்கள் இயற்றி உள்ளார். இவர் பெரியாழ்வார் என அழைக்கப்பட்டார்.

தமிழ்நாடு அரசின் இலச்சினையில், ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரத்தினை காணலாம்.

Leave a Comment