அப்பூதி அடிகள் நாயனார்

அப்பூதி அடிகள் நாயனார்

சோழ வள நாட்டின், திங்களூர் என்னும் ஊரில் பிறந்தவர், அப்பூதி அடிகள். இன்றைய தமிழகத்தின், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள இந்த திங்களூர் கிராமமானது அங்குள்ள சைவசமயத்தவரின் முழுமுதற் கடவுளான சிவபெருமானின், புகழ் மிக்க கைலாசநாதர் ஆலயத்தின் காரணமாக பிரசித்தி மிக்கதாக உள்ளது.

அப்பூதி அடிகளின் குடும்பமானது, ஆலயங்களில் வேத மந்திரங்களை ஓதுபவர்களாக இருந்தார்கள். அப்பூதி அடிகள் சிவபெருமானின் பெரும் பக்தராக இருந்த அதேவேளை, தனது மானசீக குருவாக அப்பரை (திருநாவுக்கரசு நாயனார்) கொண்டிருந்தார். ஆயினும் அவர் ஒருபோதுமே அப்பரை சந்தித்திருக்க வில்லை. அப்பர், சைவத்துக்கும், சிவபெருமானுக்கும் ஆற்றும் தொண்டுகள் குறித்து அறிந்து, அவர் மேல் பேரன்பு கொண்டிருந்தார்.

அந்த பேரபிமானத்தின் காரணமாக, தனது ஒரே மகனுக்கும், வீட்டில் இருந்த பசுவுக்கும், ‘திருநாவுக்கரசு’ என்ற பெயரையே வைத்து இருந்தார், அப்பூதி அடிகள்.

கைலாசநாதர் ஆலயத்தின் திருவிழா காலங்களில், வெகுதூரங்களில் இருந்து வரும் பக்தர்களின் களைப்பினை நீக்க, தண்ணீர் பந்தல்களையும், மடாலயங்களையும் அமைத்து தொண்டு செய்வதை வழக்கமாக வைத்திருந்தார் அப்பூதி அடிகள். அந்த பந்தல்களுக்கு, ‘திருநாவுக்கரசு தண்ணீர் பந்தல்’, திருநாவுக்கரசு மடாலயம்’ என்ற பெயர்களையே எழுதி வைத்து இருந்தார் அவர். மேலும் பக்தர்கள் குளித்து, உண்டு களைப்பாறி செல்லக் கூடியவாறு, பல வசதிகளையும் அங்கே செய்து வைத்து இருந்தார் அப்பூதி அடிகள்.

அதேவேளை, திருப்புவனம் என்னும் ஊரில் இருந்த சிவாலயத்தில் அங்கிருந்த, இறைவனை வணங்கிய அவரது மானசீக குருவாகிய அப்பர், அருகில் இருந்த திங்களூரில் இருக்கும் கைலாசநாதர் ஆலயத்தின் இறைவனை தரிசிக்க ஆவல் கொண்டார். திங்களூருக்கு, மிக நீண்ட தூரம் நடந்து சென்ற அவருக்கு, பசியும், தாகமும் எடுத்தது.

தண்ணீர் எங்கே கிடைக்கும் என்று சுற்றும், முற்றும் பார்த்த போது, அண்மையாக ஒரு தண்ணீர் பந்தல் தெரிந்தது. அருகாமையாக சென்ற போது, பல பக்தர்கள், மோர், தண்ணீர் போன்றவைகளை வாங்கி அருந்துவதை கவனித்து அருகில் சென்றார். அப்போது தான், அந்த பந்தல்களில், தனது பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதை அவதானித்தார்.

அன்றைய காலத்தில், இன்று உள்ளதை போன்றே, பந்தல்கள் அமைப்பவரின் குடும்ப பெயரில், அல்லது ஒரு வணிக நிறுவனத்தின் பெயரில் இருக்க கூடிய நிலையில், வேறு ஒருவர் பெயரில் இருப்பது குறித்து ஆச்சரியம் கொண்டு அதுகுறித்து விசாரித்த போது, அப்பூதி அடிகள், குறித்தும் அவர் தம் மீது வைத்து இருக்கும் பேரன்பு பற்றியும் அறிந்து, அவரை பார்க்க வேண்டும் என்று விரும்பினார்.

அப்பூதி அடிகள் வீடு இருக்குமிடம் குறித்து விசாரித்து, அங்கே சென்றார் அப்பர். வந்த வயதான பக்தர், அப்பர் என அறியாத அப்பூதி அடிகள் அவரை வரவேற்று உபசரித்தார்.

அவரது தண்ணீர் பந்தலுக்கு சென்ற விடயத்தினை குறிப்பிட்டு, அவரது சேவைக்கு பாராட்டு தெரிவித்த, அப்பர், அப்பூதி அடிகளிடம், அவர் எப்போதாவது அப்பரை நேரில் பார்த்தாரா என்று கேட்டார். இல்லை, ஆனால் என்றாவது அவரை காணும் பாக்கியம் கிடைக்கும் என்று நம்பி இருப்பதாக கூறினார், அப்பூதி அடிகள்.

பார்க்காத ஒருவரது பெயரை, தண்ணீர் பந்தலுக்கும், மடாலயத்தும் வைக்கும் அளவுக்கு, அந்த திருநாவுக்கரசர் தகுதியானவர்தானா? என்று பவ்வியமாக கேட்டார் அப்பர்.

வெகுண்டார் அப்பூதி அடிகள். வயதான, சிவபக்தரான தாங்கள், திருநாவுக்கரசர், குறித்தும் அவரது தொண்டுகள் குறித்தும் அறியவில்லையா?, நீங்கள் இவ்வாறு கேட்பது குறித்து, மிகுந்த வேதனை அடைகிறேன் என்றார் அப்பூதி அடிகள்.

தன்னை, வரவேற்று உபசரித்த, அப்பூதி அடிகளின் குடும்பம் எரிச்சல் அடைந்ததை உணர்ந்த, அப்பரோ, அன்பரே அப்பூதி, கோபமடையாதீர்கள், நீங்கள் எந்த திருநாவுக்கரசரின் பெயரில் உங்கள் தொண்டுகளை செய்கிறீர்களோ, அந்த எளிய மனிதன் இங்கே உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன் என்று பவ்யமாக சொன்னார் அப்பர்.

பேராச்சரியம் அடைந்த அப்பூதி அடிகளும், அவரது மனைவியும், மகன் திருநாவுக்கரசும் அவரது காலில் விழுந்து வணங்கினர். அப்பரது பாதங்களை நீரினால் கழுவி அந்த புனித நீரை, தம்மீது தெளித்துக் கொண்டனர்.

அவர்களை ஆசீர்வதித்த அப்பரை, தம்முடன் உணவு அருந்துமாறு வேண்டிக் கொண்டனர். இணங்கிய அப்பர், உணவு தயாராகும்  இடை வெளியில், தாம் கைலாசநாதர் கோவிலுக்கு சென்று இறைவனை வணங்கி, வருவதாக சொல்லி கிளம்பிச் சென்றார்.

சுவையான அறுசுவை உணவினை தயார் செய்த, அப்பூதி அடிகளின் மனைவியார், தமது மகனை அழைத்து, சிறு கத்தி ஒன்றினை கொடுத்து, வீட்டின் பின்னால் உள்ள, தோட்டத்துக்கு சென்று, அங்குள்ள வாழைமரங்களில், உணவு பரிமாறுவதற்காக, கிழியாத தலை வாழை இலைகளை, வெட்டிக் கொண்டு வருமாறு சொன்னார்.

ஆர்வத்துடன் வேகாமல் ஓடினான் சிறுவன் திருநாவுக்கரசு. ஆனால், வாழையிலை ஒன்றை வெட்டிக் கொண்டிருந்த போது, விதிவசமாக, ஒரு பாம்பு ஒன்று அவனது காலை தீண்டியது.

விசம் தலைக்கு ஏறுமுன்னர், விரைந்து ஓடிவந்த சிறுவன், வாழை இலையினை தாயிடம் கொடுத்து, நடந்ததை சொல்லி, அப்பருக்கு உணவு அளிப்பதை குழப்ப வேண்டாம் என்று சொல்லி, மயங்கி வீழ்ந்தான்.

அவன் இறந்து விட்டான் என அழுது புலம்பிய, அப்பூதி அடிகளும் , மனைவியாரும், தமது மகன் விருப்பியவரே, அப்பருக்கு உணவு அளிக்க முடிவு செய்து, சிறுவனின் உடலை ஒழித்து வைத்து விட்டு அப்பருக்காக காத்திருந்தனர்.

சிறுது நேரத்தில் அப்பரும் வந்து சேர்ந்தார். அவரை அமர வைத்து, வாழை இலையினை பரப்பி, உணவினை பரிமாற தயாரானபோது, சிறுவனையும் தம்முடன் இருந்து உண்ண வேண்டும் என்று கூறி அவரை அழைத்தார் அப்பர்.

அதுவரை அமைதியாக இருந்த தாயார், வெடித்து அழுதார். அப்பூதி அடிகள், ‘அவன் யாருக்கும் இனி உதவான்’, என்று கூறினார்.

குழம்பிய அப்பரோ, அங்கே எதுவோ நடந்துள்ளது என அறிந்து, எழுந்து கொண்டார். என்ன நடந்தது என்று கேடடார். நடந்தது அறிந்து வெகுண்டார். ‘என்னகொடுமை இது, இந்த நிலையிலும் எனக்கு உணவளிக்க எப்படி முடிவு செய்தீர்கள் என்று கேட்டுக்கொண்டே, தன்னை, சிறுவனின் உடல் இருக்கும் இடத்துக்கு அழைத்து செல்லுமாறு கூறினார்.

சிறுவனது உடலை கையில் தூக்கிக்கொண்டு, அருகில் இருந்த கைலாசநாதர் ஆலயத்துக்கு ஓடோடி சென்றார். அப்பூதி அடிகளும், அவர் மனைவியும் கூடவே ஓடி சென்றார்கள்.

கைலாயநாதர் ஆலயத்தின் மூலஸ்தானத்தின் முன் சிறுவனை வைத்துவிட்டு, இறைவனை வணங்கி பாடல்களை பாடினார். இறைவா, இது நியாயம் தானா என்று கதறினார். தான் வந்திருந்த போதா இவ்வாறு நிகழ வேண்டும் என்று நியாயம் கேட்டார்.

கருணை கொண்டு இறைவனை வேண்டி, “ஒன்றுகொலாம்,” எனத் தொடங்கித் தேவாரம் பாடினார்

ஒன்று கொ லாமவர் சிந்தை யுயர்வரை
ஒன்று கொ லாமுய ரும்மதி சூடுவர்
ஒன்று கொலாமிடு வெண்டலை கையது
ஒன்று கொலாமவ ரூர்வது தானே

இறைவன் அருளால், சிறிது நேரத்தில் சிறுவன் கண்விழித்தான். உண்மையில், அவனை தீண்டியது, அவனால் தவறுதலாக மிதிக்கப்பட்ட ஒரு விசமில்லாத பாம்பு. ஆனாலும் பயத்தின் காரணமாக அவன் மயங்கி இருந்திருக்க வேண்டும். ஆனாலும் இறைவன் அருளாலே அவன் உயிர் பிழைத்தான்.

அப்பூதி அடிகளும், அவர் மனைவியும் பெரும் மகிழ்வு அடைந்தார்கள். ஊர் மக்களும் பெரும் மகிழ்வு அடைந்தனர். அப்பர், அப்பூதி அடிகள் வீடு திரும்பி சிறுவன் திருநாவுக்கரசர் உடன் உணவு அருந்தினார். மேலும் சில நாட்கள் அங்கு தங்கி இருந்து, பின்னர் திருப்புவனம் திரும்பினார்.

திருப்புவனத்தில், அப்பூதி அடிகள் குறித்து பாடல்கள் படைத்தார். அப்பரின் பெருமைகளை பேசியே, அப்பூதி அடிகள், இறைவனின் அருள் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரியபுராணத்தில், அதனை எழுதிய சேக்கிழார், அப்பூதி அடிகளின் முழுக் குடும்பத்தினது இறை அன்பு குறித்து விபரமாக குறிப்பிட்டு அப்பூதி அடிகளை, 63 நாயன்மார்களில் ஒருவராகவும், ‘அப்பூதி அடிகள் நாயனார்’ என்றும் குறிக்கின்றார்.

Leave a Comment